ஆரம்பப்பள்ளி என்பது வெறும் கட்டடங்கள் கட்டுவது அல்ல என்பதை இந்தியா உணரவேண்டிய காலமிது – அஞ்சலி மோடி

Published On:

| By Balaji

டெல்லியில் இது பள்ளிகள் திறக்கும் காலம். அண்மையில், 8 வயதையடைந்த எஸ்தர் தற்போது, 3ம் வகுப்பில் அடியெடுத்து வைத்திருக்கிறாள். 2ம் வகுப்பின் ரிப்போர்ட் கார்டில் எஸ்தரின் படிப்புகுறித்து அவளது ஆசிரியர் “மிகச் சிறப்பு” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வாரம் பள்ளியிலிருந்து திரும்பிய எஸ்தர், தன்னுடைய புத்தம்புது பிங்க்நிற ஸ்கூல் பேக்கிலிருந்து புதிய புத்தகங்களை எடுத்து என்னிடம் மகிழ்வுடன் காட்டினாள். நான், அதில் ஹிந்தி புத்தகத்தை எடுத்து hindi என்ற வார்த்தையை சுட்டிக்காட்டி இது என்ன? என்று கேட்டேன். அவளோ, அதில் d என்ற எழுத்தை சுட்டிக்காட்டி ‘டாஹா நஹின் ஹா டா’ என்று ஏதேதோ சொன்னாள். அவளுக்கு ரொம்பவும் குறைவாகவே பிடித்த பாடம் ஹிந்தி. அவளது ரிப்போர்ட் கார்டின்படி, 60 முதல் 70 சதவிகிதம்வரையே அவள் ஹிந்தியில் மதிப்பெண் எடுக்கிறாள். அதேநேரம், ஆங்கிலத்திலோ 80 முதல் 90 சதவிகிதம்வரை மதிப்பெண் எடுக்கிறாள். காரணம், அவள் படிப்பது ஆங்கிலவழிக் கல்வியில் என்பதால்.

ADVERTISEMENT

அர்த்தம் புரிகிறதோ இல்லையோ, எஸ்தரால் fox என்ற வார்த்தையை படிக்கவும், எழுதவும் முடியும். ஆனால், அவளால் fix என்ற வார்த்தையைப் படிக்கமுடியாது. அவளுக்கு ஹிந்தி அல்லது நேபாளத்தில் கதைகள் கேட்பது ரொம்பப் பிடிக்கும். ஆனால், அதையே நான் ஆங்கிலத்தில் படித்துக்காட்டினால் அவள் எழுந்து விளையாடப் போய்விடுவாள். அவளது பாடப் புத்தகத்தில் உள்ள சின்னச்சின்ன வார்த்தைகளையே அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், அவளது ஆசிரியரின் மதிப்பீடோ “மிகச் சிறப்பு”.

எஸ்தரின் புத்திக்கூர்மை அவளது ஒளிவீசும் கண்களையும், வயது வந்தவர்களிடம் அவள் செய்யும் ஜாலியான சேட்டைகளையும் கவனித்தாலே விளங்கிவிடும். இந்த இரண்டு வருடங்களில் அவளுக்குத் தெரியாத (அவளது குடும்பத்திலும் ஒருவருக்கும் தெரியாத) ஒரு மொழியில், டஜன்கணக்கான வார்த்தைகளை தொடர்ச்சியாக மண்டைக்குள் ஏற்றிக்கொண்டு, கேள்விகளுக்குச் சரியான பதிலை எழுதுகிறாள். இதுதான் அவளது கல்வித் திறனுக்கான மதிப்பீடு.

ADVERTISEMENT

இந்தியாவின் பள்ளிக்கல்வி நிலைகுறித்து அறிந்தவர்களுக்கு எஸ்தரின் கதை, இந்தியா முழுவதுமுள்ள அரசு ஆரம்பப் பள்ளி மற்றும் மலிவான தனியார் பள்ளிகளில் கல்வி பயிலும் அனைவரது கதை என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ப்ரதம் என்ற என்.ஜி.ஓ., குழந்தைகளின் கற்கும் அளவுகுறித்து நடத்தும் வருடாந்திர கல்வித்தர ஆய்வு (ASER) ஒன்றை நடத்திவருகிறது. இதேபோன்று, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கல்வித்துறை ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (NCERT) ஆய்வு ஒன்றை மேற்கொள்கிறது. இந்த இரண்டு ஆய்வு முடிவுகளிலுமே பள்ளிக் குழந்தைகளிடம் குறைவான கற்கும்திறனே உள்ளது என்பது நிரூபணமாகியுள்ளது. இருப்பினும், இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் இதுகுறித்த கொள்கைகளில் குழந்தைகளின் கற்கும்திறன் மேம்பாட்டுக்காக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

மத்திய மற்றும் மாநில கல்வித்துறை நிர்வாக அமைப்புகளின் கவனம் குழந்தைகளை பள்ளிக்குக் கொண்டுவருவதாகவே இருக்கும். கல்விபெறும் உரிமைச் சட்டம், குழந்தைகளின் ஆரம்பக் கல்விக்கான உத்தரவாதத்தை வழங்குவது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், சட்டம் இதேபோன்று தரமான கல்வி அல்லது குறைந்தபட்சக் கல்விக்கான உத்தரவாதத்தை வழங்குவதில்தான் தோற்றுப்போகிறது. இதிலிருந்துதான் அரசின் கவனம், பள்ளிகள் அமைந்திருக்கும் இடங்கள், கழிவறைகள், பெஞ்சுகள், ஆசிரியரின் எண்ணிக்கைகள் ஆகியவை குறித்ததாக மாறுகிறது. உண்மையில், இது ஒரு சாதாரண கணக்காளரால் பராமரிக்கக்கூடியது.

ADVERTISEMENT

குழந்தைகளுக்கு கல்வி பயிற்றுவிப்பது மற்றும் குழந்தைகள் கல்வி கற்பதை மேம்படுத்துவதுகுறித்து யாரும் கவனம் கொள்ளவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்தச் சட்டத்துக்கு முதன்மையான மதிப்பளித்து கற்பித்தல்முறை தொடர்பாக ஓரளவுக்கு முழுமையான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது. இருந்தபோதும், உண்மையான மாற்றம் ஏதும் நிகழவில்லை. சிறிதளவுகூட இந்த மாற்றம் நிகழாததற்குக் காரணம் இதற்கான ஆசிரியர்கள் தேவைக்கும் குறைவான அளவில் இருப்பதே ஆகும். இதனால், தனியார் பள்ளிகளில் மிகப்பெரும் போட்டி நிலவுகிறது. இது, எஸ்தரை போன்று எதுவும் தெரியாமலே தேர்வில் மிகச் சிறப்பாக மதிப்பெண் வாங்கும் உயர்ந்த சாதனையாளர்களை உற்பத்தி செய்கிறது. இதற்காக, எஸ்தரின் பெற்றொர் அவள் படிக்கும் தனியார் பள்ளிக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் கொடுக்கின்றனர். இது இல்லாமல், டியூசன் கட்டணம் வேறு.

கடந்த மாதம் கல்வி மற்றும் சுகாதாரக் குழுவினர் (இவர்கள் கடந்த ஆண்டு பிரதமர் அலுவலகத்தால் நியமிக்கப்பட்ட UNIQUE– unique national initiative for quality and univercel education என்ற குழுவைச் சேர்ந்தவர்கள்). ஆசிரியர் நியமனம் மற்றும் பயிற்சிக்காக மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டை 3.8 சதவிகிதத்திலிருந்து 6 சதவிகிதமாக உயர்த்தக் கோரியுள்ளது. மத்திய அரசு பாதுகாப்புத் துறைகளுக்கான செலவு அல்லது மத்திய பாதுகாப்புப் படை வீரர்களுக்கான செலவைக் குறைக்கவோ அல்லது வரிகளை உயர்த்தவோ செய்தாலே தவிர, இதற்கான கூடுதல் நிதியைப் பெறுவதென்பது கடினமான ஒன்று.

நம் அனைவரையும் கவலைப்படுத்தக்கூடிய கேள்வி என்னவென்றால், பெருந்திரள் கல்வியில் இந்த மோசடி மிக நீண்டகாலமாக நிலைத்திருப்பதில் நம்முடைய பங்கு என்ன?

ஏன், நாம் அனைத்து மாநிலங்களிலும் உள்ள அரசுகளையோ, உள்ளூர் அமைப்புகளையோ, ஆசிரியர் பயிற்சி மையங்களையோ நமது இளம் இந்தியர்களின் அரசியலமைப்பின் வேண்டுகோளை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்துவிட்டதற்காக பொறுப்பாக்கக் கூடாது? இந்த இளம் இந்தியர்கள் நம்முடைய குழந்தைகளாக இல்லாமல் இருப்பதற்கு ஏதேனும் வாய்ப்பிருக்கிறதா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share