ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, தற்போது அக்கட்சியில் இருந்து விலகியிருக்கும் நிலையில், தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசன சட்டத்தின் 370வது பிரிவை கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு ரத்து செய்தது.
இதனை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பின்னர் விரைவில் இங்கு தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாடு கட்சித் தலைவர் பதவியில் இருந்து பரூக் அப்துல்லா விலகினார். “பொறுப்புகளை புதிய தலைமுறை ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது” என தன்னுடைய விலகலுக்கு காரணம் தெரிவித்திருந்தார்.

அவருடைய விலகல் குறித்து தேசிய மாநாடு கட்சி தன்னுடைய ட்விட்டரில் பக்கத்தில், “கட்சி விதிகளின்படி வரும் டிசம்பர் 5ஆம் தேதி தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும். அதுவரை பரூக் அப்துல்லா தலைவராக பொறுப்பு வகிப்பார்” என்று தெரிவித்திருந்தது.
பரூக் அப்துல்லா போட்டியிடாததால் கட்சியின் துணைத் தலைவராக இருக்கும் அவரது மகன் உமர் அப்துல்லா தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில், அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் தாம் போட்டியிட இருப்பதாக பரூக் அப்துல்லா, இன்று (நவம்பர் 19) தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். ”காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து திரும்ப கிடைக்கும்வரை தேர்தல்களில் போட்டியிட மாட்டேன்” என அவரது மகனும் கட்சியின் துணைத் தலைவருமான உமர் அப்துல்லா ஏற்கனவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்தே, அடுத்த தேர்தலில் பரூக் அப்துல்லா களமிறங்குகிறார் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
ஜெ.பிரகாஷ்
காதல் படப்பிடிப்பு தளத்தில் உணவு பரிமாறிய மம்முட்டி
பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரொக்கம் எவ்வளவு? ஸ்டாலின் முக்கிய முடிவு!