2026-27ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார்.
நிதி அமைச்சரால் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அந்தவகையில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். இன்று 9ஆவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். 10 பட்ஜெட் தாக்கல் செய்த மொரார்ஜி தேசாய் சாதனையை நிர்மலா சீதாராமன் நெருங்கி வருகிறார்
இதற்கிடையே பட்ஜெட் ஆவணங்களுடன் குடியரசுத் தலைவரைச் சந்தித்த நிர்மலா சீதாராமனுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இனிப்பு ஊட்டிவிட்டு வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து பட்ஜெட் குறித்து குடியரசுத் தலைவரிடம் விளக்கமளித்த நிர்மலா சீதாராமன், நிதித்துறை அதிகாரிகளுடன் நாடாளுமன்றத்துக்கு வருகைத் தந்தார்.
அங்கு பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்று பட்ஜெட்டுக்கு ஒப்பதல் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
மத்திய பாஜக அரசு 2017 முதல் பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறது. இந்த நடைமுறையை மாற்றாமல் ஞாயிறு கிழமை விடுமுறை நாளான இன்று (பிப்ரவரி 1) நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.
முன்னதாக வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 1999ல் பிப்ரவரி 28 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
