ஆர் கே ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டி. ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் எஸ்.கார்த்தீஸ்வரன் இயக்கி, நடித்திருக்கும் படம் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’.
எல்லோரும் ஏதோ ஒரு சூழலில் ஏதோ மோசடிக்கு ஆளாகி பணம் நிம்மதி கவுரவம் இவற்றில் ஏதேனும் ஒன்றையாவது இழந்திருப்போம். இதுபோன்ற உண்மை சம்பவத்தை தழுவி தான் இந்த படம் உருவாகி இருக்கிறது என்கிறது படக் குழு.
படத்தில் நடித்திருக்கும் பிளாக் பாண்டி ”நான் ஆன் லைன் மோசடியால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். நானும், எனது மனைவியும் என்னுடைய இரண்டாவது மகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தோம். அந்தத் தருணத்தில் மருத்துவமனைக்கு கட்டணம் செலுத்துவதற்காக என்னுடைய வங்கி கணக்கில் குறிப்பிட்ட தொகையை வைத்திருந்தேன். நானும் என் மனைவியும் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது என் மனைவி அவருடைய செல்போனுக்கு வந்த ஒரு லிங்கை தவறுதலாக தொட்டுவிட, என்னுடைய வங்கி கணக்கில் இருந்த அனைத்து பணமும் திருடப்பட்டிருந்தது.
எனக்கு அந்த நெருக்கடியான சூழலில் இந்த மோசடி நடைபெற்ற போது அதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை. மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். இதை பகிர்ந்து கொள்வதில் தயக்கம் இருக்கிறது. இருந்தாலும் நானும் மோசடியால் பாதிக்கப்பட்டேன் என்பதற்காக இந்த விஷயத்தை பகிர்ந்து கொள்கிறேன்.
வாழ்க்கையில் நிறைய மக்கள் பணத்தை மோசடி பேர்வழிகளிடம் இழந்து இருப்பார்கள். தற்போது ஒவ்வொருவரும் வாட்ஸ்அப்பை பயன்படுத்துகிறார்கள். அதில் ஏடிகே ஃபைல்ஸ் என்று ஒரு லிங்க் வருகிறது. அது ஆபத்தானது. நீங்கள் எந்த சூழலில் இருந்தாலும் முழுமையான விழிப்புணர்வுடன் இதனை எதிர்கொள்ளுங்கள். நீங்கள் உங்களுடைய சொந்த புகைப்படத்தை பகிர்ந்து கொள்ளும் போதும் கவனத்துடன் இருங்கள். இந்தப் படமும் இதைத்தான் சொல்கிறது.”என்றார் பிளாக் பாண்டி.
அப்போ படத்தில் அவர் சாதாரணமாக நடித்திருக்க மாட்டார். கேரக்டராவே வாழ்ந்திருப்பாரோ?
- ராஜ திருமகன்
