புதிய கல்விக் கொள்கையை ஏற்காத மாநிலங்களின் பள்ளிக்கல்வி துறைக்கு மத்திய அரசு போதுமான நிதி வழங்க மறுக்கிறது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
ஸ்டாலினின் விமர்சனத்திற்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் “ தமிழ் மொழிக்கு நீங்கள் எதிரானவர் இல்லை என்றால், புதிய கல்விக் கொள்கையைத் தமிழ்நாட்டில் நீங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் “ என்று பதிலளித்திருந்தார்.
இந்தச் சூழ்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தனது அமெரிக்கச் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, இன்று சென்னை திரும்பியவுடன், சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம், தமிழகத்திற்குத் தேவையான நிதி கிடைக்க வேண்டும் என்றால், புதிய கல்விக் கொள்கையைத் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் உங்களுக்குப் பதில் கூறியிருந்தார். இந்த பெரும் நிதி தேவையைக் குறித்து பிரதமரிடம் நீங்கள் பேசுவீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு, ”புதிய கல்விக் கொள்கை ஏற்றுக்கொள்வது குறித்து பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களும் மத்திய அரசாங்கத்திடம் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்கள். இது குறித்து, நானும் பிரதமரைச் சந்தித்து புதிய கல்விக்கொள்கை பற்றின தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை வலியுறுத்த இருக்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.
மேலும், சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்ட பணிகளுக்குத் தேவையான நிதிகளைக் கடனாகப் பெறுவதற்கு, தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு உதவியுள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார். இதைப் பற்றியும் மத்திய அரசிடம் பேசுவீர்களா என்ற கேள்விக்கு, “இது குறித்தும் பிரதமரிடம் நான் வலியுறுத்தவிருக்கிறேன்” என்று ஸ்டாலின் பதிலளித்தார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
தொடர்ந்து உயரும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?
