மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான நிக்கோலஸ் பூரன் தனது 29 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று (ஜூன் 10) அறிவித்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Nicholas Pooran retires from international cricket
தற்போதையை மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களில் குறிப்பிடத்தக்க வீரர் நிக்கோலஸ் பூரன்.
கடந்த 2016ஆம் ஆண்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக தனது முதல் சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமானார், கடைசியாக 2024 டிசம்பரில் வங்கதேச அணிக்கு எதிராக போட்டியில் விளையாடினார். 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் அந்த அணியின் கேப்டனாகவும் இருந்தார்.
அதே போன்று 2019ஆம் ஆண்டில் சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமனார். கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் அணியில் இடம்பிடித்திருந்தார். பிரதிநிதித்துவப்படுத்தினார்.
அடுத்தாண்டு இந்தியா மற்றும் இலங்கையில் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் அவர் இன்று சர்வேதச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நிறைய யோசித்த பிறகு, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்க முடிவு செய்துள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட் நிறைய கொடுத்துள்ளது!
மேலும் அவர், “நாங்கள் விரும்பும் இந்த கிரிக்கெட் விளையாட்டு நிறைய கொடுத்துள்ளது. மகிழ்ச்சி, மறக்க முடியாத நினைவுகள் மற்றும் மேற்கிந்திய தீவுகள் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு, அந்த மெரூன் நிறத்தை அணிந்துகொள்வது, தேசிய கீதத்திற்காக நிற்பது, நான் ஒவ்வொரு முறையும் களத்தில் இறங்கும்போது எனக்கு இருந்த அனைத்தையும் கொடுப்பது… அது எனக்கு உண்மையிலேயே எவ்வளவு மகிழ்ச்சி என்பதை வார்த்தைகளில் சொல்வது கடினம். அணியை கேப்டனாக வழிநடத்தியது என் இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும் ஒரு பாக்கியம்.
ரசிகர்களுக்கு – உங்கள் அசைக்க முடியாத அன்புக்கு நன்றி. கடினமான தருணங்களில் நீங்கள் என்னை உயர்த்தினீர்கள், என்னை ஒப்பிடமுடியாத ஆர்வத்துடன் கொண்டாடினீர்கள். என் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அணியினருக்கு – இந்த பயணத்தை என்னுடன் நடத்தியதற்கு நன்றி. உங்கள் நம்பிக்கையும் ஆதரவும் என்னை இவை அனைத்தையும் கடந்து சென்றது.
எனது வாழ்க்கையின் இந்த சர்வதேச அத்தியாயம் முடிவடைந்தாலும், மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் மீதான எனது அன்பு ஒருபோதும் மங்காது“ என பூரன் தெரிவித்துள்ளார்.
இதுவரை 61 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடி 3 சதம் மற்றும் 11 அரைசதத்துடன் 1983 ரன்கள் குவித்துள்ளார். அதேபோன்று 106 டி20 போட்டிகளில் 13 அரைசதங்களுடன் 2275 ரன்கள் குவித்துள்ளார்.
விலகலுக்கு காரணம் என்ன?
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தில் பல ஆண்டுகளாக ஊதியப் பிரச்சனை உள்ளது. பிசிசிஐ, இசிபி உள்ளிட்ட கிரிக்கெட் வாரியங்களுடன் ஒப்பிடும் போது அது மிக மிக குறைவு தான். இதனால் பலர் அந்த அணியில் இருந்து விலகியுள்ளனர்.
அதே வேளையில் பல்வேறு நாடுகளில் நடக்கும் லீக் போட்டிகளின் மூலம் பல மடங்கு அவர்களுக்கு பணம் கொட்டுகிறது. தற்போது நிக்கோலஸ் பூரணின் ஓய்வு முடிவு, நாட்டுக்கு விளையாடுவதை விட லாபகரமான டி20 லீக்குகளுக்கு முன்னுரிமை அளிக்கும் போக்கையே பிரதிபலிக்கிறது.
சமீபத்தில் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி கிட்டத்தட்ட 200 ஸ்ட்ரைக் ரேட்டில் 14 போட்டிகளில் 524 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.