England vs New Zealand: 2023 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (அக்டோபர் 5) துவங்கியது. இந்த தொடரின் முதல் போட்டியில், நடப்பு சாம்பியனான இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதின.
இந்த போட்டியில், முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம், பந்துவீச்சை தேர்வு செய்தார். கென் வில்லியம்சன், டிம் சவுதி, லாக்கி பெர்குசன், பென் ஸ்டோக்ஸ் போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லாமலேயே, 2 அணிகளும் களம் கண்டன.
அணியை மீட்ட ஜோ ரூட், பட்லர்
இந்த போட்டியில், இங்கிலாந்து அணி வீரர்கள் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்த போதிலும், நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் அவர்களின் விக்கெட்களை வீழ்த்திய வண்ணமே இருந்தனர்.
துவக்க ஆட்டக்காரர்கள், பேர்ஸ்டோ மற்றும் தாவித் மலான், முறையே 33 ரன்கள் மற்றும் 14 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஹாரி புரூக் மற்றும் மொயீன் அலியும், 25 ரன்கள் மற்றும் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

இவர்களை தொடர்ந்து 5வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் ஜோஸ் பட்லர், பொறுப்பாக விளையாடி அந்த விக்கெட்டிற்கு 70 ரன்களை சேர்த்தனர்.
பின் ஜோ ரூட் 70 ரன்களுக்கும், ஜோஸ் பட்லர் 43 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, பின் வந்தவர்களும் சொற்ப ரன்களுக்கு வெளியேறினர்.
இதை தொடர்ந்து, 50 ஓவர்கள் முடிவில், இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் சேர்த்தது. நியூசிலாந்து சார்பில் மாட் ஹென்றி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

கான்வே – ரச்சின் ஜோடியின் அதிரடி!
283 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணிக்கு, துவக்க ஆட்டக்காரர் வில் யங் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.
ஆனால், அதன் பின் ஜோடி சேர்ந்த தேவன் கான்வே – ரச்சின் ரவீந்திரா இணை தனது ருத்திர தாண்டவத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடி, இங்கிலாந்து பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தது. பந்துகளை பவுண்டரிகளுக்கு பறக்கவிட்ட இருவரும், சதம் கடந்து அசத்தினர்.
இதன் காரணமாக, 37வது ஒவரிலேயே இலக்கை எட்டிய நியூசிலாந்து அணி, 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இறுதிவரை ஆட்டமிழக்காமல், டேவன் கான்வே 152 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 123 ரன்களும் குவித்திருந்தனர்.
2வது விக்கெட்டிற்கு 273 ரன்கள் சேர்த்த இந்த ஜோடி, உலகக்கோப்பை போட்டிகளில் நியூசிலாந்து அணிக்காக அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற சாதனையையும் பெற்றுள்ளது.
Men's @cricketworldcup debut ✅
Maiden ODI ton ✅@aramco POTM ✅What a day for Rachin Ravindra 🌟#CWC23 #ENGvNZ pic.twitter.com/YHx5Kn1VHF
— ICC (@ICC) October 5, 2023
5 சிக்ஸ்கள், 11 பவுண்டரிகளுடன் 96 பந்துகளில் 123 ரன்கள் சேர்த்து, பந்துவீச்சில் ஒரு விக்கெட்டை கைப்பற்றி ரச்சின் ரவீந்திரா, இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
முரளி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இம்புட்டு பக்குவப்பட்ட பயலா நீயி? : அப்டேட் குமாரு!
செஞ்சீங்களா? பாமகவினரை சோஷியல் மீடியா மூலம் துரத்தும் டாக்டர் ராமதாஸ்
