ஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார் முகேஷ் அம்பானி.
உலகிலேயே மிகப்பெரிய சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக், முகேஷ் அம்பானி நடத்தும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீசின் ஒரு பிரிவான ஜியோ பிளாட்பார்ம்சின் 9.99 சதவிகித பங்குகளை வாங்கியுள்ளது. அதாவது, ஜியோ நிறுவனத்தில் 43,574 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது.
கடைசியாக வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி ஜியோ பயனாளர்களின் எண்ணிக்கை 38.8 கோடியாக உள்ளது. இந்தியாவில் 70 கோடிக்கும் அதிகமான பயனாளர்கள் பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பேஸ்புக்கின் மூன்று தளங்களையும் பயன்படுத்தி வருகின்றனர். இரு நிறுவனங்களும் இணையும்போது அதன் எண்ணிக்கை 100 கோடியைத் தொடும்.
மிகக்குறைந்த விலையில் இன்டர்நெட் சேவையை வழங்கியதன் மூலமாக இந்தியாவின் பெரும்பாலான மக்களைச் சென்றடைந்தது ஜியோ. பேஸ்புக்கின் மிகப்பெரிய சந்தையாக இருக்கும் இந்தியாவில், அதன் இருப்பை இன்னும் ஆழப்படுத்துவதற்கு இந்த முதலீடு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
பேஸ்புக் முதலீடு காரணமாக முதலீட்டின் காரணமாகப் பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு அதிகரித்தது. இதனால் நேற்று ஒரே நாளில் அம்பானியின் சொத்து மதிப்பு 4.7 பில்லியன் டாலர்கள் வரை அதிகரித்து 49.2 பில்லியன் டாலர் என்ற அளவில் உயர்ந்தது. இதன்மூலம் சீனாவின் அலிபாபா குரூப் தலைவரான ஜாக் மாவை விட 3. 2 பில்லியன் அதிக சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். உலக அளவில் பணக்காரர்கள் பட்டியலில் 17 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
**எழில்**
�,