சுங்கச்சாவடி கட்டணங்கள் உயர்வு: கதறும் வாகன ஓட்டிகள்!

Published On:

| By christopher

ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல், செப்டம்பர் மாதங்களில் நாடு முழுவதும் இருக்கும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம். ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் குறுக்கிட்டதால் கட்டணம் உயர்த்தப்படவில்லை.

இந்த முறை தேர்தல் நடைபெற்றதால், புதிய கட்டணம் அமலுக்கு வரவில்லை. தேர்தல் முடிவடைந்த பிறகு, பல மாநிலங்களில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் ஒரு முறை பயணம் செய்வதற்கான கட்டணம் மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள சுதந்திர வாடகை வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜூட் மேத்யூ,

“ஒவ்வோர் ஆண்டும் சுங்க கட்டணத்தை உயர்த்தி கொண்டு இருக்கிறார்கள். ஆனால், எந்த வசதியும் இல்லை.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் சென்னை – திருச்சி சாலையில் இருக்கும் சுங்கச்சாவடிகள் மட்டுமே ஓரளவுக்கு நன்றாக இருக்கிறது. பிற வழித்தடங்களில் சுங்கச்சாவடிகள் சிறப்பாக செயல்படுவது இல்லை.

ஒப்பந்ததாரர்களுக்கு ஆதரவாக இதையெல்லாம் செய்கிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்களும், வாடகை வாகனங்களை இயக்குவோரும்தான்.

ஏற்கெனவே எரிபொருள்களின் விலை அதிகமாக இருக்கிறது. சொந்த வாகனங்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இதனால் வாடகை வாகனங்களைப் பயன்படுத்துவது மிகவும் குறைந்து வருகிறது.

இப்படியிருக்கும்போது ஆண்டுதோறும் சுங்க கட்டணத்தை உயர்த்துகிறார்கள். இதை நாங்கள் பயணிகளிடம் இருந்துதான் பெற வேண்டிய சூழல் இருக்கிறது. ஏற்கெனவே தொழில் மிகவும் சுமாராக இருக்கும் சூழலில், இந்தக் கட்டண உயர்வு எங்களை மேலும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.

மேலும், முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றபோது தேவையற்ற இடங்களில் இருக்கும் சுங்கச்சாவடிகளை அகற்றுவதாக கூறினார். மூன்று ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இனியாவது காலம் தாழ்த்தக் கூடாது” என்றார்.

தமிழகத்தில் 36 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. ஒருமுறை சுங்கச் சாவடியை கடந்து செல்வதற்கான கட்டணம் கார், ஜீப், வேன்களுக்கு ரூ.115-ல் இருந்து ரூ.120 ஆக அதிகரித்துள்ளது.

இதேபோல் இலகு ரக வாகனங்களுக்கு ரூ.180-ல் இருந்து ரூ.185 ஆகவும், பேருந்து, டிரக் போன்ற வாகனங்களுக்கு ரூ.365-ல் இருந்து ரூ.375 ஆகவும்,

கனரக வாகனங்களுக்கு ரூ.555-ல் இருந்து ரூ.570 ஆகவும், ஏழு சக்கரம் மற்றும் அதற்கும் அதிகம் எடை கொண்ட வாகனங்களுக்கு ரூ.720-ல் இருந்து ரூ.740 ஆக அதிகரித்துள்ளது.

இதேபோல் 24 மணி நேரத்தில் அதே வழியில் திரும்பச் செல்வதற்கான கட்டணம் முறையே ரூ.180, ரூ.275, ரூ.565, ரூ.855, ரூ.1,110 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராஜ்

டாப் 10 நியூஸ் : பாஜக கூட்டணி முதல்வர்கள் கூட்டம் முதல் தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ் வரை!

கிச்சன் கீர்த்தனா : மாங்கொட்டை ரசம்

பா.ரஞ்சித் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆர்யா… ஹீரோ யார் தெரியுமா?

Share Market: எக்ஸிட் போல் 14 லட்சம் கோடி லாபம்… நிஜ ரிசல்ட் 31 லட்சம் கோடி நட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share