நடிப்பிலும் பொது வெளியிலும் போராடும் நிதி அகர்வால்

Published On:

| By Minnambalam Desk

சாதாரணமான சிலர் சினிமாவில் சரித்திரம் படைப்பார்கள். அது சினிமாவின் வியப்பு.

எதிர்பார்க்கப் படுபவர்கள், ரொம்ப காலம் போராடுவார்கள் . அது சினிமாவின் விபரீதம்

ADVERTISEMENT

விபரீதத்தில் சிக்கியவர் நிதி அகர்வால்.

பெரிய படங்களில் நடித்தும் பெரிய இடத்துக்கு வர இன்னும் போராடுபவர்.

ADVERTISEMENT

ஹைதராபாத்தில் பிறந்து பெங்களூரில் வளர்ந்த – இந்தி பேசும் மார்வாடி குடும்பத்துப் பெண்ணான — நிதி அகர்வாலுக்கு, தெலுங்கு, தமிழ் , கன்னடம் மூன்றும் புரியும் (மலையாளம் அறியாது?)

பிசினஸ் மேனேஜ்மேண்ட் படித்தவர். பாலே டான்சில் வல்லவர். (தமிழ்ப் படத்தில் ஆடின மாதிரி தெரியலையே. ஹலோ டைரக்டர்ஸ்…!)

ADVERTISEMENT

கதாநாயகி வேடத்துக்காக முந்நூறு பேர் கலந்து கொண்ட ஆடிஷனில் வெற்றி பெற்று, முன்னா மைக்கேல் என்ற இந்திப் படத்தில் கதாநாயகியாக அறிமுகம். ஆனார்.

படம் முடியும் வரை எப்போது சொன்னாலும் நடிக்க வரவேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு நடித்து முடித்தார்.

ஆனால் அவருக்கு விமர்சகர்களிடம் இருந்து கிடைத்தது எல்லாம் நெகட்டிவ் விமர்சனம்.

சரி, என்று தெலுங்குக்கு வந்தார். நாக சைதன்யாவுடன் நடித்த சவ்யசாச்சி, அகில் அக்கினேனியோடு நடித்த மிஸ்டர் மஞ்சு…. இப்படி பெரிய ஹீரோக்களுடன் நடித்த இரு படங்களும் ஓடவில்லை.

ஆனால் அடுத்து ராம் பொத்தினேனியுடன் நடித்த ஸ்மார்ட் ஷங்கர் என்ற தெலுங்குப் படம் நன்றாக ஓடியது.

சிலம்பரசன் ஜோடியாக ஈஸ்வரன் படத்தில் அறிமுகமானார் . படம் வெற்றி பெறவில்லை. ஜெயம் ரவி ஜோடியாக நடித்த பூமியும் ஓடவில்லை.

மீண்டும் ஹீரோ என்ற தெலுங்குப் படத்தில் அசோக் கல்லா என்ற அறிமுக ஹீரோவுடன் நடித்தார் . அந்தப் படம் வெற்றி பெறவில்லை

உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்த கலகத் தலைவன் படத்தில் கதாநாயகியாக ரொம்ப நம்பிக்கையோடு நடித்தார். படம் முடிவதே ஒரு கலகம் போலாக , நிதி அகர்வாலுக்கு பலனில்லை

மீண்டும் தெலுங்கில், இன்றைய துணை முதல்வர் பவன் கல்யாண் ஜோடியாக இவர் நடித்த படம் ஹரிஹர வீரமல்லு. 2022 ஜனவரி 14 ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்ட இந்தப் படம், எட்டுக்கும் மேற்பட்ட முறைகள் ரிலீஸ் தேதி அறிவித்து அறிவித்து தள்ளித் தள்ளிப் போய், மூன்று வருடம் மூன்று மாதம் கழித்து 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம்தான் ரிலீஸ் ஆனது.

எனினும் விஷுவல் எஃபெக்ட்ஸ் மிக மோசமாக இருக்க, கிளைமாக்ஸ் பகுதியில் பதினைந்து நிமிடங்கள் நீக்கப்பட்டன.

சினிமாவே வேண்டாம் என்று முடிவெடுத்த பவன் கல்யாண், அரசியலில் போய் இந்துத்துவ கொடி பிடித்து துணை முதல்வராகவே ஆகி விட்டார்.

இப்படி இரண்டு துணை முதல்வர்களுடன் ஹீரோவாக நடித்தும், இவருக்கு ஒரு மீடியம் லெவல் கதாநாயகி பதவி கூடாக கிடைக்கவில்லை.

ஹைதராபாத் டைம்ஸ் இதழின் மிகவும் விரும்பத்தக்க பெண்கள் பட்டியலில் பதினோராவது இடம் எட்டாவது இடம் என்று பலமுறை இடம் பிடித்த அழகி.

ஒரு கிரீம் நிறுவன விளம்பரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு அது தரமானது அல்ல என்று உணர்ந்ததும் அதில் நடிக்க மறுத்த மேன்மை குணம் கொண்டவர்.

தன் முயற்சியில் இருந்து சற்றும் மனம் தளராத பெண் விக்கிரமனாய் தொடர்நது முயல்கிறார் .

இந்த நிலையில் ஹைதராபாத்தில் நடந்த ராஜா சாப் என்ற பட விழாவில் ஒரு அநாகரிக கும்பல் அவரை சூழ்ந்து கொண்டு அத்து மீறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

இனிமேலாவது அவருக்கு நல்லது நடக்கட்டும்

சினிமா என்றும் அகர்வால் சுவீட், நிறைய நிதியைக் கொடுக்கட்டும் நிதி அகர்வாலுக்கு .

– ராஜ திருமகன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share