டெல்லி ஃபினிஷ்… பஞ்சாப் திரும்பும் கேஜ்ரிவால்…  ஆம் ஆத்மிக்குள் அடுத்த புயல்!

Published On:

| By Aara

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கும், அதன் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும் ஏற்பட்ட படு தோல்வி, அக்கட்சி ஆட்சியில் இருக்கும் பஞ்சாப்பிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

பஞ்சாப்பில் ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சிக்குள் இருக்கும்  உட்கட்சிப் பூசல்களைப் பயன்படுத்தி, டெல்லியைப் போலவே பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியையும் பஞ்சாய் பறக்க வைக்க  காங்கிரஸ் ஆபரேஷனைத் தொடங்கிவிட்டது. next punjab Kejriwal AAP storm

டெல்லி படுதோல்விக்குப் பிறகு  ஆம் ஆத்மி கட்சியின்  பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி டெல்லியில் நடத்தினார் அரவிந்த் கேஜ்ரிவால்.  இந்த கூட்டம்  டெல்லியில் உள்ள பஞ்சாப் முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமான கபூர்தலா இல்லத்தில் நடத்தப்பட்டது. வரும் 2027 இல் பஞ்சாப்பில் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்நிலையில் கேஜ்ரிவாலின் கவனம் பஞ்சாப் பக்கம் திரும்பியுள்ளது.

இதை சுட்டிக் காட்டியுள்ள பஞ்சாப் மாநில எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான காங்கிரஸ் தலைவர் பிரதாப் சிங் பஜ்வா,

30 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள்…

”டெல்லி தோல்வியால் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கலகலகத்துப் போயிருக்கிறது. பஞ்சாப் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை தாங்கள் ஆட்சியில் இருக்கும்  மாநிலத்தில் கூட நடத்தமுடியாமல் ஏன் டெல்லியில் நடத்த வேண்டும்? எங்களுடன் சுமார் 30 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தொடர்பில் உள்ளனர்” என்று அவர் குண்டைத் தூக்கிப் போட்டார்.

ஷிரோமணி அகாலிதள செய்தித் தொடர்பாளர் அர்ஷ்தீப் கிளர்,  “இப்போது பஞ்சாப் அரசாங்கத்தின் செலவில் ஆம் ஆத்மியின் கட்சி கூட்டங்களும் நடக்குமா? ஆம் ஆத்மியின் டெல்லி தலைமைதான் இன்னும் பஞ்சாப் அரசாங்கத்தை கட்டுப்படுத்துகிறது. மான் அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் மட்டுமே மீதமுள்ளதால், பஞ்சாபில் தனது சொந்த சிந்தனையில் முடிவுகளை எடுக்க வேண்டிய நேரம் இது. பஞ்சாப் மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இனியும் டெல்லியே ஆதிக்கம் செலுத்தினால், பஞ்சாபிலும் டெல்லி முடிவே அவர்களுக்கு கிடைக்கும்” என்று கூறியுள்ளார்.  

மறுக்கும் மான்…

இதற்கு மறுப்பு தெரிவித்த பஞ்சாப் முதல்வர் பகவத் மான்,  “டெல்லியில் காங்கிரஸுக்கு எத்தனை எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள் என்பதை பிரதாப் சிங் பஜ்வாவிடம் நான் கேட்கிறேன்.  டெல்லியில் நடந்த கூட்டத்தில் டெல்லி தேர்தலில் பணியாற்றியதற்காக கட்சியின் எம்எல்ஏக்களுக்கு கேஜ்ரிவால் நன்றி தெரிவித்தார்.  டெல்லியில் பணியாற்றிய அனுபவத்தை கட்சி பஞ்சாபில் பயன்படுத்தி, வரும் இரண்டு ஆண்டுகளில், பஞ்சாபை முழு நாடும் எதிர்பார்க்கும் ஒரு முன்மாதிரியாக மாற்றுவோம் என்று கூட்டத்தில்  முடிவு செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகள் பேசுவது போல் எதுவும் இல்லை”  என்றார் அவர்.

அதேநேரம் பஞ்சாப் ஆம் ஆத்மிக்குள் ஏற்கனவே இருந்த உட்கட்சிப் பூசல்கள் டெல்லி தோல்விக்குப் பின் வலிமையடையும் என்று தெரிகிறது.

கேஜ்ரிவாலின் ஏ.டி.எம். பஞ்சாப்?

ஆம் ஆத்மி கட்சியின்  ராஜ்யசபா எம்.பி. ஸ்வாதி மாலிவால்,  பஞ்சாப் முதல்வர் மான்  நிர்வாகத்தின் மீது ஊழல்  புகார்களை அடுக்கியுள்ளார்.  பஞ்சாப் ஆம் ஆத்மி ஆட்சியில் மணல் குவாரி ஊழல் தலைவிரித்தாடுகிறது. அரவிந்த்  கேஜ்ரிவால் பஞ்சாபை தனது தனிப்பட்ட ஏடிஎம் போல நடத்துகிறார். இதனால் பஞ்சாப் அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்” என்றும் குற்றம் சாட்டியுள்ளார் மாலிவால். next punjab Kejriwal AAP storm

மேலும், டெல்லி தோல்விக்குப் பின் அரவிந்த் கேஜ்ரிவால்  பஞ்சாப் பக்கம் தனது கவனத்தைத் திருப்பியுள்ளார்.  அவர் வரும் 2027 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் லூதியானாவில் போட்டியிட தீர்மானித்துள்ளார். கேஜ்ரிவால் போட்டியிட்டால் ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக அவர்தான் இருப்பார் என்பதால், இப்போதே மான் ஆதரவாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்துவிட்டனர்.,

அதைத்தான் காங்கிரஸ் தன்னுடன் 30 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் பேசிக் கொண்டிருப்பதாக சொல்கிறது.

சல்லி சல்லியாய் போன டெல்லி மாடல்!

ஆம் ஆத்மி கட்சி தனது தேர்தல் துருப்புச் சீட்டாக இருக்கும் என்று நம்பிய ‘டெல்லி மாடல்’ இப்போது சிதைந்து கிடக்கிறது, ஏற்கனவே பெண்களுக்கு மாதத்திற்கு ரூ.1,000 வழங்குவது போன்ற முக்கிய வாக்குறுதிகளை பஞ்சாபில் செயல்படுத்தவில்லை.

டெல்லியில் தன்னை பழிவாங்கிய ஆம் ஆத்மி மீது பஞ்சாப்பில் ரீவெஞ்ச் எடுத்து வருகிறது காங்கிரஸ். பஞ்சாப்பில் பாஜக அவ்வளவு வலுவாக இல்லையென்றாலும் டெல்லியில் இருந்தபடியே பஞ்சாப்பில் சில அட்டாக்குகளை நடத்த அமித் ஷாவும் ஆலோசித்து வருகிறார்.

விரைவில் பஞ்சாப் ஆம் ஆத்மியில் பரபரப்புகளுக்கு பஞ்சமிருக்காது என்கிறார்கள் அம்மாநில அரசியல் வடடாரத்தில். next punjab Kejriwal AAP storm

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share