7 ஆண்டுகள்… மாணவர்களுக்காகத் திறக்கப்படும் பள்ளி கட்டடம்!

Published On:

| By Raj

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் கட்டடங்களில் உறுதித் தன்மையை ஆய்வு செய்து, ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களை அகற்றி புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும், தமிழகத்தின் பல்வேறு இடங்களின் நவீன வசதிகளுடன் கூடிய கட்டடங்கள் கட்டப்பட்டு திறந்து வைக்கப்படுகின்றன. New school building to open after 7 years

இந்த நிலையில், ஸ்ரீரங்கம் மேலூர் அய்யனார் பள்ளிக்காக மூலத்தோப்பில் கட்டப்பட்டு பயன்படுத்தப்படாமல் இருந்த கட்டடம், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவின்பேரில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு டாக்டர் ராஜன் பள்ளி மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.

ஸ்ரீரங்கம் மேலூரில் உள்ள அய்யனார் உயர்நிலைப்பள்ளி, 2014-ம் ஆண்டில் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து அப்போதைய அதிமுக ஆட்சியில், ஸ்ரீரங்கம் மூலத்தோப்பில் 2018-ம் ஆண்டு ரூ.1.6 கோடி மதிப்பில் அய்யனார் உயர்நிலைப் பள்ளிக்கென 21 வகுப்பறைகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்டப்பட்டு, திறக்கப்பட்டது. ஆனால், இந்தக் கட்டடம் மேலூர் பகுதியில் கட்டப்படாமல், அங்கிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியில் கட்டப்பட்டதால் மாணவர்களை அங்கு அனுப்ப பெற்றோர் மறுத்துவிட்டனர். New school building to open after 7 years

இதனால் கட்டி முடிக்கப்பட்டு 7 ஆண்டுகளாகியும் எவ்வித உபயோகமும் இன்றி புதிய பள்ளிக் கட்டடம் பூட்டியே கிடந்தது. அதிமுக ஆட்சி மாறி, திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகள், அரசியல்வாதிகளிடம் அப்பகுதி மக்கள் மனு கொடுத்தும் புதிய கட்டடம் திறப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.

இந்நிலையில், ஸ்ரீரங்கம் நகர நலச் சங்கத் தலைவர் சுரேஷ், துணைத் தலைவர் செல்வி குமரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை அண்மையில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

அதில், பயன்பாடு இல்லாமல் இருக்கும் அய்யனார் பள்ளி புதிய கட்டடத்தை உடனடியாக திறக்க வேண்டும். அங்கு, மேலூர் அய்யனார் பள்ளி மாணவர்கள் வராதபட்சத்தில், மாணவர் எண்ணிக்கையால் கடும் இட நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும், ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதி டாக்டர் ராஜன் நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி, புதிய கட்டடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி உத்தரவின்பேரில், ராஜன் பள்ளியைச் சேர்ந்த 6,7,8-ம் வகுப்பு மாணவர்கள் புதிய கட்டடத்தை பயன்படுத்திக் கொள்ள பள்ளிக்கல்வித் துறை  அனுமதி அளித்தது.

இதையடுத்து, உடனடியாக புதிய கட்டடத்தை திறந்த ராஜன் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் வகுப்பறைகளை தூய்மைப்படுத்தினர். ராஜன் பள்ளி ஆண்டுவிழா விரைவில் நடைபெறுவதால், ஆண்டுவிழா முடிந்தபிறகு, மார்ச் 24-ம் தேதி முதல் புதிய கட்டடத்துக்கு அப்பள்ளி மாணவர்கள் செல்வார்கள் என வட்டாரக் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். New school building to open after 7 years

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share