ராமேஸ்வரத்தை இணைக்கும் பாம்பன் கடலில் நடந்து வரும் புதிய ரயில் பாலத்தில் கர்டர்கள் பொருத்தும் பணி தீவிரம் அடைந்துள்ள நிலையில் பாம்பன் புதிய ரயில் பாலத்தில் அடுத்த ஆண்டு போக்குவரத்து தொடங்கும் என்று உயரதிகாரி ஒருவர் உறுதியளித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்துடன் ராமேஸ்வரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரயில் பாலம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. தற்போதுள்ள பாலம் அமைத்து 105 ஆண்டுகளை கடந்து மிகவும் பழமையான பாலம் ஆகிவிட்டதால் அந்த பாலத்தின் அருகிலேயே புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த பாலத்துக்காக கடலுக்குள் தூண்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்து விட்டன. மேலும் மண்டபம் பகுதியில் இருந்து தூண்கள் மீது இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணியும் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தீவிரமாக நடந்து வருகிறது. இதனிடையே புதிய ரயில் பாலத்தின் மையப்பகுதியில் அமையவுள்ள தூக்கு பாலத்தை பொருத்தும் பணியானது இன்னும் ஒரு மாதத்தில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பேசியுள்ள ரயில்வே துறை உயரதிகாரி ஒருவர், “பாம்பன் கடலில் புதிய ரயில் பாலத்துக்காக 99 இரும்பு கர்டர்கள் பொருத்தப்பட உள்ளன. ஒவ்வொரு இரும்பு கர்டரும் சுமார் 20 மீட்டர் நீளமும், ஒரு மீட்டர் அகலமும் நாலரை அடி உயரமும் கொண்டதாகும். கர்டரின் எடை 55 டன் இருக்கும். அதுபோல் மையப் பகுதியில் உள்ள புதிய தூக்கு பாலத்தை பொருத்தும் பணிகள் இன்னும் ஒரு மாதத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் விரைவில் முடிந்து அடுத்த ஆண்டு ரயில் போக்குவரத்து தொடங்கும்” என்று தெரிவித்துள்ளார்.
**-ராஜ்**
