2015-ல் ரிலீஸான FIFA 16, உலகிலேயே அதிகளவில் விற்கப்பட்டுள்ள ஸ்போர்ட்ஸ் கேம் என்ற பெயரைப் பெற்றது. கிட்டத்தட்ட, 150 மில்லியன் காப்பிகள் விற்கப்பட்டு ஆல் டைம் பெஸ்ட் செல்லர் என்ற பெருமையுடன் விளங்கும் இந்த கேமின் அடுத்த வெர்ஷன் FIFA 17. செப்டம்பர் 27ம் தேதி அமெரிக்காவிலும், இந்தியா உட்பட மற்ற நாடுகளில் செப்டம்பர் 29ம் தேதியும் ரிலீஸாகிறது. FIFA 16லேயே கிராஃபிக்ஸ் என சொல்லமுடியாத அளவுக்கு உலக கால்பந்தாட்ட பிளேயர்களின் உருவங்களை டிசைன் செய்திருந்த Electronic Arts, இந்தமுறை தத்ரூபமாக அவர்களையே நேரில் பார்ப்பதுபோல டிசைன் செய்திருக்கிறார்கள்.
பல கேமிங் பிளாட்ஃபார்ம்களிலும் ரூபாய் 3,999 முதல் 3,449 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள FIFA 17ல் சமீப ஆண்டுகளாக ரொனால்டோ, மெஸ்ஸி, சுவாரஸ் போன்ற கால்பந்தாட்டத்தை ஆட்சி செய்துகொண்டிருக்கும் வீரர்களின் படம்தான் இடம்பெற்றிருந்தது. ஆனால் இம்முறை ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ், ரீயஸ், மார்ஷியல், ஹசார்ட் போன்ற முன்னணி கிளப்களில் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் இளம் வீரர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். ‘ஃபுட்பால் மாறவே இல்லை என்று சொல்கிறார்கள். நாங்கள் மாற்றிக் காட்டுகிறோம்’ என்ற விளம்பரத்துடன் வெளியாகியிருக்கும் FIFA 17 டிரெய்லரில் சொல்லியிருப்பதை அதன் கிரியேட்டர்கள் செய்திருப்பார்கள் என்ற நம்பிக்கை, மாறியிருக்கும் அட்டைப் படத்தை வைத்தே ஏற்படுகிறது.