டெல்லியில் உள்ள பிரதமர் மோடி இல்லத்தில் இன்று (ஜூன் 5) பிற்பகல் என்.டி.ஏ. கூட்டணி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பிகார் முதல்வர் நிதிஷ் குமார், ஆந்திராவில் மீண்டும் ஆட்சி அமைத்துள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி,
மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி அருகில், புதிய அரசாங்கத்தை அமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் இரண்டு கிங்மேக்கர்களான சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.
ஒட்டுமொத்த நாடே இவர்கள் யாருக்கு ஆதரவளிப்பார்கள் என்று உற்று நோக்கியிருந்த நிலையில், நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடுவும் என்.டி.ஏ கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் கொடுத்துள்ளனர்.
அதேசமயம், சந்திரபாபு நாயுடு சபாநாயகர் பதவி உள்ளிட்ட சில நிபந்தனைகளை விதித்ததாகவும் , நிதிஷ் குமார் 3 மத்திய அமைச்சர்கள் 2 இணை அமைச்சர்கள் பதவி கேட்டதாகவும், லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான் 1 கேபினட் சீட், 1 இணை அமைச்சர் பதவி கேட்டதாகவும் தகவல்கள் வருகின்றன.
இதனிடையே தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக ஒரு மனதாக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார். கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உள்ள நிலையில் பிரதமர் மோடி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கூட்டணி ஆட்சி அமைக்க ஜூன் 7 ஆம் தேதி குடியரசுத் தலைவரை என்.டி.ஏ தலைவர்கள் சந்திக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இன்றைய கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடுவிடம் என்டிஏ கூட்டணியில் அங்கம் வகிக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர், “ உங்களுக்கு ஏன் இந்த சந்தேகம். இன்றைய கூட்டம் நல்லபடியாக முடிந்தது” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
சிஎஸ்கேவில் அஸ்வின்.. பெரிய பதவி கொடுத்த நிர்வாகம்!
“நாம் தமிழர் கட்சியை பாராட்டுகிறேன்” – காரணம் சொன்ன அண்ணாமலை