இந்த ஆண்டு பாராளுமன்றம்… அடுத்த ஆண்டு சட்டமன்றம் : கமல்ஹாசன் சூளுரை!

Published On:

| By christopher

next mnm in assembly : kamalhassan

தான் 20 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வந்திருக்க வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். next mnm in assembly : kamalhassan

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தை 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி மதுரையில் தொடங்கினார். அடுத்து வந்த 2019 மக்களவைத் தேர்தலை சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சந்தித்தார்.

2021 சட்டமன்றத் தேர்தலில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தரின் ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்தார். வெற்றிபெற முடியவில்லை என்றாலும் கணிசமான வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பெற்றது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்தது. மக்களவை சீட் வழங்கப்படவில்லை என்றாலும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் 8ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நேற்று (பிப்ரவரி 21) நடைபெற்றது. அதில் கமல்ஹாசன் கலந்துகொண்டு கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.

தனக்கு எந்த மொழி வேண்டும் என்பது தமிழனுக்குத் தெரியாதா?

நிகழ்ச்சியில் தொண்டர்கள் முன்பு பேசிய கமல்ஹாசன், “நான் தோற்றுப் போன அரசியல்வாதி என்று சிலர் கூறுகிறார்கள். 20 ஆண்டுகளுக்கு முன்பே நான் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். அப்படி வராததை என் தோல்வியாக நினைக்கிறேன். அப்படி வந்திருந்தால் இன்று நான் பேசும் வார்த்தைகளும் இடமும் வேறாக இருந்திருக்கும்.

எனது அனுபவத்தின் அடிப்படையில் ரசிகர் வேறு, வாக்காளர் வேறு என தெரிந்து கொண்டேன். நான் முதலமைச்சராக வரவில்லை. முதலில் இருந்து மாற்றியமைக்க வந்துள்ளேன். கடைசி ஒரு வாக்காளர் இருக்கும் வரை நம் பணி தொடரும். இந்த வருடம் பாராளுமன்றத்தில் நமது குரல் ஒலிக்கப் போகிறது. அடுத்த வருடம் உங்கள் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கப் போகிறது” என்று தெரிவித்தார்.

இந்தியை திணிக்க முயன்றதை எதிர்த்தவர்கள் இன்று நம்முடன் இருந்துகொண்டு இருக்கிறார்கள். இந்தி திணிப்பை எதிர்த்து உயிரையே விட்டுள்ளனர். தனக்கு எந்த மொழி வேண்டும் என்பது தமிழனுக்குத் தெரியாதா? என்றும் கமல்ஹாசன் கேள்வி எழுப்பினார்.

வரும் ஜூலை மாதம் தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியாகும் நிலையில், அதற்கு தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக ஆதரவில் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாக உள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share