புதிய வருமான வரி மசோதாவை மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 13) தாக்கல் செய்கிறார். Nirmala Sitharaman present bill
இந்தியாவில் தற்போது நடைமுறையில் இருக்கும் வருமான வரிச்சட்டம் 1961-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இதில் பல ஆண்டுகளாக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்தநிலையில், கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி பட்ஜெட் தாக்கலின் போது, புதிய வருமான வரி மசோதா இந்த கூட்டத்தொடரிலேயே அறிமுகப்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். அதன்படி மக்களவையில் இன்று புதிய வருமான வரி மசோதாவை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
இந்த புதிய வருமான வரி சட்டமானது 536 பிரிவுகள், 16 அட்டவணைகள், 23 அத்தியாயங்களை உள்ளடக்கிய 622 பக்கங்களை கொண்டதாக உள்ளது.
புதிய வருமான வரி சட்டத்தில் வரி விகிதங்களில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும் சட்டத்தை எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
வருமான வரி தாக்கல் செய்வது எளிமையாக்கப்படும். புதிய செயலி, தளம் உருவாக்கப்படும். 1961-ஆம் ஆண்டு வருமான வரி சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முந்தைய ஆண்டு, மதிப்பீட்டு ஆண்டு என்ற வார்த்தைகள் புதிய மசோதாவில் நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வரி ஆண்டு என்ற வார்த்தை மட்டுமே பயன்படுத்தப்படும்.
நாடாளுமன்றத்தில் இன்று புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்பட்டு, நாடாளுமன்றக் நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்படும். பின்னர் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இந்த புதிய வருமான வரிச்சட்டம் நடைமுறைக்கு வரும். Nirmala Sitharaman present bill