நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் தீவிரமடைந்த நிலையில் தடை நீக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலி மற்றும் அவரது அமைச்சரவையில் உள்ளவர்கள் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதற்கு எதிரான கருத்துகளை பல தரப்பினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர். பொதுமக்களின் எதிர்ப்பு கருத்துகளை ஒடுக்கும் நோக்கில் அந்நாட்டு அரசு பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் உள்ளிட்ட 26 சமூக ஊடகங்களுக்கு தடை விதித்தது.
இதனால் அந்நாட்டு மக்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாகினர். இதையடுத்து நேற்று (செப்டம்பர் -8) நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்தது. தலைநகர் காத்மண்டுவில் GEN Z என்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி, துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 300 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்நிலையில் நெருக்கடியான சூழலில் நேற்று இரவு அந்நாட்டின் மத்திய அமைச்சரவை கூட்டம் கூடியது. கூட்டத்திற்கு பிறகு சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக நேபாள அரசு அறிவித்தது. அந்நாட்டின் மத்திய தொலைத்தொடர்பு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிருத்வி சுப்பா குருங் அதை அறிவித்தார். மேலும் அரசுக்கு ஒத்துழைப்பு தந்து இளைஞர்கள் போராட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து போராட்டம் கை விடப்பட்டுள்ளது.
