ஒரே நாடு ஒரே தேர்தல் எப்போது? – நிர்மலா சீதாராமன் தகவல்!

Published On:

| By Selvam

2034-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன்பாக ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் அமல்படுத்தப்படாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். Nirmala Sitharaman one nation

சென்னை அருகே காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற தலைப்பில் ஏப்ரல் 5-ஆம் தேதி கருத்தரங்கம் நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும்போது, “ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக ஆய்வு செய்த குழு அளித்த பரிந்துரையின் பேரில் தான் இந்த செயல்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. அதன்மூலம் சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கும். இது ராஜ்யசபாவுக்கு பொருந்தாது.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை 2029 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு தான் குடியரசு தலைவர் ஆரம்பித்து வைப்பார். அதனால் 82 A, 83 A 172, 327 என்ற ஒரு பிரிவை அறிமுகப்படுத்துகிறோம். இது ஒரு பெரிய முயற்சி.

ADVERTISEMENT

சட்டமன்றத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு அப்போது தான் கிடைக்கும்.

அனைத்து மாநிலங்களின் சட்டமன்ற பதவிக்காலத்தை ஒரே நேர்க்கோட்டில் முடிவுக்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அதேபோல மக்களவையின் பதவிக்காலத்தையும் முடிவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

ADVERTISEMENT

அதன்படி 2034 பொதுத்தேர்தலின் போது அனைத்து மாநில சட்டமன்ற பதவிக்காலம் மற்றும் நாடாளுமன்ற பதவிக்காலம் ஆகியவற்றை ஒரே நேரத்தில் முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

2034-க்கு முன்பு ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்படுத்தப்படாது. ஆனால், தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில் ஆட்சியை கலைத்துவிட்டு, 2029 நாடாளுமன்ற தேர்தலின் போது ஒரே நேரத்தில் சட்டமன்றத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் தேர்தல் நடத்த இருப்பது போன்று தவறான தகவல்களை பரப்புகிறார்கள். இதுபோன்ற விஷயங்களில் அவசரமாக எதுவும் முடிவெடுக்க மாட்டோம்.

ஒவ்வொரு துறைக்கும் உள்ள அதிகாரத்தை சரியாக கொடுத்தால் மட்டுமே ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த முடியும். 1951 – 1960 காலங்களில் ஒரே நேரத்தில் சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் தேர்தல் நடைபெற்றது.

1957-ஆம் ஆண்டு பிகார், பாம்பே, மெட்ராஸ், மைசூர், பஞ்சாப், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டசபையை கலைத்துவிட்டு ஒரே நாடு ஒரே தேர்தல் நடைபெற்றது. 1961 – 1970 காலகட்டத்தில் பிகார், கேரளா, பஞ்சாப், உத்தரபிரதேசம், வங்கதேச மாநிலங்களில் 10 வருடத்திற்குள் மூன்று முறை ஆட்சி கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது.

1971 – 1980 காலகட்டத்தில் 10 வருடத்தில் 15-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் மூன்று முறை தேர்தல் நடைபெற்றுள்ளது. ஸ்திரத்தன்மை இல்லாததால், இந்த மாநிலங்களில் போதுமான அளவுக்கு வளர்ச்சி பெற முடியவில்லை.

ஒவ்வொரு தேர்தெடுக்கப்பட்ட அரசையும் அடிக்கடி கலைப்பதால் அதிகளவில் செலவாவதாக சட்ட கமிஷன், நாடாளுமன்ற நிலைக்குழு, தேர்தல் ஆணையம், நிதிஆயோக் ஆகியவை ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த வேண்டும் என்று பரிந்துரை செய்தன. அதனால் மக்களின் வாக்கு வீணாகக்கூடாது என்பதற்காக தான் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தப்படுகிறது” என்று தெரிவித்தார். Nirmala Sitharaman one nation

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share