திண்டுக்கல் சிறுமலையில் மர்மபொருள் வெடித்தது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று (மார்ச் 1) விசாரணை நடத்தி வருகின்றனர். NIA investigation Dindigul Sirumalai
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை 17-ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் தனியார் எஸ்டேட்டில் அழுகிய நிலையில், வாலிபர் ஒருவரின் சடலம் இன்று அடையாளம் காணப்பட்டது. இதுதொடர்பாக தகவலறிந்த போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்தில் சோதனை நடத்தி, வாலிபர் உடலை கைப்பற்றினர்.
அப்போது வாலிபரின் உடல் அருகில் பேட்டரி மற்றும் வெடிபொருட்கள் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். எதிர்பாராதவிதமாக வெடிபொருட்களுடன் இணைக்கப்பட்டிருந்த பேட்டரி திடீரென வெடித்தது. இதில் போலீசார் மணிகண்டன், கார்த்தி மற்றும் வனத்துறை அதிகாரி ஆரோக்கிய செல்வம் ஆகியோர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து பயங்கரவாத எதிர்ப்பு படை மற்றும் க்யூ பிரிவு போலீசார் பேட்டரி வெடிகுண்டு வெடித்த இடத்தில் ஆய்வு செய்தனர். அங்கிருந்த இருசக்கர வாகன பேட்டரி மற்றும் 8 ஜெலட்டின் குச்சிகளை அவர்கள் பறிமுதல் செய்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இறந்தவர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த சபு ஜான் என்பது தெரியவந்தது.

மேலும், சபு ஜான் அந்த பகுதியில் நிலத்தை குத்தகைக்கு வாங்கி மிளகு விவசாயம் செய்து வந்துள்ளார். தனது தோட்டத்தில் உள்ள பாறைகளை தகர்க்க வெடிபொருட்கள் வாங்கியுள்ளார். அவர் வெடிபொருட்கள் தயாரித்தபோது, எதிர்பாரதவிதமாக வெடித்துள்ளது. இதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே சபு ஜான் உயிரிழந்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்தநிலையில், சம்பவ இடத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமலையில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டதா? என்ற கோணத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இந்த விசாரணையை முடுக்கியுள்ளனர்.
இந்தநிலையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில்,
“திண்டுக்கல் சிறுமலையில் கண்காணிப்பு கோபுரம் அருகே மர்மப்பொருள் வெடித்து ஒருவர் இறந்து உள்ளதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
NIA, ATS உள்ளிட்ட அமைப்புகள் விசாரித்து வரும் நிலையில், பேட்டரி வயர் மற்றும் வெடி பொருட்கள் உள்ளதால் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா என்ற சந்தேகம் நிலவுவதாக செய்திகள் வருகின்றன.
ஏற்கனவே ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி சென்னையில் NIA-வால் கைது செய்யப்பட்ட நிலையில், ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு என்ற நிலையைத் தாண்டி, பயங்கரவாதம் தலைதூக்கும் அளவிற்கு மக்களின் பாதுகாப்பு முற்றிலுமாக சீர்குலைந்து இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் காவல் துறையை தன்னகத்தே வைத்திருக்கும் ஸ்டாலின், தினம் ஒரு வீடியோ சூட்டிங்கில் பிஸியாக உள்ளார்.
நாடக வீடியோக்கள் மீதான நாட்டத்தை குறைத்து கொண்டு, தமிழ்நாடும் நம் மக்களும் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டுமென்ற உணர்வோடு, முதல்வர் அடிக்கடி சொல்லி காட்டுகின்ற அந்த இரும்புக்கரத்தை இப்போதாவது பயன்படுத்தி செயல்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். NIA investigation Dindigul Sirumalai