சபலிஸ்ட் நபர் ஒருவன் (பிளாக் பாண்டி) முகநூலில் அறிமுகமாகும் பெண் ஐ டி யோடு உரையாடி வீடியோ கால் பேசி, அவளது நிர்வாண உருவத்தைப் பார்த்து, தானும் நிர்வாணமாக, அவனது நிர்வாணம் எதிர் முனையில் படம் பிடிக்கப்பட்டு அவனுக்கே அனுப்பி வைக்கப்பட்டு, ‘பணம் தராவிட்டால் உன் நிர்வாணத்தை உனது போனில் உள்ள எல்லா நம்பருக்கும அனுப்புவேன்’ என்று எதிர்முனை என்று மிரட்ட, ஐம்பதாயிரம் பணம் கொடுத்து தப்பிக்கிறான் சபலிஸ்ட்.
எதிர்முனையில் பெண்குரலில் மிரட்டுவது பெண்ணே அல்ல. தவிர எப்போதோ எங்கோ யாரோ யாரோடு எடுத்த ஆபாச வீடியோவை எதிர்முனை தனது கேமரா முன்பு காட்டி, சபலிஸ்ட்டை நம்ப வைத்து அடித்த கொள்ளை.
அவனைப் போல பலபேரிடம் இருந்து பல லட்சங்கள்..
வயதுக்கு வந்த இரண்டு பெண்களின் அப்பா (லிவிங்ஸ்டன்) மகள்களின் நல்வாழ்வுக்காக பல ஆண்டுகள் சேமித்து முதலாகப் போட்டு, தொழில் செய்து கொண்டிருக்கும் பணத்தை அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு புது நிதி நிறுவனம் ஒன்றில் போட, அவர்கள் ஏமாற்றி விட்டு போக, அதிர்ச்சியில் அவரும் அவரது மனைவியும் (ஜெயாஸ்ரீ சசிதரன்) மரணம் அடைய, அவர்களது பெண் பிள்ளைகள் அநாதை ஆகிறார்கள்.
இப்படி பல பேரை ஏமாற்றி பல நூறு கோடிகள்…
இருபத்தைந்து ரூபாய்க்கு போன் தருவதாக விளம்பரம் கொடுக்க, அதை நம்பி பல கோடி மக்களும் ஆளுக்கு ஐந்து போனுக்கு பணம் அனுப்ப எல்லா பணத்தையும் அடித்துக் கொண்டு கிளம்பி, அதன் மூலம் பல ஆயிரம் கோடிகள்..
கோடீஸ்வர பெண்ணை (மிருதுளா சுரேஷ்) காதல் என்ற பெயரில் நம்பவைத்து ஏமாற்றி ஐநூறு கோடி…
இப்படி ஏமாற்றிக் கொள்ளை அடிக்கும் கூட்டத்தின் தலைவன் ஒருவன் (கீர்த்தீஸ்வரன்), அவனது அணியில் ஒரு பெண் (அகல்யா வெங்கடேஷ்) இரண்டு ஆண்கள் (ஆதவன் மற்றும் ஒருவர்).
பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது அவனது மற்றும் அவன் குழுவினரின் எண்ணம்.
காரணம், அவன் 7500 ரூபாய் சம்பளத்துக்கு வேலை செய்தபோது, மினிமம் பேலன்ஸ் தேவை இல்லாத தனது வாங்கி அக்கவுண்ட்டில் வைத்திருக்க, பேங்க் லோன் தவணைக்கான பணம் மட்டும் அக்கவுண்ட்டில் இருக்க,
வங்கி திருட்டுத்தனமாக இருபத்தைந்து ரூபாயை எடுத்து விட, அதனால் தவணை கட்ட முடியாமல் மிகவும் வேதனைகளுக்கு ஆளாக, அவன் கற்றுக் கொண்ட ஹேக்கிங் மூலம் இருபத்தைந்து ரூபாயை இன்னொருவர் அக்கவுண்ட்டில் இருந்து எடுக்கிறான். பணம் இழந்த நபருக்கு அது தெரியவே இல்லை என்ற நிலையில் அப்படி ஒவ்வொரு அக்கவுண்ட்டில் இருந்தும் இருபத்தைந்து ரூபாயை மட்டும் எடுத்தே பல லட்சம் சம்பாதிக்கிறான்.
அதன் பின் சபலிஸ்ட் நபர்கள், அதிக வட்டிக்கு பேராசைப்படும் நபர்கள், கொடுக்க முடியாத மலிவு விலையில் ஒரு பொருள் கிடைக்கும் என்று யாரவது சொன்னால் அதன் சாத்தியம் பற்றி யோசிக்காமல் கண் மூடித்தனமாக பணம் போடும் நபர்கள்… இவர்களிடம் அவன் கொள்ளை அடிக்கிறான். அவர்கள் யாருமே நல்லவர்கள் இல்லை எனும்போது நான் செய்வதில் என்ன தப்பு? என்பது அவன் வாதம்.
இந்த நிலையில் காதல் என்ற பெயரில் ஐநூறு கோடி பணம் இழந்த பெண்ணின் தோழி ஒரு பெண் போலீஸ் (ஸ்ரீநிதி).
பணம் இழந்தவள் தோழியிடம் முறையிட, அவள் அவனைப் பிடிக்க வலை விரித்தால்.. அவன் கமிஷனர் தோளில் கை போட்டுப் பேசுபவனாக இருக்கிறான்.
”போலீஸ், வக்கீல்கள், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், ஆள்வோர்கள் எல்லோரும் என் பணத்துக்கு அடிமைகள் ”என்கிறான்”. நீதிபதியை விலைக்கு வாங்குவேன். மீறி ஜெயிலுக்கு போனாலும் ஷாப்பிங் போய் வருவேன் ”என்கிறான்”.
பெண் போலீசால் அவனை என்ன செய்ய முடிந்தது என்பதே,
ஆர் கே புரொடக்ஷன்ஸ் சார்பில், ராதாகிருஷ்ணன், கே எம் பி புரடக்ஷன்ஸ் சார்பில் புவனேஸ்வரன், எஸ் பி எம் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஷாஜு மற்றும் ஜோதிலட்சுமி தயாரிக்க, கார்த்தீஸ்வரன் நாயகனாக நடித்து எழுதி இயக்க, லிவிங்ஸ்டன், ஆதவன், அகல்யா வெங்கடேசன், ஸ்ரீநிதி, மிருதுளா சுரேஷ், தீக்ஷ்ன்யா, மஞ்சு நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “நிர்வாகம் பொறுப்பல்ல“.
சட்டென்று சதுரங்க வேட்டை படம் ஞாபகம் வந்தாலும். மக்களுக்கு விழிப்புணர்ச்சி தர வேண்டும் என்ற நிலையில் இது சொல்லப்பட வேண்டிய கதைதான். எத்தனை தடவை சொன்னாலும் தப்பில்லை. ஆனால் எப்படிச் சொன்னால் வெற்றி பெறும்? எப்படி சொல்ல வேண்டும்?, என்பது முக்கியம் அல்லவா?
நடித்து இயக்கி இருக்கும் கீர்த்தீஸ்வரன் பெரிதாக பாராட்டும்படி இல்லை என்றாலும் ரொம்ப மோசம் என்று சொல்லும் அளவுக்கும் இல்லை. சில படங்களில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து கூத்தடிப்போர் மத்தியில், இதுவே பாராட்டுக்குரிய விஷயம்தான்.
சில இடங்களில் வசனம் புன்னகைக்க வைக்கிறது. ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. ராஜேஷ்குமாரின் ஒளிப்பதிவும் சஜின் படத்தொகுப்பும் சராசரிக்கு மேல்தான்.
பணம் போன அதிர்ச்சியில் தந்தை தாய் இறந்து போக, அந்தப் பெண் குழந்தைகள் கதறும் காட்சி அடிவயிற்றைக் கலக்குகிறது. டைரக்டர் அசத்தி இருக்கும் பகுதி அது.
அதன் பின் சாத்தியமில்லாத விஷயங்களையும் சாத்தியமாவது சாத்தியமா என்று சந்தேகம் வரும் விஷயங்களையும் சாத்தியம் என்பது போல சொல்கிறார்கள்.
ஐநூறு கோடியை ஒயிட் மணியாக ஜஸ்ட் ஆன்லைனில் டிரான்ஸ்பர் செய்யும் கோடீஸ்வரி உடை மற்றும் பாவனையில் சிங்கிள் ஸ்டார் ஹோட்டல் ரிஷப்ஷனிஸ்ட் போல இருக்கிறார். சின்ன பட்ஜெட் படம் என்பதால் அது போகட்டும் என்று விட்டாலும்,
இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாக ஐம்பது கோடி ரூபாயை மூன்றடி நீள இரண்டடி அகல, இரண்டடி உயர பையில் வைத்துக் கொடுக்கிறார்கள். இரண்டாயிரம் ரூபாய் கட்டுகளில் ஐம்பது கோடி என்றால் 2500 கட்டுகள். அவற்றை எப்படிங்க மூன்றடி நீள இரண்டடி அகல, இரண்டடி உயர பையில் வைத்துக் கொடுக்க முடியும்? இன்னொரு காட்சியில் அதே பையில் நானூறு கோடி ரூபாயை வேறு கொடுக்கிறார். பணத்தை என்னவோ முளைக்கீரைக் கட்டு மாதிரி டீல் செய்கிறார்கள். நமக்கு தும்மல்தான் வருது.
என்னதான் டிரஸ்ட் என்றாலும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட டிரஸ்ட்டில் இப்படி ஆயிரம் கோடி ரெண்டாயிரம் கோடி ரூபாயை எல்லாம் போட்டால் இன்கம்டாக்ஸ் டிபார்ட்மென்ட் கவனிக்காதா?
எந்த பணக்கார வரலாறும் இல்லாத நபர், சில மாதங்கள் இடைவெளியில் ரெண்டாயிரம் கோடி மூவாயிரம் கோடி எல்லாம் ஆன்லைனில் டிரான்ஸாக்ட் செய்தால் அரசு சும்மா இருக்குமா?
இப்படிப்பட்ட ஸ்கேம்கள் நடப்பது எல்லாம் உண்மைதான். ஆனால் அவை எப்படி நடக்கிறது என்று உண்மைக்கு நெருக்கமாக ஒழுங்காக ஸ்டடி செய்யாமல் காட்சிகளை அமைத்திருப்பது கொடுமை.
அதையெல்லாம் விட இந்தப் படத்தை முடித்து இருக்கும் விதம் ரொம்ப அநியாயம்.
ஒரு ஊரில் போலீஸ் ஸ்டேஷன் இருக்கிறது என்றால் அது குற்றவாளிகளை பிடிக்க மட்டும் அல்ல. ஸ்டேஷன் இருக்கு என்ற நினைப்பே ஒரு முக்கிய விஷயம் தான்.
ஒரு ஊரில் தொண்ணூறு சதவீதம் பேர் திருட வாய்ப்புக் கிடைத்தால் திருடுவான் என்று வைத்துக் கொள்வோம்.
ஒரு போலீஸ் பூத் இருந்தால் எழுபது சதவீதம் பேர் தான் திருட முயல்வான். இருபது சதவீதம் பேர் பயந்து, அந்த எண்ணத்தையே விட்டு விடுவான்.
ஊருக்கு வெளியே போலீஸ் ஸ்டேஷன் இருந்தால் இன்னும் பத்து சதவீதம் பேர் பயந்து ஒழுங்காக இருப்பான்.
போலீஸ் ஒழுங்காக ரோந்து போனால் இன்னும் பத்து சதவீதம் பேர், ‘ மாட்டிக்கிட்டா ஒழிஞ்சோம் ‘ என்று நினைத்து பின் வாங்கி விடுவான்.
அதே ஸ்டேஷன் ஊருக்குள் இருந்தால் இன்னும் பத்து சதவீதம் … ஒரு போலீஸாவது நேர்மையாக இருந்தால் இன்னும் பத்து சதவீதம் என்று திருட நினைக்கும் ஆட்களின் எண்ணிக்கை குறையும்.
சினிமா என்பது சமூகம் என்ற ஊருக்கு போலீஸ் ஸ்டேஷனாக இருக்க வேண்டும் விபச்சார விடுதியாக இருக்கக் கூடாது.
இந்தப் படத்தை பார்க்கும் ஒருவன் ஏமாற்றி தப்பிப்பது இவ்வளவு ஈஸியா என்று எண்ணி அரைகுறையாக ஏதாவது பண்ணி, லாக்கப்பில் லாடம் காட்டிக் கொண்டு கதறுவான்.
நிர்வாகம் பொறுப்பல்ல.., நிர்வாகமே இல்ல.
— ராஜ திருமகன்
