என்எல்சி: போனஸ் பேச்சு வார்த்தை தோல்வி: தொடர் போராட்டம் அறிவிப்பு!

Published On:

| By christopher

என்எல்சி நிரந்தர ஊழியர்களுக்கு இணையாக ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் போனஸ் வழங்கக் கோரி புதுச்சேரியில் உதவி ஆணையர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதையடுத்து, ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொடர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பணிபுரியும் நிரந்தர ஊழியர்களுக்கு ரூ.1.50 லட்சம் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சொசைட்டி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 8.33 சதவிகிதம் என்ற அடிப்படையில் ஒரு மாத சம்பளமான ரூ.20,908 போனஸ் வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது. அதை சொசைட்டி ஒப்பந்த தொழிலாளர்கள் ஏற்க மறுத்துள்ளனர். மேலும், நிரந்தர தொழிலாளர்கள் செய்யும் வேலையை தாங்களும் செய்வதால் அவர்களுக்கு வழங்கப்படுவது போல் தங்களுக்கும் ரூ.1.50 லட்சம் போனஸ் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக சென்னையில் உள்ள மத்திய தொழிலாளர் துறை துணை ஆணையரிடம் அவர்கள் மனு அளித்தனர். அதன் அடிப்படையில், புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள மத்திய தொழிலாளர் துறையின் உதவி ஆணையர் அலுவலகத்தில் போனஸ் தொடர்பான முதற்கட்ட பேச்சு வார்த்தை நடந்தது. ஆனால், இன்றைய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் தோல்வி அடைந்தது.

இதுகுறித்து பேசியுள்ள சிஐடியு பொது ஒப்பந்த தொழிலாளர் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் அமிர்தலிங்கம், ”என்எல்சி நிறுவனத்தில் பணிபுரியும் நிரந்தர ஊழியர்களுக்கு போனஸ் ரூ.1.50 லட்சம் வழங்கப்படுகிறது. இதே போனஸ் தொகையை சொசைட்டி ஒப்பந்த ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்று மத்திய தொழிலாளர் துணை ஆணையரிடம் தொழில் தாவா எழுப்பப்பட்டது. இந்த தொழில் தாவா புதுச்சேரியில் உள்ள மத்திய தொழிலாளர் துறை உதவி ஆணையருக்கு மாறப்பட்டது.

இதைத்தொடர்ந்து, உதவி ஆணையர் தலைமையில் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் எந்த உடன்பாடும் எற்படவில்லை. இதனால் மறு தேதி குறிப்பிடாமல் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எங்களது கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 17-ம் தேதி மாலை 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும். எங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் போராட்டம் நடத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராஜ்

டாப் 10 நியூஸ் : கனமழை எச்சரிக்கை முதல் நாடு தழுவிய மருத்துவர்கள் போராட்டம் வரை!

பியூட்டி டிப்ஸ்: முடி உதிர்வைத் தடுக்கும் உணவுகள் இதோ…

ஹெல்த் டிப்ஸ்: தினமும் பிரெட் சாப்பிடுபவரா நீங்கள்… உடல் எடை அதிகரிக்கலாம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share