விவசாயத்தை அழித்து விமான நிலையமா? சீமான் கண்டனம்!

Published On:

| By srinivasan

புதிய விமான நிலையம் அமைப்பதற்காக வேளாண் நிலங்களை அழிக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை விமான நிலையம்:

ADVERTISEMENT

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய விமான நிலையங்களில் சென்னை விமான நிலையமும் ஒன்றாகும். நாள்தோறும் 450 முதல் 600 விமானங்கள் வரை கையாளும் சென்னை விமான நிலையத்திற்கு 60,000 த்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர்.

வரும் ஆண்டுகளில் விமானங்கள் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என தமிழக அரசு, ஒன்றிய அரசிற்கு கோரிக்கை விடுத்து இருந்தது.

ADVERTISEMENT

பரந்தூரில் விமான நிலையம்:

இதனை தொடர்ந்து சென்னையின் இரண்டாவது பன்னாட்டு விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படவுள்ளதாகவும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்ததும் அதற்கான பணிகள் தொடங்கும் என மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.

ADVERTISEMENT

பரந்தூரில் அமையவிருக்கும் புதிய விமான நிலையத் திட்டத்தை செயல்படுத்துவது என்பது நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கானப் படிக்கட்டு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

சீமான் அறிக்கை:

இந்த நிலையில், புதிய விண்ணூர்தி நிலையம் அமைப்பதற்காக 3000 ஏக்கர் வேளாண் நிலங்களை அழிக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் வேளாண் நிலங்களை அழித்து, புதிய விமான நிலையம் அமைக்கத் தமிழ்நாடு அரசு அளித்த பரிந்துரையை ஏற்று, இந்திய மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

https://twitter.com/SeemanOfficial/status/1555094830711455744?s=20&t=P4VmW6v4q5DT42ewIA0PEw

அப்பகுதி மக்களின் கடும் எதிர்ப்பினையும் மீறி, 3000 ஏக்கர் விளைநிலங்களையும், 30க்கும் மேற்பட்ட நீர்நிலைகளையும், ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருப்புகளையும் அழித்து விமான நிலையம் அமைக்க முயல்வது வன்மையான கண்டனத்திற்குரியது.

அடுத்த 10 ஆண்டுகளுக்குப் பயன்படும் வகையில், பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தினை விரிவாக்கம் செய்யும் பணிகள் தற்போது வேகமாக நடந்து வரும் நிலையில், அவசர அவசரமாகப் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான தேவை என்ன வந்தது? என்பதை இந்த நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் மக்களுக்கு விளக்க வேண்டும்.

உண்ண உணவு தரும் விளைநிலங்களையும், குடிப்பதற்கு நீர் தரும் நீர்நிலைகளையும், மக்கள் வாழும் வீடுகளையும் அழித்தொழித்து அதன்மீது ஓடுபாதைகளையும், தொழிற்சாலைகளையும், வணிக வளாகங்களையும் அமைப்பதை வளர்ச்சி என்று அரசே கூறுவதை எப்படி ஏற்க முடியும்?

நீர்நிலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள தனியார் கட்டிடங்களை இடிப்பதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் தமிழ்நாடு அரசு, விமான நிலையம் அமைப்பதற்குத் தானே நீர்நிலைகளை அழிக்க முயல்வது எவ்வகையில் நியாயமாகும்?

மக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப சாலைகள், இரயில் பாதைகள், விமான நிலையங்கள் ஆகியவற்றை விரிவாக்கம் செய்வதோ, புதிதாக அமைப்பதோ அவசியம்தான் என்றாலும், அவை பயன்பாடு இல்லாத தரிசு நிலங்களில் மேற்கொள்ள வேண்டுமே தவிர விளைநிலங்களையும், வீட்டுமனைகளையும், நீர்நிலைகளையும் அழித்து உருவாக்கப்படுவதாக இருக்கக்கூடாது.

கிராமப்புறங்களில் பாமர மக்களிடம் விளைநிலங்களையும், வீடுகளையும் வலிந்து அபகரிக்கும் அரசுகள், மாநகரங்களில் பெரும் செல்வந்தர்களின் வீடுகளையோ, பெருமுதலாளிகளின் சொத்துக்களையோ அழித்து, பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை எடுத்து அதன்மீது விமான நிலையங்களை அமைக்கும் துணிவிருக்கிறதா?

செயற்கையாக உருவாக்கப்பட்ட வணிக வளாகங்களை விட, உயிர்கள் வாழ உணவளிக்கும் விளைநிலங்கள் மதிப்பில் குறைந்தவை என்ற முடிவுக்கு அரசு வந்தது எப்படி? என்ற கேள்விக்கு ஆட்சியாளர்கள் என்ன பதில் கூறப்போகிறார்கள்.

ஆகவே, பரந்தூரில் வேளாண் நிலங்களை அழித்துப் புதிய விமான நிலையம் அமைக்கும் முடிவைக் கைவிட்டு, மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் விளைநிலங்களோ, நீர்நிலைகளோ, வீடுகளோ இல்லாத இடத்தில் அமைக்க வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என சீமான் தெரிவித்துள்ளார்.

க.சீனிவாசன்

நாகரிமான வார்த்தையே நம்முடைய வளர்ச்சி: ஓ.பன்னீர்செல்வம்

Photo of author
srinivasan
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share