மத்திய அரசு சார்பில் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அஞ்சலி செலுத்தினார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று (டிசம்பர் 29) காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக விஜயகாந்தின் உடல் இன்று காலை முதல் சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது.
அங்கு அரசியல் தலைவர், அரசு அதிகாரிகள், திரை பிரபலங்கள், ஆயிரக்கணக்கான ரசிகர்கள், தொண்டர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் மத்திய அரசு சார்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் பிரேமலதா விஜயகாந்திற்கும் ஆறுதல் கூறினார். அவருடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழக பாஜகவினர் உடன் வந்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “கேப்டன் மறைந்த செய்தி கேட்டு பிரதமர் மோடி ட்விட்டரில் மெசேஜ் போடுவதை தவிர மத்திய அரசின் சார்பாக நான் உடனடியாக செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார். விஜயகாந்தின் குடும்பத்தை, தொண்டர்கள் அனைவரையும் சந்திக்க வேண்டும். இந்த துக்கத்தில் நாமும் பங்கெடுக்க வேண்டும் என்று சொன்னார்.
அதனால் உடனே கிளம்பி வந்து மனதிற்கு மிகவும் வேதனை அளிக்க கூடிய கூட்டத்தில் கலந்து கொள்கிறேன். கேப்டன் மக்களுக்காக பாடுபட்டது, வீட்டிற்கு வந்தவர்கள் ஒருத்தருக்கு கூட சாப்பாடு போடாமல் அனுப்பியது இல்லை என்பதை நாம் திருப்பி சொல்ல வேண்டிய தேவையே இல்லை.
அவருடைய மனம் மிகவும் இளகிய மனம். கஷ்டத்தை பார்க்க முடியாத மனம். அதனால் தன்னுடன் இருக்கிறவர்கள் எல்லாருக்கும் தனக்கு கிடைப்பது அவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று முயற்சி செய்தவர். அதனால் ஒரு புதிய பழக்கமே உருவாகியிருக்கிறது. மனிதநேயத்தோடு இருந்த ஒரு அரசியல்வாதி. அப்படி உயர்ந்த குணம் கொண்ட கேப்டன் விஜயகாந்த் நம்மிடையே இல்லை.
துயரத்தை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை. வெயில், மழையை பொருட்படுத்தாமல் கோடான கோடி ரசிகர்கள், தொண்டர்கள் வந்துள்ளனர்.
அவர்களுடன் துயரத்தை பகிர்ந்து கொண்டேன். அதே துக்கத்துடன் என்னை இங்க வர சொல்லி பிரதமர் உத்தரவிட்டார். குடும்பத்தார், இரு மகன்களுக்கும், பிரேமலதாவுக்கும் ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
சொந்த இடத்தில் கேப்டன் உடல் அடக்கம்- சட்ட சிக்கலா?
டிசம்பர்னு இருந்தா தை மாசம்னு ஒண்ணு இருக்கும்: அப்டேட் குமாரு
