எங்கு இருக்கிறார் நித்தி? ஈகுவாடரிலா? இமயமலையிலா?

Published On:

| By Balaji

நித்யானந்தா ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தனது மகள்களை மீட்டுத்தர வேண்டுமென கர்நாடகாவைச் சேர்ந்த ஜனார்த்தனன் சர்மா என்பவர் தொடர்ந்துள்ள வழக்கு பூதாகரமாக வெடித்துள்ளது. இதுகுறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன,

இந்த வழக்கு தொடர்பாக நித்யானந்தா ஆசிரம நிர்வாகிகள் பிரயான் பிரயானந்தா, பிரியாதத்துவா ரித்திகிரண் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நித்யானந்தா வெளிநாடு தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் முதலில் அவர் ஈகுவாடரில் இருக்கலாம் என்று அவரது முன்னாள் சிஷ்யை தெரிவித்திருந்தார். ஆனால், தான் இமயமலையில் உள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நித்யானந்தா.

ADVERTISEMENT

அதில், “நான் குழந்தைகளுக்கும், மனித உரிமைகளுக்கும் எதிரானவன் அல்ல. ஆசிரமத்தில் தங்கியுள்ள குழந்தைகளைப் பெற்றோர் எப்போது வேண்டுமானாலும் வந்து பார்க்கலாம். மிகப்பெரிய ஆன்மிகச் செயலைச் செய்து முடிப்பதற்காக நான் உயிரோடு இருக்க வேண்டும். நான் வெளிநாடு தப்பிச் செல்லவில்லை” என்று கூறியுள்ளார்.

நித்யானந்தா இமயமலையில் இருக்கிறாரா அல்லது ஈகுவாடரில் இருக்கிறாரா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் வெளிநாடு தப்பி சென்றிருக்கத்தான் அதிக வாய்ப்பிருக்கிறது என வழக்கறிஞர் ரகு தெரிவித்துள்ளார். நித்யானந்தா மீதான பாலியல் வழக்கில், ராம்நகர் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் ஆஜராகி வரும் ரகு, “நித்யானந்தாவின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது, அவர் அதை 20 நாட்களுக்கு முன்பு எப்படியோ பெற்றிருக்கிறார். இது அவர் உண்மையில் நாட்டை விட்டு வெளியேறியிருக்கலாம் என்ற சந்தேகத்துக்கு வழிவகுக்கிறது. பாலியல் வழக்கிலும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராவதில்லை. தொடர்ந்து விலக்கு பெற்று வருகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

கடந்த ஓராண்டாக பிடதி ஆசிரமத்திலும் யாரும் இல்லை. பராமரிப்புக்காகச் சுமார் 10 பேர் இருக்கின்றனர். மற்றவர்கள் எல்லாம் நித்தியின் மற்ற ஆசிரமத்துக்குச் சென்றுவிட்டனர் என்று அவர்கள் கூறுகின்றனர். நித்யானந்தாவையும் கடந்த ஓராண்டாக பிடதியில் காண முடியவில்லை என்று அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் அகமதாபாத்தில் நித்யானந்தா ஆசிரமம் அமைந்துள்ள டெல்லி பப்ளிக் ஸ்கூல் பள்ளிக்கு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உரிய அனுமதியின்றி நித்யானந்தா ஆசிரமத்திற்கு இடம் குத்தகைக்கு விடப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. போலிச் சான்றிதழைக் கொண்டு ஆசிரமம் இயக்கி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸ் குறித்து ஏழு நாட்களில் பதிலளிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. நித்யானந்தா ஆசிரமத்துக்கான குத்தகை ஒப்பந்தத்தை நிறுத்திவிட்டதாக அந்தப் பள்ளியின் முதல்வர் ஹிதேஷ் புரி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதனிடையே நித்யானந்தா ஆசிரமத்திலிருந்து மீட்கப்பட்ட சிறுமி ஏஎன்ஐ ஊடகத்திடம் கூறுகையில், “ஆசிரமத்திற்காக நிதியைப் பெற்றுத்தருவதற்காக, நித்தியானந்தாவை விளம்பரப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டோம். ரூ.3 லட்சம் முதல் ரூ.8 கோடி ரூபாய் வரை நன்கொடை பெற்று தர வேண்டும். ரொக்கம் இல்லையெனில் ஏக்கர் கணக்கில் நிலத்தை பெற்று தர வேண்டும். நித்யானந்தாவுக்காக வீடியோ எடுக்கச் சொல்வார்கள். அதற்காக நாங்கள் அதிகபடியான நகைகள், மேக்கப் போட்டுக் கொள்ள வேண்டும். நித்யானந்தாவின் நேரடி உத்தரவின் பேரில்தான் எனது சகோதரி அந்த வீடியோவை வெளியிட்டார். அவரால் அங்கிருந்து வெளியே வர முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share