விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வந்த போது, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கார் ஓட்டுநர் காணாமல் போனது சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகரும், மறைந்த தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக இன்று (டிசம்பர் 29) சென்னை தீவுத் திடலில் வைக்கப்பட்டது.
காலை முதலே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தீவுத் திடலில் குவிந்து விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்திச் சென்றனர்.
பகல் 12 மணியளவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அஞ்சலி செலுத்த சென்றார். அவருடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, துணை தலைவர் கரு.நாகராஜன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் ஆகியோரும் சென்றிருந்தனர். விஜயகாந்த் உடலுக்கு மத்திய அரசு சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய நிர்மலா சீதாராமன், பிரேமலதா விஜயகாந்த் கையை பிடித்து துக்கம் அனுசரித்தார்.
பிரேமலதாவுக்கு ஆறுதல் கூறிவிட்டு கிளம்பிய அவர் அங்கே இரங்கல் உரையாற்றுகையில், “பிரதமர் மோடி மத்திய அரசு சார்பில் என்னை இங்கே அனுப்பி வைத்தார். உடனடியாக கிளம்பச் சொல்லி இந்த துக்கத்தில் பங்கெடுக்க வேண்டும் என சொன்னார். கேப்டனின் தொண்டர்களைச் சந்திக்க வேண்டும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவேண்டும் என்று வழிகாட்டுதல்களை வழங்கினார். அதன்படி கிளம்பி வந்தேன்” என்று கூறினார்.
தொடர்ந்து அங்கிருந்து புறப்பட தயாரானார் நிர்மலா சீதாராமன். அப்போதுதான் அவரது கார் ஓட்டுநரை காணவில்லை என்பது தெரியவந்தது. போலீசார், பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் தேடியும் ஓட்டுநர் எங்கிருக்கிறார் என கண்டுபிடிக்கமுடியவில்லை. அதிகாரிகள் ஓட்டுநருக்கு தொடர்புகொண்டும் அழைப்பு கிடைக்கவில்லை.
இதனால் மத்திய அமைச்சரின் காரில் இருந்த தேசிய கொடியை கழட்டி, அதை மாற்றுக் காரில் பொருத்தி அனுப்புவதற்கும் போலீசார் முயன்றனர். ஆனால் அதனையும் கழற்ற முடியவில்லை.
மறுபக்கம் நிர்மலா சீதாராமன், பார்க்கிங்கில் இருந்து தனது காரின் வருகையை எதிர்பார்த்து, முக்கிய நபர்கள் காரில் வந்து செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வழியில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அவரிடம், கார் ஓட்டுநரை காணவில்லை. அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை. இங்கிருக்கும் சூழ்நிலையை கருதி மாற்று காரில் சென்றுவிடலாம் என தெரிவிக்கப்பட்டது.
https://twitter.com/Kaviit7P/status/1740742420818723236
சுமார் 5-7 நிமிடங்கள் காத்திருந்த நிர்மலா சீதாராமன் பிறகு பாஜக தலைவர் அண்ணாமலையின் காரில் புறப்பட்டுச் சென்றார்.
மத்திய அமைச்சரின் கார் ஓட்டுநர் காணாமல் போனது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில். சிறிது நேரம் கழித்து அந்த கார் ஓட்டுநர் வந்து நிர்மலா சீதாராமனின் காரை எடுத்துச் சென்றதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிட்டு
Video: கேப்டன் வழியில் களமிறங்கி… அவருக்கு இறுதி மரியாதை செய்த ரசிகர்கள்!