நித்யானந்தா ஆஜராக மறுப்பு : மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் அதிரடி!

Published On:

| By christopher

Nithyananda's refusal to appear: Court action by dismissing the petition!

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள மடங்களுக்கு தக்கார் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், காணொளிக் காட்சி மூலம் நித்யானந்தா ஆஜராக மறுப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து வழக்கு இன்று (செப்டம்பர் 4) தள்ளுபடி செய்யப்பட்டது.

நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் உள்ள வேதாரண்யம் ஸ்ரீ சாதுக்கள் மடம், ஸ்ரீ அருணாசல ஞானதேசிக சுவாமிகள் மடம், ஸ்ரீ பால்சாமி சங்கரசாமி மடம், ஸ்ரீ சோமநாத சுவாமி கோவில் மடம் ஆகிய நான்கு மடங்களின் மடாதிபதியாக நித்யானந்தாவை நியமித்து மடாதிபதி ஆத்மானந்தா அறிவித்திருந்தார்.

இந்நிலையில், பக்தர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், நான்கு மடங்களையும் நிர்வகிக்க, தக்காரை நியமித்து தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து, நித்யானந்தா தரப்பில் அவரது அதிகாரம் பெற்ற நித்யா கோபிகா ஆனந்த் என்ற உமாதேவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி தண்டபாணி முன்பு இன்று  விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, உமாதேவிக்கு வழங்கப்பட்டுள்ள பொது அதிகார பத்திரத்தின் மீது சந்தேகம் உள்ளதால், நித்யானந்தாவிடம் விசாரணை நடத்த வேண்டும். அவரை ஆஜராக சொல்லும்படி, மனுதாரர் தரப்பு வழக்கறிஞரிடம் கூறினார்.

இதற்கு பதில் அளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ”நித்தியானந்தா இந்தியாவில் இல்லை, மேலும் அவர் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியும் அல்ல” என்றார்.

உடனே நீதிபதி, நித்யானந்தா எங்கு இருக்கிறார் என தெரிய வேண்டும். காணொளிக் காட்சி மூலம் அவரை ஆஜராக சொல்லலாம் எனத் தெரிவித்தார்.

அதற்கு மனுதாரர் தரப்பில், ”அவர் ஆஜராக இயலாது” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ”மடங்களை நிர்வகிக்க தக்கார் நியமித்து அரசு பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது” எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி தண்டபாணி உத்தரவிட்டார்.

மேலும் அவர், ”நித்யானந்தாவின் ஆன்மீக உரைகள் சிறப்பானவை, அவரது கதவைத் திற காற்று வரட்டும் என்ற தொடரில் ஆழ்ந்த அர்த்தங்கள் உள்ளதாகவும், காஞ்சி பெரியவர் கூறியது போல, சன்னியாசி, சன்னியாசியாக இருக்க வேண்டும்” எனவும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

வெள்ளத்தில் மிதக்கும் ஆந்திரா, தெலுங்கானா : நன்கொடை வாரி வழங்கிய முன்னணி நடிகர்கள்!

மாரிசெல்வராஜை திணறடித்த ‘மலை நாட்டுக்காரி’ … யார் இந்த வைரல் கேர்ள் நிவிதா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share