உதயசங்கரன் பாடகலிங்கம்
’திரைப்படம் என்பது வணிகமா, கலையா என்ற விவாதம் ஒருபுறம் இருக்கட்டும். முதலில் ஒரு திரைப்படம் என்பது ரசிகர்களுக்கு ஏதோ ஒருவகையில் பயனுள்ளதாக இருக்க வேண்டும்’ என்று வாதிடுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
புதிதாக ஒன்றைச் சொல்வதாகவோ, அம்மக்கள் மனதில் இருக்கும் குறைகளைப் பகிரங்கப்படுத்துவதாகவோ, அவர்களது வாழ்வைப் பேசுவதாகவோ, அன்றாட வாழ்வின் துயரங்களில் இருந்து அவர்களை ஆசுவாசப்படுத்துவதாகவோ, இன்ன பிறவாகவோ அப்பயன்கள் அமையலாம். அதேநேரத்தில், அத்திரைப்படம் சுவாரஸ்யமாகவும் இருப்பது அவசியம்.
அதனாலோ என்னவோ, ரொம்பவே சீரியசான பிரச்சனைகளைச் சிரிக்கவும் ரசிக்கவும் ஏற்றபடியாகக் காட்சிப்படுத்துவதை ரசிகர்கள் ஆர்வத்துடன் வரவேற்கின்றனர். இது எல்லா காலத்திற்கும் பொருந்தும். அந்த வரிசையில் ஒரு முக்கியமான படைப்பாக விளங்குவது எம்.மணிகண்டன் எழுதி இயக்கிய ‘காக்கா முட்டை’.
இந்தப் படம் வெளியாகி இன்றோடு 9 ஆண்டுகள் ஆகின்றன.
எளிய மக்களின் வாழ்வு!
சென்னையில் ஆற்றங்கரையோரப் பகுதியிலுள்ள ஒரு குடியிருப்பு பகுதி. அங்கு ஆஸ்பெஸ்டாஸ் கூரை கொண்ட ஒரு வீட்டில் வசிக்கின்றனர் இக்கதையின் நாயகர்கள். பத்து வயது, 6 வயது மதிக்கத்தக்க அச்சிறுவர்களை அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் பெரிய காக்கா முட்டை, சின்ன காக்கா முட்டை என்றழைக்கின்றனர்.
கோழி முட்டை வாங்கக் காசில்லாமல் காக்கா முட்டையை எடுத்துவந்து சாப்பிடுவார்கள் என்ற தகவல் அதன் பின்னிருக்கிறது. அவர்கள் இருவரும் அந்த வீட்டில் தாய் மற்றும் தந்தை வழிப் பாட்டியுடன் வசிக்கின்றனர். தந்தை சிறையில் இருக்கிறார்.
ஒருநாள் அவர்கள் இருக்கும் பகுதியில் ஒரு பீட்சா கடை திறக்கப்படுகிறது. அங்கு சென்று, அந்த பீட்சாவைச் சாப்பிட வேண்டும் என்பதே அவர்களது ஆசை. தாயால் அதற்கான காசைத் தர முடியாத நிலைமை. அந்த அளவுக்கு அவரது சம்பளம் வீட்டுச் செலவுக்கே போதாததாக உள்ளது.
அருகிலுள்ள ரயில்வே தண்டவாளப் பகுதியில், அவ்வப்போது சரக்கு ரயிலில் இருந்து இறக்கப்படும் நிலக்கரி மூட்டைகளில் இருந்து கீழே விழும் துண்டுகளை எடுத்து வந்து, ஒரு கடையில் கொடுத்து காசாக்கி வருகின்றனர் அச்சிறுவர்கள். அதையே முழுநேரமாகச் செய்து நிறைய காசு பெற்று பீட்சா வாங்கலாம் என்று நினைக்கின்றனர். ‘பீட்சா வாங்கப் பணம் மட்டும் போதாது; அக்கடைக்குச் செல்ல நல்ல உடையும் வேண்டும்’ என்று அதற்காகவும் பாடுபடுகின்றனர்.
இறுதியாக, அந்த கடைக்குள் செல்ல முயலும்போது காவலாளி அவர்களைத் தடுக்கிறார். ‘எங்களிடம் காசு இருக்கிறது’ என்கின்றனர் அந்த சிறுவர்கள். அப்போதும் காவலாளி அவர்களைத் தடுக்க, என்ன ஏதென்று கேட்காமல் அவர்களை அடித்துவிடுகிறார் சூப்பர்வைசர். அதனை அவர்களுடன் வந்த சிறுவர் கூட்டமொன்று வீடியோவில் பதிவு செய்துவிடுகிறது.
அவமானம் தாங்காமல் அந்த சிறுவர்கள் வீடு திரும்புகின்றனர். அந்த நேரத்தில், அவர்களது பாட்டி மரணமடைந்த தகவல் தெரிய வருகிறது. சில தினங்கள் கழித்து, அந்த சிறுவர்களை சூப்பர்வைசர் அடித்த வீடியோ மெல்ல அந்தப் பகுதியில் பரவுகிறது. அதனைக் கையிலெடுத்துக்கொண்டு, பீட்சா கடை உரிமையாளரை மிரட்டிப் பணம் பறிக்க இரண்டு பேர் முயற்சிக்கின்றனர்.
அப்போதுதான், அந்த விஷயம் பூதாகரமாகக் காத்திருப்பது அந்த கடை உரிமையாளருக்குத் தெரிய வருகிறது. அதனைத் தடுத்தால் மட்டுமே தனது கடையின் மீது அவப்பெயர் விழாது என்றெண்ணும் அவர், அந்த சிறுவர்களைக் கடைக்கு அழைத்துவந்து சமாதானப்படுத்தத் திட்டமிடுகிறார்.
அதையடுத்து போலீசார், அப்பகுதி எம்.எல்.ஏ.வின் ஆட்கள், கடை உரிமையாளரிடம் பேரம் பேசிய இருவர் உட்படப் பலரும் அச்சிறுவர்களைத் தேடிச் செல்கின்றனர். ஆனால், அந்த நேரத்தில் அச்சிறுவர்கள் வீட்டில் இல்லை.
அவர்கள் எங்கு சென்றார்கள்? என்னவானார்கள்? இறுதியில் என்ன நடந்தது என்பதோடு ‘காக்கா முட்டை’ முடிவடைகிறது.
புதிய அடையாளம்!
தொழில்முறை நடிகர்கள் அல்லாதபோதும், இதில் நடித்த விக்னேஷ், ரமேஷ் என்ற இரு சிறுவர்களும் அற்புதமான நடிப்பைத் தந்திருந்தனர். இவர்கள் இருவருமே தற்போது சில படங்களில் நடித்து வருகின்றனர். ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு திறமையான நடிகை என்பதனைத் திரையுலகினருக்குத் தெரிய வைத்த படம் ‘காக்கா முட்டை’. அதனால் சக நடிகைகள் பலருக்கு அவர் மீது மரியாதை அதிகமானது.
அதேநேரத்தில், இப்படத்திற்குப் பிறகு குழந்தைகளுக்கு அம்மாவாகத்தான் நடிக்க வாய்ப்பு வரும்’ என்ற கோடம்பாக்கத்து பண்டிதர்களின் கணிப்பையும் அவர் பொய்யாக்கினார். பலவிதமான பாத்திரங்களில் நடித்து மக்களின் அபிமானத்தைப் பெற்றவர், இன்றுவரை அதனைத் தொடர்ந்து வருகிறார்.
‘காக்கா முட்டை’ பாட்டி என்று சொல்லும் அளவுக்கு அவ்வேடத்தில் நடித்த சாந்தி மணி புகழ் பெற்றார். இவர் நிறைய பாடல்கள் எழுதி வைத்திருக்கிறார் என்பது உபரித் தகவல். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் தன் முகம் தெரியாதா என்று ஏங்கியவருக்குப் புதிய அடையாளத்தைத் தந்தது இப்படம்.
‘கும்கி’யில் வந்த ஜோ மல்லூரியை இப்படம் ‘பழரசம்’ ஆகக் காட்டியிருந்தது. ‘எனக்கே விபூதி அடிக்கப் பார்த்தேள்ல’ என்று சொன்ன யோகிபாபுவும், அதனைக் கேட்டு பம்மிய ரமேஷ் திலக்கும் தமிழில் மிக முக்கிய நடிகர்களாக உருமாறினார்கள்.
பாபு ஆண்டனி, முத்துக்குமார், கிருஷ்ணமூர்த்தி என்று பல படங்களில் நாம் பார்த்த கலைஞர்கள், இதில் சிறு வேடத்தில் தோன்றியிருந்தனர். சிம்புவும் கௌரவ தோற்றத்தில் வந்து போயிருந்தார். இவர்கள் அனைவரையும் நினைவுகூரும் வகையில், அப்பாத்திரங்களைச் சிறப்பாக வடித்திருந்தார் இயக்குனர் எம்.மணிகண்டன்.
அது மட்டுமல்லாமல் ஏழ்மையில் வாடும் மக்கள், அவர்களை இளக்காரமாக நோக்கும் இன்னொரு பிரிவினர், அதிகார துஷ்பிரயோகம், பணத்திற்காக எதையும் செய்யத் துணியும் சிலரது இயல்பு, அவர்களுக்கு நடுவே வாழ்வை வெள்ளந்தியாக அணுகும் சில மனிதர்கள் என்று இக்கதையின் கூறுகளைப் பிரச்சாரத் தொனியின்றி வெகு சுவாரஸ்யமாகத் திரையில் சொல்லியிருந்தார்.
மௌனத் தருணங்களுக்கு இடம் தந்த கிஷோரின் படத்தொகுப்பு, யதார்த்தத்தைப் பிரதிபலிக்க முயன்ற மணிகண்டனின் ஒளிப்பதிவு, திரைப்படத்திற்கான பிரமாண்டத்தை ரசிகர்கள் மனதில் உருவாக்க முயன்ற ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசை என்று பல அம்சங்கள் இப்படம் தந்த சிறப்பான காட்சியனுபவத்திற்குப் பின்னே இருந்தன.
இந்த படத்தில் ஆனந்த் அண்ணாமலை – ஆனந்த் குமரேசனின் வசனங்கள் இயல்பாகவும் கூர்மையாகவும் இருக்கும். இவர்களில் ஆனந்த் அண்ணாமலை நடிகர் விஜய் தேவரகொண்டாவை இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. அதன்பின், அந்த படம் கைவிடப்பட்டது. அதற்கான காரணம் தெரியவில்லை. யோகிபாபு, கிஷோர், இளவரசு, லிஜி மோள் உள்ளிட்டோர் நடிப்பில் இவர் இயக்கியுள்ள ‘காகங்கள்’ வெளியாவது தாமதமாகியுள்ளது.
போலவே, ஆனந்த் குமரேசன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்த ‘வசந்தகுமாரன்’ படமும் கைவிடப்பட்டது. இப்படிப் பலரையும் அவரவர்க்கான தனித்துவ அடையாளங்களோடு நினைவுகூர வைப்பதே ‘காக்கா முட்டை’ படத்தின் சிறப்பு.
இன்னும் எதிர்பார்க்கிறோம்..!
’காக்கா முட்டை’ தந்த கையோடு ’குற்றமே தண்டனை’, ‘ஆண்டவன் கட்டளை’, ‘கடைசி விவசாயி’ படங்களைத் தனித்துவ முத்திரையோடு தந்திருக்கிறார் எம்.மணிகண்டன்.
’கிருமி’ படத்தில் ‘ஸ்கிரிப்ட்’ எழுதியிருக்கிறார். வித்தியாசமான மனிதர்களை, களங்களை, பிரச்சனைகளைச் சொல்வது அவரது படங்களின் சிறப்பு. அது மட்டுமல்லாமல் எளிமையும் அழகும் அவரது காட்சியாக்கத்தில் பிணைந்திருக்கும்.
அதுவே ‘உங்களிடம் இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் மணிகண்டன்’ என்று ரசிகர்களைச் சொல்ல வைக்கிறது. பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ‘காக்கா முட்டை’, உங்களிடம் இருந்து இன்னும் பல படைப்புகள் வெளியாவதற்கான சூழலை உருவாக்கட்டும்!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…