நைஜீரியா நாட்டில் தற்போது எலிகளிடம் இருந்து பரவும் லாசா என்னும் காய்ச்சல் பரவி வருகிறது. இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு கடும் ரத்த இழப்பு ஏற்படும். இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு பொதுவாக மலேரியா காய்ச்சலால் ஏற்படும் அறிகுறிகள் தென்படும். இந்த அறிகுறிகள் மூன்று வாரங்கள் வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் லேசான அறிகுறிகளாக காய்ச்சல், மயக்கம், பலவீனம் அடைதல் மற்றும் தலைவலி ஆகியவை ஏற்படும்.
இந்தக் காய்ச்சல் மேஸ்டோமிஸ் என்ற ஒரு வகை எலிகளின் கழிவுகள் மூலம் பரவுகிறது. தற்போது நைஜீரியா நாட்டில் உள்ள 24 மாவட்டங்களில் குறைந்தது ஒருவருக்காவது இந்தக் காய்ச்சல் பாதிப்பு பதிவாகி உள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை 782 பேருக்கு லாசா காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தக் காய்ச்சலால் தற்போது வரை 155 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நைஜீரியா நோய் கட்டுப்பாட்டு மையம் மற்றும் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2021ஆம் ஆண்டில் இந்தக் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களில் 20.2 சதவிகிதம் பேர் உயிரிழந்தனர். ஆனால், இந்த வருடத்தில் தற்போது வரையில் 19.8 சதவிகிதம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த இறப்பு விகிதம் இந்த ஆண்டு மேலும் உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை 782 பேருக்கு இந்தக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 4939 பேருக்கு இந்த பாதிப்பு இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
