இலங்கைக்கு எதிரான நியூசிலாந்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்குள் நுழைய என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம். who will going to semifinal in cwc 2023
இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தொடங்கிய ஒருநாள் உலகக்கோப்பை போட்டி விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
ஏற்கெனவே அனைத்து போட்டியிலும் வென்றுள்ள இந்தியாவுடன், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன.
மூன்று அணிகளுக்கும் வாய்ப்பு!
இந்த நிலையில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இலங்கைக்கு எதிரான நேற்றைய லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் 99 சதவீதம் அரையிறுதிக்கான வாய்ப்பினை நியூசிலாந்து அணி உறுதி செய்துள்ளது.
அரையிறுதிக்கு தகுதிபெறுவதற்கான 4வது இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று அணிகளுக்கும் தற்போது வாய்ப்பு நிலவுகிறது.
நேற்றைய போட்டியில் நியூசிலாந்து வெற்றியால் பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் அரையிறுதி போட்டிக்கு முன்னேறுவதில் கடினமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும் இன்றும், நாளையும் நடைபெறும் ஆட்டத்தின் முடிவை வைத்தே அரையிறுதிக்கு இந்த மூன்று அணிகளில் எது செல்லும் என்பது உறுதியாகும்.
குறிப்பாக இன்று நடைபெறும் போட்டியில், தென்னாப்பிரிக்கா அணியை ஆப்கானிஸ்தானும், நாளை நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணியை பாகிஸ்தானும் அதிக விக்கெட்டுகள் அல்லது ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும்.
எனினும் புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து அணியை தாண்டி செல்வதற்கு, இந்த இரு அணிகளுக்கு முன் வைக்கப்பட்டுள்ள இலக்கு பெரும் சவாலாகவே பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்ல…
தற்போதைய நிலவரத்தின் படி நியூசிலாந்து அணியை (+0.743) முறியடிக்க, நாளை கொல்கத்தாவில் நடைபெறும் ஆட்டத்தில் நெட் ரன்ரேட் (NRR) ஆக +0.036ஐ கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 287 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை அணியை வெற்றி பெற வேண்டும்.
பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 300 ரன்களை எடுத்தால், அவர்கள் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 13 ரன்களுக்குள் ஆல் அவுட் செய்ய வேண்டும்.
400 ரன்களை எடுத்தால், இங்கிலாந்தை 112 ரன்களுக்குள் வெளியேற்ற வேண்டும்.
450 ரன்களை எடுத்தால், இங்கிலாந்தை 162 ரன்களுக்குள் வெளியேற்ற வேண்டும்.
500 ரன்களை குவித்தால் இங்கிலாந்தை 211 ரன்களுக்குள் வெளியேற்ற வேண்டும்.
அதேவேளையில் இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தால், பாகிஸ்தானுக்கான அரையிறுதி வாய்ப்பு அப்போதே பறிபோய்விடும் என்ற சூழல் நிலவுகிறது.
ஏனெனில் இங்கிலாந்தை அதிகபட்சமாக 100 ரன்களுக்குள் ஆல் அவுட் செய்து, அந்த ஸ்கோரை வெறும் 2.5 ஓவர்களில் எட்ட வேண்டும். அதாவது 283 பந்துகளை மீதம் வைத்து பாகிஸ்தான் அணி வெற்றி பெற வேண்டும்.
ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதி செல்ல…
நெட் ரன்ரேட் பாசிட்டிவாக உள்ள பாகிஸ்தானுக்கே இந்த நிலைமையென்றால், நெகட்டிவ் நெட் ரன்ரேட் (-0.338) கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதி செல்ல இமாலய வெற்றி பெற்றால் மட்டுமே சாத்தியப்படும்.
அதன்படி இன்று அகமதாபாத்தில் நடைபெறும் தனது கடைசி லீக் ஆட்டத்தில், தென்னாப்பிரிக்காவை 438 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும்.
இரு அணிகளுக்கும் இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அரையிறுதிக்கு செல்லப்போவது யார் என்பதில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. who will going to semifinal in cwc 2023
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
கோவையில் இன்று ஒரு பள்ளிக்கு மட்டும் விடுமுறை!
நிரம்பிய வைகை அணை: பாசனத்திற்காக 900 கன அடி நீர் திறப்பு!