பண்ருட்டி கோட்டத்துக்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள டிஎஸ்பி, புதிய மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்று எஸ்ஐ மற்றும் இன்ஸ்பெக்டர்களிடம் அறிவுறுத்தியுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் கோட்டம் காவல் துறை டிஎஸ்பியாக இருந்து வந்த சபிபுல்லா ,1996இல் எஸ்ஐ-யாக பணியில் சேர்ந்து இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று தமிழகம் முழுவதும் பணி செய்து வருகிறார். டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்று நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் பணியாற்றியபோது மக்களோடு மக்களாக பழகி மக்கள் மனதில் இடம் பெற்றவர். கண்ணில் படும் ஏழை எளிய மக்களின் பசியைப் போக்கும் குணம் படைத்தவர். மத வேறுபாடுகளை கடந்து திருமணம் செய்து கொண்டவர்.
இந்த சூழலில் டிஎஸ்பி சபிபுல்லா, கடலூர் மாவட்டம் பண்ருட்டி கோட்டம் டிஎஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கான ஆணை வந்ததும், அப்பகுதியில் வாடகை காரில் டிராபிக் நெரிசல்களில் சென்று, ரயில்வே ஸ்டேஷனுக்கு போகும் வழியில் ஓட்டுநரை அனுப்பி, கஞ்சா வாங்க சொல்லியுள்ளார்.
ஓட்டுநரும், 500 ரூபாய்க்கு ஒரு பொட்டலம் வாங்கி வந்து கொடுத்துள்ளார். கஞ்சா வாங்கிய விவரங்களை ஓட்டுநரிடம் கேட்டு தெரிந்து கொண்ட டிஎஸ்பி தனது சொந்த ஊரான புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்றுவிட்டார்.
இந்நிலையில், இன்று(ஜூலை 5) காலை இராகு காலம் முன்பு 7.00 மணிக்கு பண்ருட்டி டிஎஸ்பியாக சபிபுல்லா பதவியேற்றுக் கொண்டார். தொடர்ந்து எஸ்ஐ மற்றும் இன்ஸ்பெக்டர்களிடம் பேசிய டிஎஸ்பி சபிபுல்லா, “இதற்கு முன்பு பண்ருட்டி எப்படி இருந்ததோ எனக்கு தெரியாது. இன்று முதல் இங்கு கஞ்சா நடமாட்டம் இருக்கக்கூடாது. கஞ்சாவை விற்பனை செய்கிறவர்கள் யார்? எந்தெந்த இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது? என்பது எனக்கு தெரியும். இருப்பினும், இந்த சம்பவத்தில் நீங்களே நடவடிக்கை எடுங்கள். பண்ருட்டியில் போக்குவரத்து நெரிசலை உடனடியாக சரி செய்யுங்கள்” என்று அறிவுறுத்தியுள்ளார்.
**வணங்காமுடி**
,