டிஜிட்டல் திண்ணை: ‘இடைத் தேர்தல் ஜெயிக்கலைனா உள்ளாட்சித் தேர்தல் நடக்காது’ – எடப்பாடி எச்சரிக்கை!

Published On:

| By Balaji

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ் அப் ஆன் லைனில் தயாராக இருந்தது. அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த இடைத் தேர்தல் நேர்காணல் பற்றிய சில போட்டோக்களை அனுப்பிவிட்டு அடுத்ததாக செய்தியை அனுப்பியிருந்தது வாட்ஸ் அப்.

“நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலுக்கான விருப்ப மனுவை ஞாயிற்றுக்கிழமையிலிருந்து விநியோகிக்க தொடங்கிவிட்டது அதிமுக. செப்டம்பர் 23ஆம் தேதி திங்கட்கிழமை மாலை மூன்று மணி வரை விருப்ப மனு வாங்கப்படும் என்றும் அதன்பின் மாலை நேர்காணல் நடத்தப்படும் என்றும் தலைமைக் கழகத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்கள். இந்த நிலையில் அதிமுகவில் வழக்கத்துக்கு மாறாக விருப்ப மனு வாங்குவோரின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாக இருந்ததை எண்ணி எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

ADVERTISEMENT

ஞாயிறு கடந்து திங்கட்கிழமை மதியம் வரை இரண்டு தொகுதிகளுக்கும் சேர்த்து சுமார் ஐம்பது விருப்ப மனுக்களே தாக்கல் செய்யப்பட்டிருந்தன. ஆளுங்கட்சியில இவ்வளவுதான் விருப்ப மனுன்னா கேவலமா போயிடும் என்று நினைத்த சில அமைச்சர்கள் தங்களின் ஆதரவாளர்கள் சிலரை வைத்து உடனடியாக விருப்ப மனுக்களைக் கொடுக்க வைத்து அப்படியும் 90 மனுக்களே இரு தொகுதிகளுக்கும் சேர்த்து பெறப்பட்டன.

ஜெயலலிதா இருக்கும்போது திருப்பரங்குன்றம் தொகுதிக்காக மட்டுமே சுமார் 170 விருப்ப மனுக்கள் கொடுக்கப்பட்டன. கடந்த முறை மக்களவைத் தேர்தல் நடந்த மெகா இடைத் தேர்தலுக்குக் கணிசமான அளவு விருப்ப மனுக்கள் குவிந்தன. ஆனால், இந்த இரண்டு தொகுதி இடைத்தேர்தலுக்கும் அதிமுகவின் சார்பில் மிக மிக சொற்பமானவர்களே போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்து விருப்ப மனுக்களைக் கொடுத்துள்ளனர் என்பதுதான் அதிமுக தலைமைக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியமாக இருக்கிறது.

ADVERTISEMENT

விக்கிரவாண்டி தொகுதியில் அமைச்சர் சி.வி.சண்முகம் யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் வேட்பாளர் என்பது அங்குள்ள அதிமுகக்காரர்கள் வீட்டு கன்றுக்குட்டிக்குக் கூட தெரியும். அதேபோல நாங்குநேரியில் போட்டியிடுவதற்கு பாஜக கடுமையாக முயற்சி செய்கிறது என்ற தகவலும் அதிமுகவினர் மத்தியில் ஆர்வத்தைக் குறைத்து விட்டது.

ADVERTISEMENT

கடந்த மக்களவைத் தேர்தலின்போது தூத்துக்குடி தொகுதியைச் சேர்ந்த அத்தனை நிர்வாகிகளும், விருப்ப மனு அளித்தவர்களும் அதிமுக தலைமைக் கழகத்திற்கு வந்து இந்தத் தொகுதியை பாஜகவுக்குக் கொடுத்து விடாதீர்கள் என்று ஒட்டுமொத்தமாக அப்போது எடப்பாடி பழனிசாமியிடமும் பன்னீர்செல்வத்திடமும் மாறி மாறி கேட்டார்கள். எல்லாவற்றையும் நன்றாகக் கேட்டுக்கொண்டு கடைசியில் தூத்துக்குடி தொகுதியை பாஜகவிடம் கொடுத்தது. இப்போது நாங்குநேரியை பாஜகவிடம் தூக்கி கொடுக்க மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? அதனால்தான் நாங்குநேரி தொகுதியில் பெரிய அளவுக்கு யாரும் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை என்றார் அதிமுகவின் தென்மாவட்டத்தைச் சேர்ந்த அந்தப் பிரமுகர். தவிர இந்த எம்.எல்.ஏ. தேர்தலில் ஜெயிப்பது எடப்பாடிக்கு வேண்டுமானால் இமேஜ் பிரச்சினையாக இருக்கலாம். ஆனால், இதில் ஜெயிக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு மிஞ்சிப் போனால் ஒரு வருஷம்தான் பதவிக்காலம், அதுக்காக எவ்வளவு செலவு பண்ணுவது என்ற எண்ணமும் அதிமுகவினரிடையே ஏற்பட்டிருக்கிறது.

நேற்று மாலை 5 மணி அளவில் எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் அதிமுக தலைமைக் கழகத்துக்கு வந்தபோது வழக்கம் போல நூற்றுக்கணக்கானோர் கூடி கோஷங்கள் எழுப்பி வரவேற்பளித்தனர். உள்ளே சென்று ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்களோடு சிறிது நேரம் கலந்து ஆலோசித்தனர் இருவரும். விருப்ப மனு கொடுத்தவர்கள் எண்ணிக்கை 90 பேருக்கும் குறைவுதான் என்று இருவருக்கும் தகவல் சொல்லப்பட்டது. இதிலேயே பாதி ஆப்செட் ஆகிவிட்ட எடப்பாடி விருப்ப மனுக்களை 90 பேரிலும் சுமார் 20 பேருக்கு மட்டுமே நேர்காணலை நடத்தி இருக்கிறார்.

நேர்காணலுக்குப் பிறகு அதே வளாகத்தில் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘இந்த இரண்டு தொகுதி இடைத் தேர்தலில் நாம ஜெயித்தால்தான் நாம உள்ளாட்சித் தேர்தலை பாசிட்டிவாக எனர்ஜியாக எதிர்கொள்ள முடியும். இரண்டு தொகுதிகளையும் அதிமுக ஜெயிக்கணும். அப்படி இல்லைனா உள்ளாட்சித் தேர்தல் நடத்தி நமக்கு எந்த பயனும் இருக்காது. இடைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றுவிட்டால் அந்த உற்சாகத்துலயே அவர்கள் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி விடுவார்கள். அதனால் இப்போதே அனைத்து மாவட்டச் செயலாளர்களிடமும் அமைச்சர்களிடமும் உள்ளாட்சித் தேர்தல் நடக்கணும்னா இந்த இரண்டு தொகுதிகளையும் நாம வெற்றி பெறணும்னு தெளிவாக சொல்லிடுங்க. மிச்சத்தை நாளை எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பேசிக்கலாம்’ என்று சொல்லியிருக்கிறார் எடப்பாடி.

இன்று செப்டம்பர் 24 மாலை அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இதில் நாங்குநேரி பாஜகவுக்கா என்பது தெரியவரும். அதன் பிறகு அதிமுகவினரின் தேர்தல் பணிகள் வேகம் பிடிக்குமா என்பதும் தெரியவரும் என்கிறார்கள் அதிமுக நிர்வாகிகள்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share