பாம்பன் பாலப்பணிகள் நிறைவு:  ரயில் போக்குவரத்து எப்போது?

Published On:

| By christopher

Pamban bridge to resume from October 1

பாம்பனில் புதிய ரயில் பாலத்தில் செங்குத்து தூக்குப் பாலத்தை பொருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ராமேஸ்வரத்தில் இருந்து மண்டபத்துக்கு அக்டோபர் 1-ம் தேதி முதல் ரயில் போக்குவரத்து தொடங்க தெற்கு ரயில்வே நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ராமேஸ்வரம் தீவினை இந்தியாவுடன் இணைக்கும் பாம்பன் ரயில் பாலம் 1914-ம் ஆண்டு கட்டப்பட்டு நூற்றாண்டுகளை கடந்து விட்டதாலும், பாலத்தில் அடிக்கடி தொழில்நுட்பப் பிரச்சினைகள் மற்றும் பாலத்தில் அடிக்கடி விரிசல் விழுவதாலும், பழைய பாலம் அருகிலேயே புதிய ரயில் பாலம் கட்டுவதற்கான முடிவினை மத்திய ரயில்வே அமைச்சகம் கடந்த 2018-ம் ஆண்டு அறிவித்தது.

ADVERTISEMENT

முதற்கட்டமாக ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கன்னியாகுமரியில் 01.03.2019 அன்று நடந்த நிகழ்ச்சியில் காணொலி மூலம் பிரதமர் மோடி புதிய பாம்பன் பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து 11.08.2019 அன்று பாம்பனில் புதிய ரயில்வே பாலம் கட்டுவதற்காகப் பூமி பூஜையுடன் பணிகள் துவங்கின. 31.09.2021க்குள் புதிய பாம்பன் ரயில் பாலத்திற்கான பணிகள் முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ஆனால், பாம்பன் கடற்பகுதியில் அவ்வப்போது ஏற்படும் கடல் சீற்றம், புயல் உள்ளிட்ட வானிலை மாற்றம் மற்றும் கரோனா பரவலால் நிர்ணயிக்கப்பட்ட நாளில் முடிக்க முடியவில்லை. தொடர்ந்து, புதிய பாம்பன் பாலத்துக்கான திட்டச் செலவு ரூ.535 கோடியாகவும் அதிகரிக்கப்பட்டது.

முன்னதாக, பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு மற்றும் புதிய பாம்பன் ரயில் பாலப் பணிகளுக்காக 23.12.2023 அன்று முதல் ராமேஸ்வரத்துக்கு முற்றிலுமாக ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

ADVERTISEMENT

ராமேஸ்வரத்துக்கு வரும் ரயில் மண்டபம் மற்றும் ராமநாதபுரம் ரயில் நிலையங்கள் வரையிலும் இயக்கப்படுகிறது. இதனால் கடந்த 19 மாதங்களுக்கு மேலாக ராமேஸ்வரத்துக்கு ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாம்பன் சாலைப் பாலத்துக்கு இணையான உயரத்தில், புதிய ரயில் பாலத்தின் மையப்பகுதியில் கப்பல்கள் செல்ல 27 மீட்டர் உயரத்துக்கு ஹைட்ராலிக் லிஃப்ட் மூலம் இயங்கக் கூடிய செங்குத்து தூக்குப் பாலம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது.

இதைத்தொடர்ந்து தெற்கு ரயில்வே பாம்பன் பாலம் குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,

‘புதிய பாம்பன் ரயில் பாலம் வழியாக மண்டபம் – ராமேஸ்வரம் இடையே மீண்டும் ரயில் போக்குவரத்தை அக்டோபர் 1-ம் தேதி துவங்குவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும்.

இதற்காக, செப்டம்பர் 30-க்குள் பாம்பன் புதிய ரயில் பாலத்தில் அனைத்து வகையான பரிசோனைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

மேலும், டிசம்பர் 31-க்குள் ராமேஸ்வரம் வரையிலும் மின்சார ரயில்களை இயக்குவதற்கு தேவையான மின்சார இன்ஜின்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்’ என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – சாப்பிட்டதும் ஜூஸ் குடிப்பவரா நீங்கள்?

இதெல்லாம் ஒரு பிரச்சனையா? – அப்டேட் குமாரு

சமஸ்கிருதம் தெரிந்தால் தான் வேலையா? தொல்லியல் துறைக்கு இது தேவையா? விளாசிய சீமான்

மக்களுடன் முதல்வர்: கோட்டையில் ரிவ்யூ மீட்டிங்… கேள்விகளால் துளைத்தெடுத்த ஸ்டாலின்

Photo of author
christopher
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share