நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நியாயமாகப் பேச வேண்டாமா?

Published On:

| By Minnambalam Desk

Nirmala Sitharaman Slams DMK

தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை மிகுந்த கவனத்துடன் சமூகத்தின் பல்வேறு பிரிவினரின் நலன்களையும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளின் வளர்ச்சியையும் உள்ளடக்கிய சீர்மிகு அறிக்கையாக வெளியாகியுள்ளது. அத்துடன் பொருளாதார ஆய்வறிக்கை ஒன்றையும் மாநில திட்டக்குழு உருவாக்கி அளித்துள்ளது. வேளாண் துறைக்கான அறிக்கையும் தனியாக தயாரித்து அளிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களின் வளர்ச்சிதான் தேசத்தின் வளர்ச்சி என்பது வெளிப்படையானது. அப்படிப்பட்ட நிலையில் ஒன்றிய நிதியமைச்சர் தமிழ்நாட்டின் பொருளாதார முன்னெடுப்புகளை, திட்டமிடுதலை சிறிதேனும் கவனத்தில் கொண்டு பேச வேண்டாமா? அதற்குப் பதிலாக ரூபாய்க்கான குறியீட்டை தமிழ் எழுத்தின் மூலம் குறிப்பிட்டதைக் குறித்து சினந்து பொங்கியுள்ளார். Nirmala Sitharaman Slams DMK

இந்திய நாணயத்தின் பெயர் ரூபாய் என்பதுதான். ஆங்கிலத்தில் ருபீஸ் எனப்படுகிறது. இதன் அதிகாரபூர்வமான குறியீட்டினை ஆங்கில வடிவில் பயன்படுத்தியுள்ளது தமிழ்நாடு அரசு. ஒட்டுமொத்த நிதிநிலை அறிக்கையின் முகப்பில் தமிழில் ரூ என்ற எழுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக தமிழில் எழுதும்போது ரூ.80/- என்று எழுதுவதுதான் பழக்கம் என்பதை நாம் மனதில் கொண்டால் இதில் எதுவும் பிரிவினை நோக்கில்லை என்பது தெளிவாகும். ஆனால், முதல்வர் தெளிவுபடுத்தியுள்ளபடி தமிழ்நாட்டின் தனித்துவத்தையும், உரிமைகளையும் வலியுறுத்தும் நோக்கம் உள்ளது. இதனை “பிராந்திய பேரினவாதம்” என்றெல்லாம் அழைத்து சினந்து பொங்குமளவு பிரச்சினை எதுவும் இல்லை. ஆனாலும் மாநில உரிமை குறித்து பேசினாலே கசக்கிறது ஒன்றிய அரசுக்கு. அதற்கு தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த நிதியமைச்சரும் அடியெடுத்துக் கொடுப்பது வருந்தத்தக்கது.

Nirmala Sitharaman Slams DMK

கல்வி நிதி தராமல் மறுக்கும் அநீதி Nirmala Sitharaman Slams DMK

நாடாளுமன்றத்தில் அமளி. தமிழ்நாட்டு உறுப்பினர்களை நாகரிகமற்றவர்கள் என்றார் ஒன்றிய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான். காரணம், ஏற்கனவே ஒன்றிய பட்ஜெட்டில் ஒதுக்கிய சமக்ர சிஷ்ய அபியான் திட்டத்திற்கான நிதியினை தமிழ்நாட்டுக்கு விடுவிக்க மறுத்ததை தமிழ்நாட்டு உறுப்பினர்கள் கேள்விக்கு உட்படுத்தியதுதான். தமிழ்நாடு தேசிய கல்விக் கொள்கையை ஏற்கவில்லை, பிஎம் ஶ்ரீ பள்ளிகளை ஏற்கவில்லை என்று காரணம் கூறினார். சமக்ர சிஷ்ய அபியான் என்பது வேறு. பிஎம் ஶ்ரீ பள்ளிகள் திட்டம் வேறு.

அந்த பிஎம் ஶ்ரீ பள்ளிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தேசிய கல்விக் கொள்கையை ஏற்பதாக ஒரு புள்ளி இருந்ததால் அதனை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை. அது அனுப்பிய திருத்தப்பட்ட வடிவத்தை ஒன்றிய அரசு ஏற்கவில்லை. அதனால் அந்தத் திட்டம் தமிழ்நாட்டில் நடைபெறவில்லை. ஆனால், அதனைக் காரணம் காட்டி சமக்ர சிஷ்ய அபியான் என்ற ஏற்கனவே நடைபெற்று வரும் திட்டத்திற்கான தவணைகளை ஒன்றிய அரசு தர மறுப்பது அநியாயமானது.

தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்காததற்கு முக்கிய காரணம், அது மும்மொழிக் கொள்கையை வலியுறுத்துவதுதான். தாய்மொழி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் வேறொரு இந்திய மொழியையும் அனைத்து மாணவர்களும் கற்க வேண்டும். இந்த மொழி இந்தி மொழியாக இருக்க வேண்டிய தேவையில்லை என்று தேசியக் கல்விக்கொள்கைக் கூறுவதால் இது இந்தி திணிப்பல்ல என்று கோரஸ் பாடுகிறார்கள் பாஜகவினர்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் 37,554 பள்ளிகள் உள்ளன. ஐம்பது லட்சம் மாணவர்கள் பயில்கிறார்கள். இவர்களெல்லாம் வேறெந்த இந்திய மொழியை பயில வேண்டும்? எதற்காகப் பயில வேண்டும்? பெரும்பாலான எளிய குடும்பத்துப் பிள்ளைகளுக்கு ஏற்கனவே கணிதம், அறிவியல் ஆகியவற்றோடு வரலாறு, புவியியல், தமிழ், ஆங்கிலம் என பல்வேறு பாடங்களைக் கற்றுத் தேர்வது சவாலாக உள்ளது.  

ஏனெனில் கல்வி கற்பதற்கான வாழ்க்கை வசதி பலருக்கும் குறைவாக இருக்கிறது; உழைக்கும் வர்க்க பெற்றோர்களால் வீட்டில் போதிக்க இயலுவதில்லை. குழந்தைகளின் கல்விக்கு உறுதுணையாக இருக்க இயலுவதில்லை. இந்த நிலையில் இடைநிற்றலைத் தவிர்த்து அவர்கள் பள்ளிக்கல்வியை நிறைவு செய்ய மதிய உணவுத் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் போன்ற திட்டங்களெல்லாம்தான் உதவுகின்றன. கருணைமிகு ஆசிரியர்களும் அவர்களை ஊக்கப்படுத்தி அயராத முயற்சிசெய்து கல்வியில் ஈடுபடுத்தி வருகிறார்கள். இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் என்று பல்வேறு திட்டங்களை உருவாக்கி மாநில அரசு கல்வியை மேம்படுத்த பாடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் தேவையற்ற வேறு ஏதாவதோர் இந்திய மொழியைப் பயில வேண்டும் என்றால் அது குருவி தலையில் பனங்காய் என்ற சொலவடைக்கேற்ப அவர்களது கல்விச் சுமையை அதிகரிப்பது ஆகாதா? அவர்களுக்கு ஆயாசத்தைத் தந்து இடைநிற்றலுக்குத் தூண்டாதா? எவ்வளவு குரூர மனம் இருந்தால் இப்படி மாணவர்களின் கல்வியை வைத்து அரசியல் செய்வார்கள்? இப்படிக் கூடுதல் சுமையினை சுமத்துவதை வசதிபடைத்த மேட்டுக்குடி மாணவர்களுக்குக் கிடைக்கும் “வாய்ப்பினை” இவர்களுக்கும் வழங்குவதாக வர்ணிப்பது எப்படிப்பட்ட சமூகவியல் அறியாமை? வலுவான மனிதர் 100 கிலோ பளுவைத் தூக்குகிறார்; அந்த “வாய்ப்பினை” மெலிந்த மனிதருக்கும் தர வேண்டும் என்று கூறுவார்களா? தேவைப்படுபவர்கள் படிக்கிறார்கள். அதுவும் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பயில நினைப்பவர்கள் தேவையில்லாமலும் படிக்கிறார்கள் (இந்தியைக் கொண்டு மென்பொருள் கற்பார்களா அல்லது மருத்துவம் கற்பார்களா? சிபிஎஸ்இ இந்தியைக் கட்டாயமாக்குவதால் படிக்கிறார்கள்). அதனை ஏன் எளியோர் வீட்டுக் குழந்தைகளுக்குக் கட்டாயமாக்க வேண்டும்?

சரி, இந்தி இல்லையென்றால் அப்படி எந்த மொழியைத்தான் ஐம்பது லட்சம் தமிழ் மாணவர்கள் படிப்பது? இந்தியாவின் எந்த மாநிலம் அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வாரித் தரப்போகிறது அவர்கள் அந்த மொழியைப் படிப்பதற்கு? அப்போது இயல்பாகவே வட மாநிலங்கள் அனைத்தையும் ஆக்கிரமித்துள்ள இந்தியைத் தானே படிக்க வேண்டும்? கூடுதல் மொழியைச் சொல்லித்தர ஒரு லட்சம் ஆசிரியர்கள் வேண்டுமென்றால் இந்தி மொழியாக இருந்தால்தானே அவ்வளவு பேரை நியமிக்க முடியும்? அப்படியானால் இது மறைமுகமான இந்தி திணிப்பின்றி வேறென்ன? அப்படி இந்தியைத் திணிப்பதன் மூலம் ஒன்றிய ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே கோலோச்ச வேண்டும், மற்ற மொழிகளெல்லாம் போஜ்பூரி, மைதிலி உள்ளிட்ட எண்ணற்ற வடநாட்டு மொழிகளைப் போல வழக்கின்றி மறைய வேண்டும் என்பதுதானே “இந்து, இந்தி, இந்தியா” வேலைத்திட்டம்?

இந்திய ஆட்சிமொழியாக ஆங்கிலமும் தொடர வேண்டும் என்பதற்காக எத்தனை மொழிப்போர் ஈகையர் தங்கள் இன்னுயிரைத் தந்தார்கள்? அவர்கள் தியாகத்தை மதித்துத்தானே அண்ணா இருமொழிக் கொள்கை என்ற இரும்புக் கவசத்தை உருவாக்கினார்? இன்றைக்கு அந்த கவசத்தைத் தகர்த்திட முழுமூச்சுடன் வட நாட்டு ஏகாதிபத்தியம் முழங்கும்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த நிதியமைச்சர் அதற்கு ஒத்தூதலாமா? தமிழ்நாட்டு பாஜக-வினர் துணைபோகலாமா? மராத்திய மொழிக்காக அந்த மாநில பாஜகவினர் குரல் கொடுக்கின்றனரே? இந்தக் கேள்விகளைக் கேட்டால் கல்வி அமைச்சருக்கு ஆதரவாக சீறிப் பாய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

Nirmala Sitharaman Slams DMK

தமிழை இகழ்ந்தாரா பெரியார்? Nirmala Sitharaman Slams DMK

வட நாட்டைச் சேர்ந்த தங்கள் கட்சியினரை மகிழ்விக்க பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று கூறினார் என்று திசை திருப்புகிறார் நிதியமைச்சர். அவர் கூற்றுக்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்துக் காட்டி தமிழர் தலைவர் பெரியாரை, தமிழை இகழ்ந்தவராகத் திரிக்கிறார். பெரியாரின் அணுகுமுறை என்பது சிந்தனையைத் தூண்டும் தத்துவார்த்த செயல்முறையாகும் (Philosophical praxis). Nirmala Sitharaman Slams DMK

எந்த ஒன்றையும் கேள்விக்கு அப்பாற்பட்ட புனிதமாகக் கருதுவது சிந்தனையைக் கொன்றுவிடும். சனாதனிகள்தான் அதனைச் செய்வார்கள். பெரியாரின் வழிமுறை புனிதமென்று எதனைக் கொண்டாடினாலும் அதற்கு எதிர்மறையான கருத்துகளை வலியுறுத்துவதன் மூலம் புனிதவாதத்தை தகர்த்து சிந்திக்க வைப்பதாகும். இவ்வாறு சிந்தனையில் எல்லைகளை விரிவாக்குவதைத் தத்துவ தளத்தில் ஆஸ்கஸிஸ் (Askesis) என்றும் கூறுவர். Nirmala Sitharaman Slams DMK

பெரியார் பிறப்பிலேயே உயர்வு தாழ்வு கற்பிக்கும் ஜாதீயத்தை தகர்க்க உதவாத, அதனுடன் சமரசம் செய்து கொண்ட எதையும் கேள்வி கேட்டார். தமிழ்மொழி ஏன் புராணக் கதைகளை அனுமதித்தது, மூட நம்பிக்கைகளை அனுமதித்தது, ஏன் ஜாதீயத்தை, பார்ப்பனீயத்தை, ஆணாதிக்கத்தை அனுமதித்தது என்று சிந்திக்க வைப்பதற்காக தமிழ் மொழியை பண்படாத மொழி என்று சாடினார். இவ்வாறான உரத்த சுயபரிசீலனை மூலம் தமிழ்மொழி தன்னை மறு ஆய்வு செய்துகொண்டு சமூகநீதி, சமநீதி விழுமியங்களை ஏற்க வேண்டும் என விரும்பினார். இது அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த அனைத்து தமிழன்பர்களுக்கும் தெரிந்திருந்தது.அதனால்தான் அவர் தமிழை இகழ்ந்ததாக யாரும் எந்த நாளும் கருதியதில்லை. Nirmala Sitharaman Slams DMK

உதாரணமாக “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!” என்ற வீரியமிக்க வரிகளை எழுதிய பாவேந்தர் பாரதிதாசன்தான் “தொண்டு செய்து பழுத்த பழம் – தூய தாடி மார்பில் விழும் – மண்டைச் சுரப்பை உலகு தொழும் – மனக்குகையில் சிறுத்தை எழும் – அவர்தான் பெரியார்” என்று பெரியாருக்கு பாமாலை புனைந்தார். அவருக்குத் தெரியாதா பெரியாருக்கும், தமிழுக்கும் என்ன உறவென்று? Nirmala Sitharaman Slams DMK

தமிழ்த் தாயின் தவப்புதல்வர் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், பாவலேறு பெருஞ்சித்திரனார் என தமிழுக்காகவே வாழ்ந்த பெரியோர் யாருக்குமே பெரியார் தமிழை இகழ்ந்தார் என்றால் புரியாமல் போகுமா என்ன? இவர்களுக்கெல்லாம் தமிழ் மொழிமீது இல்லாத அக்கறை அம்மையார் நிர்மலா சீதாராமனுக்குத்தான் இருக்கிறதா என்ன? நாடாளுமன்றத்திலே அரைகுறையாக பெரியார் எழுத்துகளை வாசித்துக் காட்டிவிட்டால் நாடே குழம்பிப் போய்விடும் என நினைக்கிறாரா? அவர் முதலில் முழுமையாக பெரியாரை வாசித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். இத்தகைய வெற்றுச் சமத்காரத்தால் நாட்டிற்கு எந்த பயனும் இல்லை என்பதை உயர்ந்த பதவியை அலங்கரிக்கும் அவரை போன்றவர்கள் அறிய வேண்டும்.

Nirmala Sitharaman Slams DMK

தமிழ்நாட்டில் சமஸ்கிருதம், இந்தி பயிலுதல்

எந்த காரணத்தினாலோ நிர்மலா சீதாராமன் அவர்கள் மீண்டும், மீண்டும் தமிழ்நாட்டில் சமஸ்கிருதம், இந்தி படித்தால் ஏளனம் செய்வார்கள், இடையூறு செய்வார்கள் என்றெல்லாம் பலவாறு கூறி வருகிறார். இவ்வாறு கூறுவது மிகுந்த வியப்பளிக்கிறது. உள்ளபடி சொன்னால் அவர் இளங்கலை பட்டப்படிப்பை திருச்சியில் படித்த சமயத்தில்தான் நானும் படித்தேன். அவர் சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் படித்தார். நான் தேசியக் கல்லூரியில் படித்தேன். அவர் என்னைவிட ஒரு வருடம் சீனியர். Nirmala Sitharaman Slams DMK

எங்கள் இரு கல்லூரிகள் தவிர தூய வளனார் கல்லூரியிலும் சமஸ்கிருதம் இரண்டாம் மொழியாக இருந்தது. அதனால் மூன்று கல்லூரிகளை இணைத்து அனைத்துக் கல்லூரி சமஸ்கிருத மாணவர்கள் சங்கம் என்ற அமைப்பினை உருவாக்கியிருந்தார்கள். அந்த சங்க நடவடிக்கைகளில் அவரைச் சிலமுறை சந்திக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளேன். என் அனுபவத்தில் இந்தக் கல்லூரிகளிலும் சரி, பொதுவெளியிலும் சரி சமஸ்கிருதம் இரண்டாவது மொழியாகப் படிக்கும் மாணவர்களைக் குறித்த நல்லெண்ணம்தான் இருக்கும். Nirmala Sitharaman Slams DMK

பெரும்பாலும் பார்ப்பன சமூகத்து மாணவர்கள்தான் படிப்பார்கள் என்றாலும், அதிக எண்ணிக்கையில் அவர்கள்கூட படிக்க மாட்டார்கள் என்பதால் வித்தியாசமான ஒன்றை செய்வதான பெருமிதம் எங்களுக்கு இருக்கும். எனக்கு அன்றும் சரி, இன்றும் சரி காளிதாசன், பாசன், பவபூதி உள்ளிட்ட பல சிறந்த சமஸ்கிருத படைப்பாளிகள் மீது ஈடுபாடும், விருப்பமும் உண்டு. அந்த மொழியை புனிதப்படுத்துவதுதான் பிரச்சினையே தவிர, அதன் இலக்கிய வளம் போற்றுதலுக்குரியது என்பதில் ஐயமில்லை. இதனை பொதுவெளியிலும் நானறிந்து யாரும் மறுப்பதில்லை. Nirmala Sitharaman Slams DMK

பின்னாளில் நான் நண்பர்கள் பொருட்டு இந்தியும் பயின்றேன். பெரும் எண்ணிக்கையில் தஷிண பாரத இந்தி பிரச்சார சபாவில் படிப்பார்கள். தனியார் பயிற்சி சாலைகளில் படிப்பார்கள். டைப்ரைட்டிங், ஷார்ட் ஹாண்ட், இந்தி எல்லாம் படிப்பது கூடுதல் திறன் பயிற்சி என்ற அளவில் கோடை விடுமுறைகளில் கூட்டம் கூட்டமாக அனைத்து சமூக மாணவர்களும் செல்வோம். என் அனுபவத்தில் யாரும் இகழ்ந்ததுமில்லை, இடையூறு செய்ததுமில்லை.

ஓர் அனுபவம் நினைவிற்கு வருகிறது. தேசியக் கல்லூரியில் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த மாணவர் தலைவர் ஒருவர் எனக்கு நண்பராக இருந்தார். என்னுடன் சமஸ்கிருதம் பயின்ற ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்டவரும் நண்பராக இருந்தார். ஒருமுறை எங்கள் மூவருக்குள்ளும் ஒரு சூடான வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பிறகு திராவிடர் கழக நண்பரைத் தனியாகச் சந்தித்த போது அவர் என்னிடம் கூறியதை இன்றும் நினைத்து வியக்கிறேன். “ராஜன், நீங்கள் பொதுவாக முற்போக்காக சிந்திக்கிறீர்கள். நீங்கள் சமஸ்கிருதம் படியுங்கள், இந்தி படியுங்கள், தவறல்ல. ஆனால் அன்று உங்களுடன் வந்த நண்பரைப் போன்றவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். உங்களைத் தவறாக வழிநடத்திச் சென்றுவிடுவார்கள்” என்று சொன்னார். Nirmala Sitharaman Slams DMK

அன்றைக்கு எனக்கு அவர் கூற்றின் முழுமையான பொருள் விளங்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இன்றைக்கு நினைத்துப் பார்க்கும்போது அவருடைய முதிர்ச்சியை வியக்காமல் இருக்க முடியவில்லை. அதனால்தான் திராவிட இயக்கம் வெறுப்பரசியல் செய்ததில்லை என்பதற்கான என் வரலாற்று சாட்சியத்தை அவ்வப்போது எழுதக் கடமைப்பட்டவனாக இருக்கிறேன். அந்தக் கருப்புச் சட்டை அணிந்த இளம் நண்பர் என்னையோ, சமஸ்கிருதத்தையோ வெறுக்கவுமில்லை, ஏளனம் செய்யவுமில்லை. ஆனால் மேலாதிக்கக் கருத்தியலைத்தான் எதிர்த்தார்.

பிறப்பையே தண்டனையாக்கும், பிறப்பிலேயே ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் வர்ண தர்மமும், ஜாதீயமும் எவ்வளவு தவறானது என்பதை உணர்ந்து, முற்போக்கான மானுடவாத சிந்தனையை மேற்கொள்ளும் யாரும் தமிழ்நாட்டில் வெறுப்பரசியலைக் காண மாட்டார்கள். மாறாக மக்களாட்சி அரசியலின் மகத்தான தொட்டில் என்றுதான் கருதுவார்கள். அதற்கு அடித்தளமிட்டவர்களில் தலையாய முக்கியத்துவம் கொண்டவர் ஒருவர் – அவர்தான் பெரியார். Nirmala Sitharaman Slams DMK

கட்டுரையாளர் குறிப்பு:  

Nirmala Sitharaman Slams DMK Rajankurai

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share