நிறம் மாறும் உலகில்: விமர்சனம்!

Published On:

| By uthay Padagalingam

Niram Marum Ulagil Movie Review 2025

ஓடிடியில் வரவேற்பைப் பெறுவது நிச்சயம்! Niram Marum Ulagil Movie Review

‘நிறம் மாறும் உலகில்’ படம் வெளியாகி கிட்டத்தட்ட பத்து நாட்களாகிவிட்டன. கடந்த வியாழக்கிழமையன்றுதான் அதனைப் பார்க்கச் சென்றேன். திரையில் படம் ஓடத் தொடங்கிவிட்டது. எனக்கு முன்னே சென்ற ஒரு பெண்மணி இருளில் நடக்க முடியாமல் தடுமாறினார்.

மொபைலில் டார்ச் லைட் அடித்து வழி காண்பிக்க, அவரது இருக்கையைத் தேடிச் சென்றார். ‘தனியாக ஒரு புதிய திரைப்படத்தைக் காண இந்த பெண்மணிக்கு அப்படியென்ன ஆர்வம் இருக்க முடியும்?’ என்று யோசித்தேன். கண்டிப்பாக அவரது வயது அறுபதுக்கு மேலிருக்கும் என்பதை அவரது குரல் உணர்த்தியிருந்தது. அதற்கான பதிலைப் படம் தந்தது. Niram Marum Ulagil Movie Review

நிறம் மாறும் உலகில்’ தந்த திரையனுபவம் எத்தகையது?

’ஐந்து’ கதைகள்! Niram Marum Ulagil Movie Review

விஜி (விஜி சந்திரசேகர்) என்ற பெண்மணியின் ஒரே மகள் அபி (லவ்லின்). கடந்த பிறந்தநாளன்று பாய் ப்ரெண்ட் உடன் நெருக்கம் பாராட்டிய மகளைத் திட்டுகிறார் விஜி. அதிலிருந்து ஓராண்டாகத் தாயுடன் அபி பேசுவதில்லை. இந்த பிறந்தநாளின்போது, மீண்டும் தாயுடன் அவர் முரண்படுகிறார்.

தன்னுடைய உடைமைகளை எடுத்துக்கொண்டு சென்னையில் இருந்து விசாகப்பட்டினம் செல்லும் ரயிலில் ஏறுகிறார். அங்கிருக்கும் தோழியின் வீட்டுக்குச் செல்வதுதான் அவரது திட்டம். ஆனால், பாதியிலேயே தனது பயணத்தை முடித்துக்கொண்டு அவர் வீடு திரும்ப வேண்டியதாகிறது. அதற்குக் காரணம், ரயிலில் அவர் சந்திக்கும் டிக்கெட் பரிசோதகர் (யோகிபாபு). Niram Marum Ulagil Movie Review

அபியின் பேச்சு, பார்வை, மொபைலில் வரும் அழைப்புகளை வைத்து தாயிடம் சண்டையிட்டு வந்திருப்பதை அவர் அறிகிறார். தான் கேட்ட, பார்த்த, அறிந்த நான்கு கதைகளைச் சொல்கிறார்.

நான்கிலும் ‘தாய் பாசம்’தான் முதன்மையாக இருக்கிறது.

மும்பையில் உள்ள காமத்திப்புராவில் பாலியல் தொழிலாளியாக இருக்கும் ஒரு பெண்மணியின் மகன் பெரிய ‘கேங்க்ஸ்டர்’ ஆகிறார். தமிழ்நாட்டில் இருந்து மும்பைக்கு தப்பியோடும் ஒரு காதல் ஜோடியால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. ஆனால், அவர்கள் இருவரும் அப்பாவிகள். அவர்களைக் காப்பது அவரது ‘தாய்பாசம்’.

துவரக்குறிச்சியில் வாழும் ஒரு வயதான தம்பதியரை அவரது இரு மகன்களும் கவனிக்காமல் இருக்கின்றனர். அவர்களது வாழ்க்கைச்சூழலும் அதற்கொரு காரணம். அந்த வேதனையை மனதில் சுமக்க முடியாமல் தடுமாறுகிற அந்த தம்பதியர் என்னவானார்கள் என்று சொல்கிறது இன்னொரு கதை.

காமேஸ்வரம் எனும் ஊரில் கடற்படையினரின் துப்பாக்கிச்சூட்டுக்குப் பலியான ஒரு மீனவனின் மனைவி தனது ஒரே மகனுக்காகத் தன் சொந்த விருப்பு வெறுப்புகளை வீசியெறிகிறார். சில ஆண்டுகள் கழித்து, அந்த தாய்க்கு ஒரு பாதிப்பு என்றவுடன் அந்த மகன் என்ன செய்கிறார் என்பதைச் சொல்கிறது மூன்றாவது கதை.

தனக்கென்று சொந்தங்கள் இல்லாத ஒரு ஆட்டோ டிரைவர், முதியோர் இல்லத்தில் இருக்கும் ஒரு பெண்மணியைத் தற்செயலாகச் சந்திக்கிறார். அவரைத் தனது தாயாகத் தத்தெடுக்கத் தயாராகிறார். அது, அவர் விரும்புகிற பெண்ணுக்கு ஏற்புடையதாக இருக்கிறதா, இல்லையா என்று சொல்கிறது நான்காவது கதை.

ஆக, மொத்தம் ஐந்து கதைகள் இந்த படத்தில் இருக்கின்றன. இதில் ஒரு கதையில் மட்டுமே தந்தை இருக்கிறார். அவரும் தனது மனைவியிடம் ‘தாய்பாசத்தை’ ஒத்த அன்பை வெளிப்படுத்துவதாகக் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. Niram Marum Ulagil Movie Review

இந்தக் கதைகள் காட்சியாக்கம் செய்யப்பட்டிருக்கும் விதம் ‘உலக சினிமா’ மொழியை ஒத்ததாக உள்ளன. அந்த திரைமொழி ஒரு செறிவான காட்சியனுபவத்தைத் தருகின்றன.

செறிவான உள்ளடக்கம்! Niram Marum Ulagil Movie Review

புதுமுக இயக்குனரான ஜேபி பிரிட்டோ உருவாக்கியிருக்கிற ‘நிறம் மாறும் உலகில்’ படத்தில் சுமார் இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமகாலத்தில் நிகழ்வதாகக் காட்டப்படுகிற காட்சிகளில் விஜி சந்திரசேகர், லவ்லின், யோகிபாபு தோன்றியிருக்கின்றனர். Niram Marum Ulagil Movie Review

முதல் கதையில் நட்டி சுப்பிரமணியம், கனிகா, ரிஷிகாந்த், காவ்யா அறிவுமணி, ஆடுகளம் நரேன், சுரேஷ் மேனன் தோன்றியிருக்கின்றனர். ஆக்‌ஷன் காட்சிகளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் என்றாலும், அதன் பின்னணியில் தாய் பாசம் இருப்பதை வலுவாகக் காட்டியிருக்கிறது இந்தப் பகுதி.

இரண்டாவது கதையில் பாரதிராஜா, வடிவுக்கரசி பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர். அவர்களது சிறு வயது சம்பந்தப்பட்ட காட்சிகளில் முல்லை அரசியும் ஏகனும் தோன்றியிருக்கின்றனர். நால்வரது நடிப்பும் ஒரு கதையின் இரண்டு முனைகளை நாம் காணச் செய்திருக்கிறது. Niram Marum Ulagil Movie Review

மூன்றாவது கதையில்  ரியோராஜ், மைம் கோபி, ஆதிரா, ஆர்ஜே விக்னேஷ்காந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

நான்காவது கதை மட்டுமே கொஞ்சமாக நம்மைச் சிரிக்க வைக்கக்கூடியது. இதில் சாண்டி மாஸ்டர், துளசி, நமோ நாராயணா, லிசி ஆண்டனி, ஐரா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  

இக்கதைகளில் நடித்தவர்கள் தங்களது பங்கை உணர்ந்து சிறப்பான பங்களிப்பை வழங்கியிருப்பது, இப்படத்தில் செறிவான உள்ளடக்கம் இருப்பதை உணர்த்துகிறது.

ஒவ்வொருவரும் தங்களது திறனைக் காட்டும் அளவுக்கு அக்காட்சிகளும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. குறைந்த ஷாட்களில் அவர்கள் ஏற்ற பாத்திரங்களின் தன்மை வீரியத்துடன் திரையில் வெளிப்பட்டிருப்பதே இப்படத்தின் சிறப்பு. அதற்கான மெனக்கெடல் நிச்சயம் பாராட்டுக்குரியது.

இதில் ஒளிப்பதிவாளர்கள் மல்லிகா அர்ஜுன், மணிகண்ட ராஜா, படத்தொகுப்பாளர் தமிழ் அரசன், கலை இயக்குனர்கள் எஸ்.ஜே.ராம், தினேஷ், சுபேந்தர் மற்றும் ஒப்பனை, ஆடை வடிவமைப்பு, ஒலி வடிவமைப்பு, டிஐ, விஎஃப்எக்ஸ் என்று பல நுட்பங்களைக் கையாண்ட கலைஞர்களின் பங்களிப்பானது இயக்குனர் பிரிட்டோவின் மனதிலிருந்த கற்பனை உலகத்திற்கு உருவம் தந்திருக்கின்றன.

குறிப்பாக, இசையமைப்பாளர் தேவ் பிரகாஷ் ரீகன் அதில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார். ’போய் வாடி’, ‘ஆழி’ பாடல்கள் மெல்லிசையாய் மனதைத் தொட, கிளைமேக்ஸ் பகுதியில் வரும் ‘ரங்கம்மா’ நம்மைக் குதூகலப்படுத்துகிறது.

இப்படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியையும் ‘விளம்பரப் படம்’ போன்று வடிவமைத்திருக்கிறார் இயக்குனர் பிரிட்டோ ஜேபி. அந்த காட்சியாக்கத்தில் ‘அம்மா சென்டிமெண்டை’ திரையில் சொல்வதென்பது அரிதான விஷயம்.

அதிலும் கேங்க்ஸ்டர், ட்ராமா, ஆக்‌ஷன், ரொமான்ஸ் வகைமையில் கையாளப்பட்ட திரைக்கதை ட்ரீட்மெண்ட் உடன் நான்கு கதைகளையும் உலக சினிமாவுக்கான திரைமொழியில் சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது. ஓடிடியில் இப்படம் வெளியாகும்போது, அந்த ஒரு அம்சமே பாராட்டுகளைக் குவிக்கும். ‘அது நிச்சயம் நிகழும்’ என்கிற நம்பிக்கை, இப்படம் பார்த்து முடிந்ததும் மனதுக்குள் எழுந்தது.

பிரிட்டோவின் காட்சியாக்கத்திலும் காட்சியமைப்பிலும் சில லாஜிக் மீறல்கள் இருக்கின்றன. யதார்த்தமான காட்சியமைப்பு என்றாலும், காட்சி சித்தரிப்பில் சினிமாத்தனம் நிறையவே இருக்கின்றன. கூடவே, இதில் சொல்லப்பட்டிருக்கும் ‘அம்மா செண்டிமெண்ட்’டும் ‘அதீதம்’ என்றளவிலேயே உள்ளது. அது ஒரு குறைதான். ஆனால், இப்படத்தைக் காணாமல் தவிர்க்கும் அளவுக்கு அது விஸ்வரூபமெடுக்கவில்லை.

இப்படத்தைப் பார்த்து முடிக்கும்போது மனதுக்குள் இதமான உணர்வு ஏற்படுவது நிச்சயம். காரணம், ‘சினிமா உள்ளவரை தாய் பாசத்திற்கு இடமுண்டு’ என்ற எண்ணம் நம்முள் வேரூன்றுவது தான்.

படம் பார்த்து வெளியே வந்தபோது, அங்கிருந்த சிலரில் குறிப்பிடத்தக்க அளவில் அறுபது வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண்களைக் காண முடிந்தது. அவர்களில் சிலர் ஜோடியாகவே வந்திருந்தனர்.

நல்ல நோக்கோடு, உழைப்போடு, காதலோடு உருவாக்கப்படுகிற திரைப்படங்கள் அதற்குரிய பார்வையாளர்களை நிச்சயம் பெற்றுவிடும். சில நேரங்களில் அதில் காலதாமதம் ஏற்படலாம். ஆனாலும், வெற்றி நிச்சயம் என்பதற்கான உதாரணங்களில் ஒன்றாக ‘நிறம் மாறும் உலகில்’ மாறினால் நன்றாக இருக்கும்..! Niram Marum Ulagil Movie Review

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share