சில திரைப்படங்களின் டீசர், ட்ரெய்லர், பர்ஸ்ட் லுக் என்று எதுவானாலும் முதல் பார்வையிலேயே ஈர்க்கும். மிக எளிதாகத் தோற்றமளித்தாலும், பிரமாண்டமான உள்ளடக்கம் நிச்சயம் இருக்கும் என்ற நம்பிக்கையையை ஊட்டும். அவ்வாறிருந்தது ‘நிறம் மாறும் உலகில்’ டீசர். தற்போது இதன் ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது.
நட்டியின் குரல் பின்னணியில் ஒலிக்க, வெவ்வேறு களங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களைச் சுற்றிப் பல கதைகள் நிகழ்வதாக அமைந்திருக்கிறது ’நிறம் மாறும் உலகில்’ ட்ரெய்லர்.
பாரதிராஜா, ரியோ ராஜ், நட்டி நட்ராஜ், யோகிபாபு, சாண்டி மாஸ்டர், ஆர்ஜே விக்னேஷ் காந்த், ரிஷிகாந்த், ஏகன், கனிகா, வடிவுக்கரசி, ஆடுகளம் நரேன், மைம் கோபி, சுரேஷ் மேனன், சுரேஷ் சக்கரவர்த்தி, ஆதிரா பாண்டிலட்சுமி, விஜி, துளசி, காவ்யா அறிவுமணி, ஐரா, லவ்லின் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.
தேவ் பிரகாஷ் ரீகன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு மல்லிகா அர்ஜுன், மணிகண்ட ராஜா இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
விளம்பரப் பட இயக்குனராக அறியப்படும் பிரிட்டோ ஜேபி இப்படத்தினை எழுதி இயக்கியிருக்கிறார்.
கடந்த ஆண்டே இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்தயாரிப்பு பணிகள் நடந்ததாகச் சொல்லப்பட்டது. இந்நிலையில், அடுத்த மாதம் 7ஆம் தேதியன்று இப்படம் வெளியாவதாக ட்ரெய்லரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உருவம் தரும் நீ உன் தலையெழுத்து பெண்ணாக பிறந்துவிட்டாயே’ என்று அம்மாவை நினைத்து ஒரு மனிதன் உருகுவதாக அமைந்துள்ளது ட்ரெய்லரின் பின்னணி.
அதனால் அம்மா சென்டிமெண்டை வித்தியாசமான கோணத்தில் இப்படம் அணுகுவதாகத் தெரிகிறது.
வடிவுக்கரசி, ஆதிரா, விஜி, துளசி ஆகியோர் இப்படத்தில் முதிர்ந்த பெண் பாத்திரங்களாகத் தோன்றியுள்ளனர்.
இவர்களில், ட்ரெய்லரில் நட்டி குறிப்பிடும் ‘அம்மா’ யார் என்று தெரியவில்லை. மும்பை, வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், சென்னை, திருத்தணி என்று ஐந்து இடங்களில் கதை நிகழ்வதாக, கடந்த ஆண்டு வெளியான பேட்டியொன்றில் குறிப்பிட்டிருந்தார் இயக்குனர் பிரிட்டோ.
ஒரு முதியவரும் இளம்பெண்ணும் சந்திப்பதாகவும், அப்போது அப்பெண்ணிடத்தில் நான்கு கதைகளை அந்த வயதான முதியவர் சொல்வதாகவும் இதன் திரைக்கதை அமைந்திருப்பதாகச் சொல்லியிருந்தார்.அதற்கான கூறுகள் ட்ரெய்லரில் தெரிந்தாலும், அதனை மீறி முக்கியமான சமூகப்பிரச்சனையொன்று இதில் இருப்பதாகத் தெரிகிறது.
சர்வதேசப் பெண்கள் தினத்தையொட்டி வரும் 7ஆம் தேதியன்று வெளியாவதால், இப்படம் தாய்மார்களின் பன்முகப் பரிமாணத்தைப் பறைசாற்றுவதாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
அதனை எந்தளவுக்குப் பார்வையாளர்களின் வாழ்வுக்கு நெருக்கமானதாக, அவர்கள் கண்டு ரசிப்பதாக அமையப்பெறும்போது இப்படம் பெரிய வெற்றியைப் பெறும்.அந்த மாயாஜாலத்தை செய்கிற அளவுக்குத் தொழில்நுட்ப உள்ளடக்கம் சிறப்பாக இருப்பதாக உணர்த்துகிறது ‘நிறம் மாறும் உலகில் ‘ட்ரெய்லர்.
உண்மையில் நாம் எதிர்பார்த்ததைவிட அதிகமான திரையனுபவத்தை இப்படம் தரக்கூடும். அதற்கான நம்பிக்கையை வலுவாக்கியிருக்கிறது ‘நிறம் மாறும் உலகில்’.