மே 26ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகிறது ஜெர்ரி பிரக்கெய்மரின் பைரேட்ஸ் ஆஃப் தி கரேபியன்: டெட் மேன் டெல்ஸ் நோ டேல்ஸ் திரைப்படம். இந்த franchise-இன் ஐந்தாவது திரைப்படம் இது. உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்ட ஜேக் ஸ்பேரோவின் இளமைக்கால அடாவடிகளைக் காட்டப்போகும் திரைப்படம் என்பதால் இதன் எதிர்பார்ப்பும் அதிக அளவிலேயே இருக்கிறது. ஆனால், அந்த எதிர்பார்ப்பை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டு பைரேட்ஸ் ஆஃப் தி கரேபியன் ஐந்தாம் பாகத்தை திருடிவிட்டனர் ரேன்சம் வைரஸை பரவவிட்டு திருடும் சைபர் கொள்ளையர்கள்.
டிஸ்னியின் CEO பாப் இகர், நடைபெற்ற திருட்டைப் பற்றி எதுவும் தெரிவிக்காதபோதும் திருடுபோன தகவலை நியூயார்க்கில் நடைபெற்ற மீட்டிங்கின்போது உறுதிபடுத்தியிருக்கிறார். Bitcoin மூலம் பணம் செலுத்தி திரைப்படத்தைப் பெற்றுக்கொள்ளச் சொல்லி பேரம் பேசியிருக்கிறார்கள் திருடர்கள். எவ்வளவு பணம் கேட்கப்பட்டது என்று சொல்லாவிட்டாலும் பெரிய அளவு பணம் கேட்பதாகவும், அதைக்கொடுத்து இந்தத் திருடர்களிடம் அடிபணிவதைவிட மக்களை நம்பி போலீஸிடம் செல்லலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.

ஏற்கனவே, நெட்ஃப்லிக்ஸின் Orange Is The New Black தொடரின் 10 எபிசோட்களை பணம் தர மறுத்ததற்காக இண்டர்நெட்டில் வெளியிட்ட வரலாறு இவர்களுக்கு உண்டு என்பதால், டிஸ்னி நிறுவனம் மிக வேகமாக தனது தரப்பு முயற்சிகளை எடுத்துவருகிறது.
ஃபிலிம் ரோல்களை கையில் எடுத்துச் சென்றவரை இந்தப் பிரச்னைகளெல்லாம் இல்லை. ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சியினால் இண்டர்நெட் மூலம் படங்களை CGI – DI போன்றவற்றுக்காக ஒவ்வொரு நிறுவனத்துக்கும் அனுப்பும்போது அந்நிறுவனங்கள் சரியான பாதுகாப்பு முறையைக் கையாள்கின்றனவா? என்று பார்க்காமல் அவர்களுடன் படத்தை பரிமாறிக்கொள்வதால் தான் இந்த மாதிரி இண்டர்நெட் வெளியீடு நடைபெறுகின்றன.,”