என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் செய்ய அனுமதிக்கும் இடங்களின் அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என்றால் நேரில் ஆஜராக வேண்டும் என்று கடலூர் மாவட்ட எஸ்.பிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெய்வேலி என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ள 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிட்டத்தட்ட 10 நாட்களுக்கும் மேலாக தொழிற்சங்கத்தினரின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், தொழிற்சங்கத்தினர் நடத்திவரும் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரியும், பணிக்கு வரும் ஊழியர்களுக்கும், என்.எல்.சி. நிறுவனத்திற்கும் பாதுகாப்பு வழங்கக் கோரியும், தலைமை அலுவலகத்தை முற்றுகையிடுவதை தடுக்கக் கோரியும் என்.எல்.சி. தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
முன்னதாக இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி என்.எல்.சி அலுவலகத்திற்கு முன்பு போராட்டம் நடத்துவதற்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும், போராட்டம் நடத்துவதற்கான இடங்களை நிர்ணயித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி கடலூர் மாவட்ட எஸ்பி-க்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 8) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, என்.எல்.சி தரப்பில் போராட்டம் நடத்துவதற்கான இடங்கள் குறிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த இடங்களில் தான் தற்போது போராட்டம் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அந்த இடங்கள் குறித்த அறிக்கையை இன்று விசாரணையின் போது மாவட்ட எஸ்.பி. தாக்கல் செய்யவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி, போராட்டம் நடத்த அனுமதிக்கும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய கடலூர் மாவட்ட எஸ்.பிக்கு உத்தரவிட்டார். அறிக்கையைத் தாக்கல் செய்யாத பட்சத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று எச்சரித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
மோனிஷா
மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம்: ஆதரவும் எதிர்ப்பும்!
உம்மன் சாண்டியின் புதுப்பள்ளி உட்பட 6 மாநில இடைத்தேர்தல் அறிவிப்பு!
