பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி ஐந்தாவது மாதமாக இன்று வரை எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் விரைவில் பாஜக மாநில தலைவர் யார் என்பது தெரியவரும் என்ற நம்பிக்கை கொடுக்கும் அளவுக்கு நேற்று (ஜனவரி 5) பாஜக மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.
இதற்காக டெல்லியில் இருந்து அகில இந்திய இணை அமைப்புப் பொதுச் செயலாளர் சிவபிரகாஷ், தேசிய செய்தித் தொடர்பாளரும் ராஜ்யசபா எம்பியுமான ஜி.வி.எல். நரசிம்ம ராவ் ஆகியோர் கமலாலயத்துக்கு வருகை தந்தனர்.
காலை 11 மணியில் இருந்து மாலை 4 மணிவரை இவர்கள் தமிழக பாஜகவில் இருக்கும் தேசிய, மாநில நிர்வாகிகளிடம் ஓர் அறையில் அமர்ந்து தனித் தனியாக கருத்துக் கேட்டனர். இப்படி கருத்துக் கேட்புக் கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போதே மூத்த ஆர்.எஸ்.எஸ் காரரான ராமநாதபுரத்தைச் சேர்ந்த குப்புராம்தான் அடுத்த தலைவர் என்று ஊடகங்களில் செய்திகள் வர ஆரம்பித்தன. சில ஊடகங்கள் குப்புராமின் வாழ்க்கைக் குறிப்பு என்றும் தகவல்களை வெளியிட ஆரம்பித்தன.
இதுபற்றி கமலாலயத்தில் இருந்த பாஜக நிர்வாகிகளிடம் கேட்டோம்.
“கருத்துக் கேட்புக் கூட்டத்துக்கு முன்னதாக தேசியத் தலைமையில் இருந்து வந்த நிர்வாகிகள் சாதாரணமாக ஒரு கூட்டம் போட்டனர். அதில் தமிழக பாஜக உள்ளாட்சித் தேர்தலில் பெற்ற வாக்குகள், குடியுரிமை சட்டத்துக்கு தமிழகத்தில் இருக்கும் ஆதரவு, எதிர்ப்பு பற்றி சில நிமிடங்கள் விவாதித்தனர். அந்தக் கூட்டத்துக்கு தலைமை வகிக்க சீனியர் நிர்வாகிகள் இருந்தால் எழுந்து வந்து எங்களோடு உட்கார்ந்துகொள்ளுங்கள் என்று அவர்கள் அழைத்தனர். அப்போது முதல் வரிசையில் அமர்ந்திருந்த மூத்த நிர்வாகியும், மாநில துணைத் தலைவருமான குப்புராம் பெயரை சிலர் சொல்ல, ‘ஜி நீங்க வாங்க’ என்று அழைத்து தங்களுடன் உட்கார வைத்துக் கொண்டனர். இதுதான் நடந்தது. உடனே பாஜக தலைவராக குப்புராம் வாய்ப்பு என்று செய்திகள் வந்துவிட்டன.
நேற்று மாலை 4 மணியோடு தமிழகத்தில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்திய இந்த குழு, இன்று (ஜனவரி 6) புதுச்சேரியில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துகிறது. அதன் பின் ஆர்.எஸ்.எஸ். அமைப்போடு ஆலோசனை நடத்தும். பிறகு மூன்று பெயர்களை தலைமைக்குக் கொடுக்கும். அதில் இருந்து ஒருவர் தலைவர் ஆவார். இதுதான் கட்சியின் நடைமுறை” என்று விளக்கி முடித்தார்கள்.
