வடமேற்கு வங்கக் கடலில் இன்று (செப்டம்பர் 2) காலை ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வடமேற்கு வங்கக்கடலில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறக் கூடும்.
அப்படி வலுப்பெறும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடமேற்கு ஒடிசா நோக்கி நகர வாய்ப்புகள் உள்ளது. இதனால் ஒடிசா பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த வடமேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் ஜார்கண்ட், உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசத்திலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் மழை நிலவரம்
வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்தில் பெரிய அளவில் மழைக்கு வாய்ப்பில்லை என கூறப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழகத்தில் வரும் 7ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் வரும் 5 வரை அதிக பட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாகப் பதிவாகலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே செப்டம்பர் மாதம் நீண்ட கால சராசரியை விட 109 சதவிகிதம் அதிக மழை பொழிவு இருக்கும். வட கிழக்கு, கிழக்கு இந்தியாவின் சில பகுதிகள் கடைக்கோடி தென் தீபகற்ப பகுதிகளைத் தவிர்த்து நாடு முழுவதும் அதிக அளவில் மழைப்பொழிவு காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
