ப.இளவழகன்
கோவிட்-19 தாக்கத்தால் தொழில் நிறுவனங்கள் மிகப் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. மத்திய அரசின் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டு ஊசலாடிக்கொண்டிருந்த பல சிறு / குறு நிறுவனங்கள், மேலும் பாதிப்புக்குள்ளாகி செய்வதறியாது திகைத்துக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே தொழிலாளர் நலச் சட்டங்களை நீர்த்துப் போக முயற்சி மேற்கொண்ட அரசுக்கு, கோவிட்-19 ஒரு நல்ல வாய்ப்பை வழங்கியுள்ளது. மேலும், ஏதோ கோவிட்-19 ஏற்படுத்திய தாக்கத்தால் மட்டும்தான் இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது போலவும், அதைச் சீர்செய்ய அரசு முனைப்போடு செயல்படுவது போலவும் ஒரு பிம்பத்தை உருவாக்கும் முயற்சி நடக்கிறது. இதன் விளைவாக, தற்போதுள்ள தொழிலாளர் நலச் சட்டங்களை தொழில் நலன் கருதி, சீர்திருத்தம் என்ற பெயரில் தளர்த்த அல்லது திருத்த மத்திய / மாநில அரசுகள் முயன்று வருகின்றன.
சீர்திருத்தம் என்கிற சுரண்டல்
உத்தரப் பிரதேச மாநிலத்தில், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குக் கிட்டத்தட்ட 30 தொழிலாளர்கள் நலச் சட்டங்களை நிறுத்தி வைக்க அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களும் சட்டங்களை நிறுத்தி வைக்கும் / தளர்த்தும் முடிவில் இருக்கின்றன.
12 மணி நேரம் வேலை என்பது தொழிலாளர்கள் நலனுக்கு விரோதமானது என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல், வேலை நேரத்தை உயர்த்தி இருப்பது வருத்தத்துக்கும், கண்டனத்துக்கும் உரியது. உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் கூடுதல் வேலை நேரத்துக்கு (Over Time) ஊதியம் கொடுக்கத் தேவையில்லை என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்கள். சீர்திருத்தம் என்ற பெயரில் தொழிலாளர்களை எவ்வளவு வேண்டுமானாலும் சுரண்டிக் கொள்ளலாம் என்று அரசு சொல்லுவது மிகவும் அபத்தமானது
உலக ஒப்பந்தத்தை மீறும் இந்தியா
எட்டு மணி நேர வேலை என்பது தொழிலாளர்கள் தங்கள் உயிரைத் துறந்து, உதிரம் சிந்தி போராடிப் பெற்ற உரிமை. இதுவரை தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை எதேச்சதிகாரத்துடன் மறுக்க முயற்சி செய்வது நியாயமற்ற செயல். தொழிலாளர்களை அடிமைகளாக மாற்றச் செய்யப்படும் சட்டத் திருத்தங்கள் மிகவும் பிற்போக்குத்தனமானவை மற்றும் ஆபத்தானவை. வளர்ந்த நாடுகள் விநியோகச் சங்கிலியில் (Supply Chain) உள்ள தொழிலாளர்களை சுரண்டும் போக்கையும், அடிமைகளாக நடத்தும் நிலைமையையும் மாற்றச் சட்டங்கள் இயற்றி வருகின்றன. அதற்கு நேர்மாறாக இந்தியா செயல்படுவது அவமானத்துக்குரியது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் உறுப்பு நாடான இந்தியா ILOஇன் உடன்படிக்கை எண் 144–ஐ, 1978ஆம் ஆண்டு ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த உடன்படிக்கையின்படி, தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்துவதற்கு முன்பு முத்தரப்பு ஆலோசனை நடத்த வேண்டும். ஆனால் எந்தவித ஆலோசனையும் நடத்தாமல் சட்டத் திருத்தங்கள் கொண்டுவருவது உடன்படிக்கைக்கு எதிரானதாகும்.
இந்தியாவில் தொழிற்சங்கங்கள், தொழிலாளர் அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சிகள் எனப் பலரும் இந்த சீரழிவு தரும் சீர்திருத்தங்களை எதிர்த்தாலும் வழக்கம்போல் அவர்களுடைய எதிர்ப்புக் குரலை, அரசு காதில் வாங்கிக் கொள்ளவில்லை; அவற்றைப் பொருட்படுத்தியதாகவும் தெரியவில்லை.
சர்வதேச தொழிலாளர் அமைப்பு அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சர்வதேச உடன்படிக்கைகளை மீறக் கூடாது எனவும், தளர்வும் சட்டத் திருத்தங்களும் சர்வதேச தர கோட்பாடுகளை பாதிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி இருந்தது. மேலும் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் போன்ற அமைப்புகளை கலந்தாலோசித்து, பிறகு முடிவு செய்ய வேண்டும் என்பதையும் குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச சமூகத்தின் அழுத்தம்
தற்போது சீர்திருத்த சீரழிவுகள் உலக அரங்கில் வெளிச்சத்துக்கு வந்து, தொழிலாளர்கள் உரிமைகளை பாதிக்கும் இதுபோன்ற நடவடிக்கைகளைச் செயல்படுத்த வேண்டாம் என்ற கருத்தை வலியுறுத்தி, இந்தியாவில் உற்பத்தி பொருட்களை வாங்கும் நிறுவனங்கள் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளன.
குறிப்பாக, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சார்ந்த முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பிராண்டுகள் மற்றும் விற்பனையாளர்களின் பிரதிநிதிகளான, ஃபேர் லேபர் அசோசியேசன் (Fair Labor Association), அம்ஃபோரி (Amfori), ஃபேர் வேர் (Fair Wear), அமெரிக்கன் அப்பேரல் அண்டு ஃபுட்வேர் அசோசியேசன் (American Apparel & Footwear Association – AAFA), சாய் (Social Accountability International – SAI) மற்றும் ICS போன்ற அமைப்புகள் கூட்டாக, பிரதமருக்கும் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கும், ஜூன் மாதம் 9ஆம் தேதி கடிதம் எழுதி உள்ளார்கள்.
இந்த அமைப்புகள், ஆண்டுதோறும் 9 பில்லியன் டாலர்களுக்கு ஆடைகள், காலணிகள் மற்றும் இந்தியாவிலுள்ள பிற தொழில்களுக்கும் பரவலாக ஆர்டர் செய்து வியாபாரம் செய்வதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும் இவர்கள் தொழிலாளர்களின் உரிமைகள் மதிக்கப்படும் நாடுகளிலிருந்து உற்பத்தி பொருட்கள் பெற உறுதியளித்துள்ளதையும் குறிப்பிட்டு, தற்போது இந்திய முதலாளிகளுக்கு கோவிட்-19, நோய்த்தொற்று தாக்கத்தின் விளைவாக ஏற்பட்ட பொருளாதார இழப்புகளைச் சமாளிக்கவும் முதலீட்டை அதிகரிக்கவும் முடியும் என்று வாதிட்டு, சில மாநில அரசுகள் தொழிலாளர் நலச்சட்டங்களைத் தளர்த்த அல்லது நிறுத்திவைக்க முடிவு செய்துள்ளன. அந்த மாநிலங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு இது கடுமையான விளைவை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற தொழிலாளர் உரிமைகளைப் பாதிக்கும் மாற்றங்கள், உலக வங்கியின் வணிக குறியீட்டில் (Ease of Doing Business Index) இந்தியாவில் தரவரிசையைப் பாதிக்கும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்கள். மேலும் ILOஇன் வேலை நேரம் தொடர்பான உடன்படிக்கை-001, தொழிலாளர் ஆய்வுகள் தொடர்பான உடன்படிக்கை–081, சங்கம் அமைக்கும் சுதந்திரம் மற்றும் கூட்டு பேரம் சார்ந்த உடன்படிக்கை-087 & 098 மற்றும் முத்தரப்பு பேச்சுவார்த்தை சார்ந்த உடன்படிக்கை 144 போன்றவை மீறப்படலாம் என்று கவலை தெரிவித்துள்ளனர்.
இந்தச் சூழலில் தற்போது மாநில அரசுகளால் செய்யப்படும் மாற்றங்கள் தொழிலாளர் உரிமையையும் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் பாதிக்கும் என்பதால் மூன்று கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்கள்.
மூன்று கோரிக்கைகள்
முதலாவதாக மாநில அரசுகள் கொண்டு வந்த திருத்தங்களை / கட்டுப்பாடுகளைச் செயல்படுத்தாமல் இருப்பதை உறுதிசெய்வது. இரண்டாவதாக, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை தொழிற்சங்கங்கள் உட்பட மற்ற பங்காளர்களையும் கலந்தாய்வு செய்து மாற்றங்கள் செய்ய உற்சாகப்படுத்துவது.
இறுதியாக, ILOஇன் எட்டு அடிப்படை உடன்படிக்கைகள் இந்தியாவில் செயல்படுத்துவதை உறுதி செய்வது போன்ற விஷயங்களை மத்திய அரசு உடனடியாக செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்கள்.
இந்தத் தருணத்தில், இந்திய அரசு சர்வதேச சமூகத்தின் கோரிக்கைகளைக் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். பிடிவாதமாக இந்தச் சீரழிவு சீர்திருத்தங்களைச் செயல்படுத்த அரசு முற்படுமானால் ஏற்றுமதி வர்த்தகத்தில் மிகப்பெரிய சரிவை சந்திக்க நேரிடும். தற்போது உலக வங்கி எளிதாக வணிகம் செய்யும் நாடுகளில் குறியீடுகளின் (Ease of Doing Business Index) அடிப்படையில் இந்தியா 63ஆம் இடத்தில் இருக்கிறது. தெற்காசியாவில் முதலிடத்தில் உள்ளது. இந்த குறியீட்டில் சரிவைச் சந்திக்க நேரிடும். விநியோகச் சங்கிலியில் சுரண்டலைத் தவிர்க்க உறுதி ஏற்றுள்ள நிறுவனங்கள், கடுமையான உழைப்பு சுரண்டல் மற்றும் தொழிலாளர்கள் உரிமைக்கு எதிரான போக்கால், வேறு வழியின்றி வணிகத்தை வேறு நாடுகளுக்கு மாற்றத் தள்ளப்படுவார்கள். இதனால், வெளிநாட்டு நிறுவனங்களின் ஆர்டர்களைப் பெருமளவில் இழக்க நேரிடலாம். இது உற்பத்தித் தொழில்களை பெருமளவு பாதித்து மீண்டும் பொருளாதாரச் சரிவை ஏற்படுத்தும்.
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்
என்பது வள்ளுவர் வாக்கு. தற்போது செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டி சரி செய்ய, இந்த அமைப்புகள் கொடுத்துள்ள கோரிக்கைகளை, எச்சரிக்கையாகக் கருதி அரசு செயல்பட வேண்டும். இல்லாவிட்டால், அந்நியச் செலாவணியை பெருமளவில் இழக்க வேண்டிய சூழல் உருவாக நேரிடலாம். தொழிலாளர் உரிமைகளுக்கு சமாதி எழுப்பி தொழிற்சாலை அமைத்து நாட்டை வளமாக்கலாம் என்ற தவறான, பிற்போக்குத்தனமான எண்ணத்தைக் கைவிட்டு உடனடியாக, இம்மாநில அரசுகளுக்குத் தொழிலாளர் நலச் சட்டங்களை தளர்த்துவதற்குத் தடை விதிக்க வேண்டும். மேலும் இந்தியா ஏற்றுக்கொண்டுள்ள சர்வதேச உடன்படிக்கைகளைக் கருத்தில்கொண்டு தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டுவர முயற்சி செய்ய வேண்டும்.