10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ‘மெகா’ ரிலீஃப்: அறிவியல், சமூக அறிவியலில் வருகிறது அதிரடி மாற்றம்! 2026 முதல் அமல்!

By Santhosh Raj Saravanan

|

Published on 11 Dec 2025, 8:16 PM

New CBSE rules for 10th board exams

“ஐயோ! சயின்ஸ் என்றாலே பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, பயாலஜி என மூன்றும் சேர்ந்து ஒரே தலையிடியாக இருக்கிறதே… சோஷியல் சயின்ஸ் புத்தகத்தைப் பார்த்தாலே மலைப்பா இருக்கே!” என்று புலம்பும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ஒரு சூப்பர் செய்தியைச் சொல்லியிருக்கிறது.

கல்வித்துறையில் தொடர்ந்து பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வரும் சிபிஎஸ்இ, தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பு (NCF – 2023) பரிந்துரையின்படி, 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முறையில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது.

ADVERTISEMENT

என்ன அந்த மாற்றம்?

இதுவரை 10ஆம் வகுப்பில் அறிவியல் (Science) என்பது ஒரே பாடமாகவும், சமூக அறிவியல் (Social Science) என்பது மற்றொரு தனிப் பாடமாகவும் இருந்தது. ஆனால், 2026ஆம் ஆண்டு முதல் இந்த நடைமுறை மாறப்போகிறது.

ADVERTISEMENT

சிபிஎஸ்இ சமர்ப்பித்துள்ள புதிய பரிந்துரையின்படி:

  • அறிவியல் பாடம்: இனி இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry), உயிரியல் (Biology) எனத் தனித்தனிப் பிரிவுகளாகப் பிரிக்கப்படவுள்ளது.
  • சமூக அறிவியல் பாடம்: வரலாறு (History), புவியியல் (Geography), அரசியல் அறிவியல் (Political Science) மற்றும் பொருளாதாரம் (Economics) எனத் தனித்தனியாகக் கருதப்படும்.

மாணவர்களுக்கு என்ன லாபம்?

ADVERTISEMENT

“ஒரே நாளில், ஒரே தேர்வில் அத்தனை பிரிவுகளையும் படித்து எழுதுவது மாணவர்களுக்குக் கடுமையான மன உளைச்சலையும், சுமையையும் தருகிறது” என்பதை உணர்ந்துதான் இந்த முடிவை சிபிஎஸ்இ எடுத்துள்ளது.

  • தனித்தனியாகப் பிரிப்பதன் மூலம், மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் ஆழமான அறிவைப் பெற முடியும்.
  • எதிர்காலத்தில் அவர்கள் 11ஆம் வகுப்பில் எந்தப் பிரிவைத் (Group) தேர்ந்தெடுக்கலாம் என்பதை முடிவு செய்யவும் இது உதவும். உதாரணமாக, இயற்பியலில் ஆர்வம் உள்ளவர் இன்ஜினியரிங் பக்கமும், உயிரியலில் ஆர்வம் உள்ளவர் மருத்துவம் பக்கமும் செல்லத் தெளிவு கிடைக்கும்.

தேர்வுகள் எப்படி நடக்கும்?

தற்போதுள்ள தகவலின்படி, பாடங்கள் பிரிக்கப்பட்டாலும், மதிப்பெண் முறை மற்றும் தேர்வு நேரம் ஆகியவற்றில் எத்தகைய மாற்றங்கள் இருக்கும் என்பது குறித்த முழுமையான வழிகாட்டுதல்களை சிபிஎஸ்இ விரைவில் வெளியிடும். அனேகமாக 2026ஆம் ஆண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்தப் புதிய முறை அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெற்றோர்களின் ரியாக்ஷன்:

“சுமை குறைந்தால் சரிதான். ஆனால், தனித்தனியாகப் படிக்கும்போது பாடத்திட்டம் இன்னும் விரிவாகிவிடுமோ?” என்ற அச்சமும் சில பெற்றோர்கள் மத்தியில் உள்ளது. ஆனால், கல்வித்துறையோ, “இது மாணவர்களின் சுமையைக் குறைத்து, புரிதலை மேம்படுத்தவே தவிர, சுமையை ஏற்ற அல்ல” என்று விளக்கம் அளித்துள்ளது.

சிபிஎஸ்இ-யின் இந்த ‘சர்ஜரி’ வெற்றி பெறுமா? மாணவர்கள் இதை எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Santhosh Raj Saravanan

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel