“அவருக்கு என்ன பயம்?”- மின்வாரிய ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரத்தில் செந்தில் பாலாஜியை சாடிய அமைச்சர் நிர்மல்குமார்

Published On:

| By Mathi

Nirmalkumar Press Meet

தமிழக முதல்வர் விஜய், செய்தியாளர்களை சந்திக்காமல் இருப்பது; மின்வாரிய ஹார்ட் டிஸ்க்குகள் திருட்டு உள்ளிட்டவை தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் (Nirmal Kumar) விளக்கம் அளித்துள்ளார்.

மதுரையில் இன்று ஜூன் 6-ந் தேதி செய்தியாளர்களிடம் அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது: மதுபானக் கூடங்களில் (Bars) அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குப் பிறகு அவை செயல்படக் கூடாது என்பதால், விதிமுறை மீறல்கள் ஏதும் நடக்கிறதா என்பதைக் கண்காணிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்படும்.

ADVERTISEMENT

FL2 உரிமம் பெற்ற மனமகிழ் மன்றங்களில் (Recreation Clubs) உள்ள மதுபானக் கூடங்களும் முறையாகச் செயல்படுகின்றனவா அல்லது விதிமுறை மீறல்கள் ஏதும் உள்ளதா என்பதைக் கண்காணிப்பதற்கான உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

மதுரை குவாரிகள்

மதுரை மாவட்டத்தில் இதுவரை எத்தனை குவாரிகள் இயங்கி வருகின்றன மற்றும் எத்தனை குவாரிகள் மூடப்பட்டுள்ளன என்பது குறித்த முழுமையான மறுமதிப்பீட்டு (Assessment) பணிகளை மேற்கொள்ளுமாறு சுரங்கத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கடந்த ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட குவாரிகளிலும், இயற்கை வளங்களைத் திருடியவர்கள் தப்பித்துவிடக் கூடாது என்ற நோக்கில், ஏதேனும் விதிமுறை மீறல்கள் நடந்துள்ளனவா என்று முழுமையாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.

விதிமுறைகளை மீறிய மற்றும் சட்டவிரோத குவாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன; கடந்த வாரமே பல குவாரிகள் இடைநீக்கம் (Suspend) செய்யப்பட்டுள்ளதுடன், சட்டவிரோதமாக மணல், கிராவல் மற்றும் சவுடு எடுக்கும் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

கழிவுநீர் கால்வாய்கள்

மதுரை மாவட்டத்தில் பெரிய அளவில் கழிவுநீர் கால்வாய்களைச் சீரமைப்பதற்கான புதிய திட்டங்களைக் கொண்டு வருவதற்கான ஆரம்பகட்ட ஆய்வுகள் தற்போதுதான் தொடங்கப்பட்டுள்ளன.

இத்தகைய பெரிய திட்டங்கள் முடிவடையப் பல ஆண்டுகள் ஆகும் என்பதால், தற்சமயம் மக்கள் சந்தித்து வரும் கழிவுநீர் வெளியேற்றப் பாதிப்புகளைப் போக்க உடனடியாக ஏதேனும் தற்காலிகத் திட்டங்களைச் (Temporary Schemes) செயல்படுத்த முடியுமா என்று மாநகராட்சியுடன் ஆலோசித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சி ஊழல்

மதுரை மாநகராட்சியில் நிலவும் ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தவிர்க்கும் பொருட்டு, மாவட்ட ஆட்சியர் மற்றும் புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள மாநகராட்சி ஆணையர் ஆகியோர் இணைந்து முழு அளவிலான மறுமதிப்பீட்டுப் பணிகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள சொத்து வரி (Property Tax) மற்றும் இதர விதிமுறை மீறல்களைக் கண்டறிய மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் இணைந்து ஒரு பெரிய குழுவை அமைக்கவுள்ளனர்.

இந்த ஆய்வுகள் வருடக் கணக்கில் நீடிக்காமல் சில மாதங்களிலேயே முடிக்கப்படும்; மின் இணைப்பு எடுத்த ஆண்டு, வீடு கட்டிய ஆண்டு, கட்டிட அனுமதி (Plan Approval) வாங்கிய விவரம் மற்றும் அப்போது இருந்த கவுன்சிலர், மண்டலத் தலைவர், மேயர் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் உள்ளதால் தவறு செய்தவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அரசுக்கு ஏற்பட்டுள்ள பல நூறு கோடி ரூபாய் வருவாய் இழப்பு மீட்டெடுக்கப்படும்.

திருப்பரங்குன்றம் தீபம்

திருப்பரங்குன்றம் விவகாரத்தைப் பொறுத்தவரை மக்கள் அனைவரும் அமைதியையே விரும்புகிறார்கள்; கடந்த இரண்டு ஆண்டுகள் அல்லது பத்து ஆண்டுகளுக்கு முன்பு என்ன அமைதியான சூழ்நிலை இருந்ததோ, அதே சூழ்நிலைதான் தொடர வேண்டும் என்பதே அரசின் கொள்கையாகும். இப்பிரச்சினையில் எந்தவொரு மதவாத சக்தியும் உள்ளே நுழைந்து அரசியல் செய்வதற்கு அரசு நூறு சதவீதம் அனுமதிக்காது.

விஜய்யின் பிரஸ் மீட் எப்போது?

செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்பது கட்டாயமான ஒரு அளவுகோல் (Bench-mark) கிடையாது; கடந்த சில ஆண்டுகளாகவே சிலர் தங்களின் சுய விளம்பரத்திற்காகத் தொடர்ந்து பிரஸ் மீட் நடத்தி வந்தனர். Mainstream மற்றும் சமூக ஊடகங்கள் வருவதற்கு முன்பு பிரிந்து மீடியா மட்டுமே இருந்த காலத்தில் பிரஸ் ரிலீஸ் மட்டுமே கொடுக்கப்பட்டது.

முதலமைச்சர் மக்களைத் தொடர்ந்து நேரடியாகச் சந்தித்து வருகிறார்; மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய அறிவிப்புகள் அனைத்தும் தினந்தோறும் பிரஸ் ரிலீஸ் மூலமாக ஊடகங்களுக்கு முறையாக வழங்கப்பட்டு வருகின்றன.

மின்வாரிய ஹார்ட் டிஸ்க் திருட்டு

மின் வாரியத்தில் ஹார்ட் டிஸ்க் திருட்டுப் போன விவகாரத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், எந்தெந்தத் தரவுகள் (Data) காணாமல் போயுள்ளன என்பது குறித்து அந்தந்தத் துறையினர் மதிப்பீடு செய்து வருகின்றனர்; காவல்துறையின் முழுமையான விசாரணைக்குப் பிறகு உண்மை விவரங்கள் அறிவிக்கப்படும்.

இந்த விவகாரத்தில் யாருடைய பெயரையும் குறிப்பிடாத போது செந்தில் பாலாஜி மட்டும் ஏன் முதல் ஆளாகப் பதற்றமடைந்து பிரஸ் மீட் கொடுத்துப் பேசுகிறார் என்ற சந்தேகம் எழுகிறது; அவருக்கு என்ன பயம்? இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share