ADVERTISEMENT

தூத்துக்குடி மறுசீரமைப்புக்காக புதிய திட்டம் : துவக்கி வைத்த கனிமொழி

Published On:

| By christopher

தூத்துக்குடி மாவட்டம் கடந்த மாதம் பெய்த அதி கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அதனை சீரமைக்கும் முயற்சியாக ‘தூத்துக்குடி இடுக்கண் களைவோம்’ என்ற புதிய இணையதளத்தை கனிமொழி எம்.பி இன்று (ஜனவரி 25) தொடங்கி வைத்துள்ளார்.

தென்மாவட்டங்களில் கடந்த மாதம் 17, 18ஆம் தேதிகளில் பெய்த அதிகனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் கடும் பாதிப்பினை சந்தித்தன.

ADVERTISEMENT

தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களில் இருந்த மக்கள் தங்கள் வீடுகள், வாகனங்கள், கால்நடைகள் என தங்களது உடைமைகளை இழந்து இன்னலுக்கு உள்ளாகினர். மேலும் சாலைகள், பாலங்கள் போன்றவையும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

இதுதொடர்பாக வெள்ளநிவாரண நிதி கோரி மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்தபோதும் இன்னும் வழங்கப்படவில்லை.

ADVERTISEMENT

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரு நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ‘இடுக்கண் களைவோம்’ என்ற புதிய இணையதளம் மாவட்ட நிர்வாகம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட கனிமொழி எம்.பி ‘இடுக்கண் களைவோம்’ என்ற புதிய இணையதளத்தின் தொடங்கி வைத்தார். மேலும் மழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடியை சேர்ந்த மாவு அரைத்து தொழில் செய்து வரும்‌ மகளிர் 7 பேருக்கு புதிய மாவு அரைக்கும் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.

இந்த இணையதளத்தின் மூலம் உதவி செய்ய விரும்புவோர் தாங்கள் செய்ய விரும்பும் உதவி, பகுதியை தேர்வு செய்து உதவி செய்யலாம். தாங்கள் விரும்பும் நன்கொடையையும் செலுத்தலாம். அதற்கான வங்கி கணக்கு விபரம், யுபிஐ எண் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் இந்த இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது.

இந்த இணையதளத்தில் தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்கள், மறுசீரமைப்பு தேவைப்படும் இடங்கள் போன்றவை படங்கள் மற்றும் வீடியோக்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்வி செலவை ஏற்றுக்கொள்வதற்கும், அங்கன்வாடி மற்றும் பள்ளிகளை தத்தெடுப்பதற்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கனிமொழி எம்.பி. தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “பெருமழை மற்றும் வெள்ளத்தால் கடும் பாதிப்புக்குள்ளான நம் தூத்துக்குடியின் மீட்சிக்குத் துணை நிற்போம். ஒன்றிணைந்து தூத்துக்குடியின் இடுக்கண் களைவோம்!” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற புதிய இணையதள தொடக்கவிழாவில், கனிமொழி எம்.பியுடன் ஆட்சியர் கோ.லட்சுமிபதி, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

கருடன் : கையில் கட்டுடன் ஒரே டேக்கில் டப்பிங்… சூரி அசத்தல்!

ED அதிகாரி அங்கித் திவாரி வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம் : விசாரணைக்கு தடை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share