இஸ்லாமிய மருத்துவரின் ஹிஜாப்பை இழுத்த நிதிஷ் குமார்.. எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்

Published On:

| By Pandeeswari Gurusamy

இஸ்லாமிய மருத்துவரின் ஹிஜாப்பை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அகற்ற முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நிதிஷ் குமாரின் இந்த நடவடிக்கைக்கு ஆர்ஜேடி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

பீகாரில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. பத்தாவது முறையாக நிதிஷ்குமார் முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில் அவர் பாட்னாவில் முதல்வரின் செயலகமான சம்வாத் பகுதியில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் திங்களன்று கலந்து கொண்டார்.

ADVERTISEMENT

அப்போது புதிதாக நியமிக்கப்பட்ட ஆயுஷ் மருத்துவர்களுக்கு பணி நியமன கடிதங்களை முதல்வர் நிதிஷ் குமார் வழங்கினார். நுஸ்ரத் பர்வீன் என்ற இஸ்லாமிய பெண் மருத்துவர் தனது பணி நியமன கடிதத்தை பெற வந்த போது அவர் அணிந்திருந்த ஹிஜாப்பை முதல்வர் நிதிஷ் குமார் அகற்ற முயன்றார். இது என்ன என்று கேட்டு விட்டு, அவர் அதை அகற்ற முயன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

74 வயதான முதல்வர் நிதிஷ் குமாரின் நடவடிக்கைக்கு காங்கிரஸ், ஆர்ஜேடி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி இந்த சம்பவம் குறித்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து நிதிஷ் ஜிக்கு என்ன ஆச்சு? அவரது மனநிலை முற்றிலும் மோசம் அடைந்து விட்டதா- அல்லது நிதிஷ் பாபு இப்போது 100 சதவிகிதம் சங்கியாகி விட்டாரா ?” என்று கேள்வி எழுப்பி உள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி, ” இந்த அருவருப்பான, வெட்கக்கேடான செயலை பாருங்கள். ஒரு பெண் மருத்துவர் தனது பணி நியமன கடிதத்தை பெற வந்த போது நிதிஷ் குமார் அவரது ஹிஜாபை இழுத்தார். மாநிலத்தில் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் ஒரு நபர் பொதுவெளியில் இப்படி ஒரு வெட்கக்கேடான செயலை செய்தால் பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருப்பார்கள். அவர் ராஜினாமா செய்ய வேண்டும். இந்த வகையான தவறான நடத்தை மன்னிப்புக்கு தகுதியற்றது என தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share