நெருப்பாய் சுடும் காதலா?! Nilavuku Enmel Ennadi Kobam Review
உதயசங்கரன் பாடகலிங்கம்
இருபதுகளில் இருக்கும் இளையோர் கூட்டம் திரையை மொய்க்கிற மாதிரி ஒரு திரைப்படத்தைப் பார்த்து எத்தனை நாட்களாகிவிட்டது. அந்த எண்ணத்தைத் தவிடுபொடியாக்கும்விதமாக, ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை அறிவித்தார் நடிகர் தனுஷ். அவர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தில் புதுமுகங்கள் பவிஷ், ரபியா கதூன், ரம்யா ரங்கநாதன் உடன் மலையாளத் திரையுலகைச் சேர்ந்த மேத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். Nilavuku Enmel Ennadi Kobam Review
ஜி.வி.பிரகாஷ் இசையில் ‘கோல்டன் ஸ்பாரோ’, ’ஏடி’, ‘காதல் பெயிலு’ பாடல்கள் ஏற்கனவே வைரல் ஆகிவிட்டன. அது மட்டுமல்லாமல், இதன் ட்ரெய்லரில் ‘ஜாலியா வாங்க.. ஜாலியா போங்க..’ என்று தனுஷ் சொன்னது வேறு இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துவிட்டது.
தொடர் சிரிப்பலையை எழுப்புவதோடு காதலும் சோகமும் நிறைந்ததொரு படமாக இருக்குமென்ற எண்ணத்தை விதைத்தது. தற்போது இப்படம் தியேட்டரில் வெளியாகியிருக்கிறது.
எப்படி இருக்கிறது ‘நிலவுக்கு என்னடி என்மேல் கோபம்’ திரைப்படம்?

எக்ஸுக்கு கல்யாணம்..! Nilavuku Enmel Ennadi Kobam Review
’காலேஜ் முடிச்சவுடனே கல்யாணமாடா’ என்று 90’ஸ் கிட்ஸ் புலம்பும் அளவுக்கு ‘அட்ராசிட்டி’ பண்ணுகிற 2கே கிட்ஸ். அவர்களைச் சுற்றியே நகர்கிறது ‘நி.எ.எ.கோ.’ கதை.
காதலைச் சொன்னால் பார்ட்டி, லவ்வர் கூட சண்டையிட்டால் பார்ட்டி, சேர்ந்தால் பார்ட்டி என்று கொண்டாட்டமே வாழ்க்கை என்றிருக்கும் ஒரு இளங்கூட்டம். பொருளாதார அளவில் கொஞ்சம் மேல்மட்டத்தைச் சேர்ந்தவர்களின் அக்கூட்டத்தில் நடுத்தரவர்க்க குடும்பத்தைச் சேர்ந்த நாயகனும் அவரது நண்பனும் இணைகின்றனர். அங்கு நாயகனுக்கு ஒரு நாயகி கிடைக்கிறார். இருவரும் காதலில் உருகித் தவிக்கின்றனர் என்பதைத் தனியே சொல்ல வேண்டுமா?
நல்லபிள்ளையாகத் திரியும் நாயகன், காதலியிடம் காதலைத் தெரிவிப்பதற்கு முன்னரே தனது பெற்றோரிடம் உண்மையைச் சொல்லிவிடுகிறார். பின்னர், காதலியை அழைத்துவந்து அவர்களிடம் அறிமுகப்படுத்துகிறார். ‘அதேபோல நீயும் இவனை உன்னோட அப்பாகிட்ட அழைச்சிட்டு போயேன்’ என்கின்றனர் நாயகனின் பெற்றோர்.
நாயகி தனது தந்தையிடம் காதலனை அறிமுகப்படுத்துகிறார். ஆனால், நாயகனை அவருக்குப் பிடிப்பதில்லை. முதல் பார்வையே கோணலாகிவிடுகிறது. ஒருகட்டத்தில் காதலிக்காக அவரது தந்தையின் அலப்பறைகளைத் தாங்கிக்கொள்ள வேண்டுமா என்று யோசிக்கிறார் நாயகன். அப்போது, அவருக்கு ஒரு உண்மை தெரிய வருகிறது.
அதன்பின், காதலியை விட்டுச் சிலகாலம் ஒதுங்கி வாழ முடிவெடுக்கிறார் நாயகன். அதற்குள் எல்லாம் தலைகீழாகிவிடுகிறது. நாயகியின் தந்தை இறக்க, அவர் எங்கோ சென்றுவிடுகிறார்.
சரியாக ஓராண்டு கழித்து, காதலியின் திருமண அழைப்பிதழைப் பார்க்கிறார் நாயகன். அந்த திருமணத்தை நேரில் பார்க்கத் தயாராகிறார். நாயகனின் நண்பனோ ‘எக்ஸ் கல்யாணம் பண்ணிக்கறதை பார்த்து நீ எப்படிடா பீல் பண்ணாம இருப்ப’ என்கிறார். அதற்கு, ‘நான் இருப்பேண்டா’ என்று தெனாவெட்டாக சொல்கிறார் நாயகன்.
சொன்னபடியே நாயகனால் நடந்துகொள்ள முடிந்ததா? முன்னாள் காதலியைப் பார்த்ததும் மீண்டும் அந்த நினைவுகள் அவரைத் துரத்தினவா? அந்த காதலி அவரை எப்படி எதிர்கொண்டார்? இப்படிச் சில கேள்விகளுக்குப் பல கிளைக்கதைகளுடன் பதிலளிக்கிறது இப்படத்தின் மீதி.
‘எக்ஸுக்கு கல்யாணமாப்பா’ என்று ’நி.எ.எ.கோ’ படத்தின் கதையை ஒருவரியில் சொல்லிவிட முடியுமென்றாலும், கிளைக்கதைகள் சேர்த்த வகையில் சுவாரஸ்யம் கூட்டியிருக்கிறார் இயக்குனர் தனுஷ். Nilavuku Enmel Ennadi Kobam Review
உண்மையைச் சொன்னால், அவைதான் இப்படத்தின் ’ப்ளஸ்’களாக இருக்கின்றன.
இந்தப் படத்தில் நாயகியின் பெயர் நிலா. நாயகனின் பெயர் பிரபு. அதனால், ’டைட்டிலுக்கு அர்த்தம் இருக்கா’ என்ற கேள்விக்கு இதில் இடமில்லை.

சிரிப்பூட்டும் மேத்யூ! Nilavuku Enmel Ennadi Kobam Review
பிரபு என்ற பாத்திரத்தில் நடித்துள்ள பவிஷ் நல்ல உடற்கட்டு, ஆடும் திறன், வசன உச்சரிப்பு என்று நாயகனாகத் தோற்றமளிக்க மெனக்கெட்டிருக்கிறார். ஆனாலும், அவர் முகம் மனதில் பதிய மாட்டேன் என்கிறது. இந்த நிலையில், இரவில் நிகழ்வதாக வரும் காட்சிகளிலும் அவர் ‘கூலிங் கிளாஸ்’ மாட்டியவாறே வருகிறார். அதற்குப் பின்னால் இருக்கும் குறியீடுகளை ஆராய்ந்து சொல்லத் தனிக்கூட்டம் வருவது நிச்சயம்.
நிலா ஆக வரும் அனிகா சுரேந்திரன், உணர்ச்சியமயமான காட்சிகளில் சட்டென்று கவரும் நடிப்பைத் தந்திருக்கிறார். அதேநேரத்தில் கவர்ச்சியான ஆடை அலங்காரத்தில் அவர் தோன்றுபோது உவப்பாக இல்லை. Nilavuku Enmel Ennadi Kobam Review
’லியோ’வில் விஜய் மகனாக நடித்த மேத்யூ தாமஸ், இதில் பவிஷின் நண்பனாகச் சிறு பாத்திரமாக வந்து போகிறார். ‘இவர் மலையாளத்துல ஹீரோவா அசத்திட்டு வர்றாரே’ என்று யோசித்தால், இரண்டாம் பாதியில் அவரை இன்னொரு நாயகனாக்கி அழகு பார்த்திருக்கிறார் தனுஷ். அந்த காட்சிகளைத் தனது ‘காமெடி ஒன்லைனர்’களால் அழகுபடுத்தியிருக்கிறார் மேத்யூ.
இவர்கள் போக பிரியா பிரகாஷ் வாரியர், ரம்யா ரங்கநாதன், வெங்கடேஷ், ரபியா கதூன் ஆகியோரும் இதிலுண்டு. அவர்களில் வெங்கி – ரபியா ஜோடி தொடக்கத்தில் எரிச்சலூட்டினாலும், பின்பாதியில் நம்மை இருவரும் சிரிப்பில் ஆழ்த்துகின்றனர்.
இதில் நாயகனின் தந்தையாக வரும் சரத்குமார் சில காட்சிகளே வந்தாலும், அவற்றின் தன்மை கெடாமல் தோன்றியிருக்கிறார். ஆடுகளம் நரேன் – சரண்யா ஜோடி சம்பந்தப்பட்ட காட்சிகளில் செயற்கைத்தனம். ஆனாலும், அவர்கள் பேசும் சில வசனங்கள் சிரிக்க வைக்கின்றன.

‘கோல்டன் ஸ்பாரோ’ பாடலுக்கு நடனமாடியிருக்கும் பிரியங்கா மோகன் பெரிதாக நம்மை ஈர்க்கவில்லை. Nilavuku Enmel Ennadi Kobam Review
கலை இயக்குனர் ஜாக்கி உதவியுடன் திரையில் ‘பளிச்’சென்று தெரிகிற வகையிலான பிரேம்களை செதுக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் லியோன் பிரிட்டோ.
படத்தொகுப்பாளர் ஜி.கே.பிரசன்னா, எளிதாகக் கதை திரையில் விரிய வேண்டுமென்ற நோக்கோடு உழைத்திருக்கிறார். Nilavuku Enmel Ennadi Kobam Review
பின்னணி இசை அமைத்துள்ள ஜி.வி.பிரகாஷ்குமார், பின்பாதியில் நம்மைக் காதல் மழையில் நனைய வைக்கிறார். பாடல்கள் ஏற்கனவே ஹிட் என்பதால் தியேட்டரில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.
’இந்தப் படத்தில் தான் முகம் காட்டக் கூடாது’ என்று தொடங்கிப் பல விஷயங்களைப் பார்த்து பார்த்துக் கையாண்டிருக்கிறார் இயக்குனர் தனுஷ்.
‘இந்த கல்யாணத்துல பெரியவங்களே இல்லையே’ என்று கேள்வி எழாத வகையில், வசனத்தின் வழியே அதற்கு விளக்கம் தருகிறார். நாயகி எங்கே போனார் என்று நாயகன் ஏன் தேடிக் கண்டறியவில்லை என்பதை ஒரு வசனத்தின் மூலம் கடந்து போயிருக்கிறார்.
மழையில் நனைவது, ரவுடிகளிடம் இருந்து தப்பிப்பது, காதலை முதலில் தெரிவிக்கும் கணத்தை வடிவமைத்தது, இளம் வயதில் கல்யாண ஏற்பாடு செய்வதற்கான காரணத்தைச் சொல்வது என்று திரைக்கதையில் லாஜிக் மீறல்களைச் சுட்டிக்காட்டிவிடக் கூடாது என்று மெனக்கெட்டிருக்கிறார்.
மேத்யூ, ரபியா, வெங்கடேஷ் பாத்திரங்களை இரண்டாம் பாதியில் அவர் காட்டியிருக்கும் விதம், ரசிகர்கள் தொடர்ந்து தியேட்டரில் சிரிக்க வேண்டும் என்று எண்ணியதைக் காட்டுகிறது.
அது மட்டுமல்லாமல் படத்தின் ஆடை வடிவமைப்பு, ஒலி வடிவமைப்பு தொடங்கி டிஐ, விஎஃப்எக்ஸ் என்று பல விஷயங்களை அபாரமாக ஒருங்கிணைத்திருக்கிறார். என்ன, தொடக்கத்தில் வரும் 20 நிமிடக் காட்சிகளை இன்னும் செறிவானதாக ஆக்கியிருக்கலாம்.
தொடக்கத்தில் வரும் ஒரு பாடல் தேவையற்றதாக இருக்கிறது. போலவே, பல காட்சிகளில் ‘மது போதை தவறானது’ என்று கார்டு போடும் அளவுக்கு அதனைக் காட்சிப்படுத்த வேண்டுமா என்ற கேள்வியும் பலமாக எழுகிறது.
நாயகியைத் திருமணம் செய்பவராக வருபவர் நாயகனைக் கனிவோடு உபசரிக்க, ’இவன் ஏண்டா இவ்ளோ நல்லவனா இருக்கான்’ என்ற வசனத்தை இதர பாத்திரங்கள் மூலமாகச் சொல்லவைத்து தியேட்டரில் சத்தம் எழவிடாமல் தவிர்த்திருக்கிறார் தனுஷ்.
இப்படிச் சில ’ப்ளஸ்’கள் இதிலுண்டு.

அதேநேரத்தில், கதை தட்டையாக ஒரே அடுக்கில் பயணிக்கிறது. பல்வேறு அடுக்குகளைக் கொண்டு அலங்கரிக்கிற உத்தி திரைக்கதையில் இல்லை. பவிஷ் பாத்திரத்திற்கு அதீத முக்கியத்துவம் தரப்பட்டிருப்பதும் ஒரு குறையாகவே தெரிகிறது. இது போன்ற கதைகளில் இதர பாத்திரங்களுக்கும் இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் தரப்படுவது அவசியம்.
கிளைமேக்ஸ் காட்சியை தீர்மானமாக முடிவு செய்துவிட்டு, மொத்தக்கதையையும் அலசி ஆராய்ந்தால் சில மாற்றங்களை மேற்கொண்டிருக்கலாம். அது நிகழவில்லை.
கடந்த ஆண்டு வெளியான ’லவ்வர்’ பட பாணியில் இப்படத்தின் பின்பாதி காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தால் வெடிச்சிரிப்பு தியேட்டரில் எழுந்திருக்கும்.
இப்படிச் சிற்சிற குறைகள் இப்படத்தில் உண்டு.
அதேநேரத்தில், வழக்கத்திற்கு மாறான திரையனுபவத்தைத் தரும் வகையில் இப்படத்தை உருவாக்கியதற்காகத் தனுஷைப் பாராட்டியே தீர வேண்டும்.
மறைந்த பின்னணிப் பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ பாடலில் ‘ஊடல்’ சுவை மேலோங்கி நிற்கும். அதே போன்றதொரு தொனியை மையமாக வைத்துக்கொண்டு இதில் ‘காமெடி கதகளி’ ஆடியிருக்கலாம்; அது நிகழவில்லை.
அத்தகைய கணிப்புகளை, எதிர்பார்ப்புகளைப் புறந்தள்ளிவிட்டால், ‘ஜாலியாக பார்க்கலாம்’ என்ற ரகத்தில் இப்படம் அமையும். Nilavuku Enmel Ennadi Kobam Review
மற்றபடி, ’நெருப்பாய் சுடுகிற, முள்ளாகக் குத்துகிற காதல்’ கதைகளை எதிர்பார்ப்பவர்களுக்கு இப்படத்தின் காட்சியமைப்பும் திரைக்கதை ட்ரீட்மெண்டும் உவப்பானதாக இருக்காது!