சுங்கக் கட்டணம் உயர்வால் விலைவாசி உயரும் அபாயம்!

Published On:

| By Selvam

NHAI Increases Toll Fee

“சுங்கக் கட்டணம் உயர்வால் சென்னையில் இருந்து மும்பை செல்லும் லாரிகளுக்கு கூடுதலாக 1000 ரூபாய் செலவாகும். இதனால் விலைவாசி உயரும் அபாயம் ஏற்படும் என்பதால் உயர்த்தப்பட்ட சுங்கக் கட்டணத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்” என்று லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 566 இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 55 இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகள்  இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளிலும், ஏப்ரல் 1-ம் தேதி மீதமுள்ள சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.

அதன்படி, நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை 5 முதல் 10 சதவிகிதம் உயர்த்த தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. அதன்படி ஏப்ரல் 1-ம் தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள 55 சுங்கக்சாவடிகளில் 29 சுங்கச்சாவடிகளில் இந்தக் கட்டணம் உயர்வு அமலுக்கு வருகிறது. இந்தக் கட்டணம் உயர்வால் லாரி உரிமையாளர்களுக்கு கூடுதல் செலவு ஏற்படும் என்பதால் உயர்த்தப்பட்ட கட்டணத்தை திரும்ப பெற ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தனராஜ்,

“கடந்த 2019-ம் ஆண்டு முதல் சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் மூலம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஓராண்டுக்கு இந்தியா முழுவதும் சுங்கச்சாவடி மூலம் ரூபாய் 34,525 கோடி  வசூலாகிறது. இதில் பாஸ்டேக் மூலம் மட்டும் 33,274 கோடி ரூபாய் கட்டணம் கிடைக்கிறது.

தற்போது 29 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயருகிறது. தற்போது 5 முதல் 10 சதவிகிதம் கட்டணம் உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தக் கட்டணம் அமலுக்கு வரும்போது சென்னையில் இருந்து மும்பைக்கு லாரி ஒன்றுக்கு கூடுதலாக 1000 ரூபாய் செலவாகும். டீசல் விலை உயர்வால் ஏற்கனவே லாரி தொழில் கடும் சரிவை சந்தித்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை குறைந்தும், மத்திய அரசு டீசல் விலையைக் குறைக்கவில்லை.

பல ஆண்டுகளாக சுங்கச்சாவடிகளுக்கு ஒருமுறை கட்டணம் செலுத்தும் முறையை கொண்டு வர வேண்டும் என்றும், மேலும் 60 கிலோ மீட்டருக்குள் இருக்கும் சுங்கச்சாவடி மற்றும் சென்னை பரனூர் உட்பட ஐந்து காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம்.

எங்கள் குமுறலுக்கு மத்திய அரசு இதுவரை செவி சாய்க்கவில்லை. தமிழகத்தில் 60 கிலோ மீட்டருக்குள் 33 சுங்கச்சாவடிகள் உள்ளன. அவற்றை அகற்ற மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுங்கக் கட்டணம் உயர்வால் விலைவாசி உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உயர்த்தப்பட்ட சுங்கக் கட்டணத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

“ருதுவும் என்னை போல தான்…”: தோனி பகிர்ந்த சுவாரசிய தகவல்!

கிச்சன் கீர்த்தனா: முளைக்கீரை ஊத்தப்பம்

ராஜஸ்தான் அபார வெற்றி… ஆதிக்கம் செலுத்தும் சொந்த மண் அணிகள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share