சபரிமலையில் வரும் 14-ம் தேதி மகர ஜோதி பூஜை நடைபெறுகிறது. இதையொட்டி சபரிமலையில் பக்தர்களுக்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சபரிமலை ஐயப்பன் கோயில், 2024-ம் ஆண்டுக்கான மண்டல பூஜைக்காக நவம்பர் 15-ம் தேதி திறக்கப்பட்டது. நவம்பர் 16-ம் தேதி கார்த்திகை முதல் நாள் முதல் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மண்டல பூஜைக்காக கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் 4.46 லட்சம் பக்தர்கள் கூடுதலாக சபரிமலை வந்துள்ளனர்.
மண்டல பூஜைக்கு பிறகு டிசம்பர் 26-ம் தேதி இரவு 11 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைக்கப்பட்டது. மீண்டும் மகர ஜோதி பூஜைக்காக டிசம்பர் 30-ம் தேதி அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டது.
இதனிடையே, மகர ஜோதி பூஜையையொட்டி சபரிமலைக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பதைக் கருத்தில்கொண்டு, ஆன்லைன் முன்பதிவு மற்றும் ஸ்பாட் புக்கிங் முறைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, காவல்துறையின் அறிவுறுத்தலின் பேரில் நேற்று (ஜனவரி 8) முதல் ஸ்பாட் புக்கிங் முறையில் நாளொன்றுக்கு 5,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும் ஆன்லைன் முன்பதிவு முறையில், ஜனவரி 12-ம் தேதி 60,000 பக்தர்களும், ஜனவரி 13-ம் தேதி 50,000 பக்தர்களும், ஜனவரி 14-ம் மகரஜோதி நாளில் 40,000 பக்தர்களும் அனுமதிக்கப்படுவர்.
அதனைத் தொடர்ந்து, ஜனவரி 15, 16 ஆகிய நாட்களில் மேற்கண்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
இந்த நிலையில், மகர ஜோதியையொட்டி பந்தள அரண்மனையிலிருந்து தங்க ஆபரணங்கள் அடங்கிய திருவாபரணப்பெட்டி ஊர்வலம், பந்தளத்திலிருந்து வரும் 12-ம் தேதி பகல் 1 மணியளவில் புறப்படுகிறது.
ஜனவரி 14-ம் தேதி அதிகாலை திருவாபரணப்பெட்டி நிலக்கல் கோயிலைச் சென்றடைகிறது. அதனைத்தொடர்ந்து, அன்று மாலை சபரிமலை சன்னிதானத்தைச் சென்றடைகிறது.
அன்று மாலை, ஐயப்ப சுவாமிக்கு பொன் ஆபரணம் சாத்தப்பட்டு தீபாராதனை காட்டப்படுவது வழக்கம். அப்போது பொன்னம்பலமேட்டில் ஜோதி ஒளிரும். ஐயப்ப சுவாமியே ஜோதி சொரூபமாகக் காட்சியளிப்பதாக மகரஜோதியை தரிசித்து பக்தர்கள் ஒவ்வோர் ஆண்டும் வழிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : பொங்கல் பரிசு வழங்கும் ஸ்டாலின் முதல் டெல்டா மாவட்டங்களில் கனமழை வரை!
கிச்சன் கீர்த்தனா : பெஸ்டோ – பனீர் பொங்கல்
பாஜகவில் பதவிச் சண்டை… ஏழு மணி நேர பஞ்சாயத்து!
மாப்ள இவரு தான் ஆனா… அப்டேட் குமாரு
அப்படி என்ன இருக்கு புதன் கிழமையில? டெல்லி தேர்தல் தேதியில் இப்படி ஒரு விசேஷம்!