நெல்லை ஜாகிர் உசேன் கொலை : டிஜிபி, சிபிஐ பதிலளிக்க உத்தரவு!

Published On:

| By Kavi

நெல்லை ஓய்வு பெற்ற எஸ்ஐ கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கில் தமிழக டிஜிபி மற்றும் சிபிஐ பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. Nellai Zakir Hussain murder

நெல்லையை சேர்ந்த 60 வயதான முன்னாள் எஸ்.ஐ ஜாகிர் உசேன் கடந்த மார்ச் 18 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் நெல்லை இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் மற்றும் உதவி ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் ஜாகிர் உசேன் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்த முகமது மைதீன் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்தார்.

அதில், “ஜாகிர் உசேன் வக்ஃப் போர்டுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக தொடர்ச்சியாக போராடி வந்தார். கொலையாளிகளால் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் ஏற்கனவே வீடியோ வெளியிட்டுள்ளார்.

நெல்லை காவல் ஆய்வாளர் மற்றும் காவல் உதவி ஆணையர் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளார். எனினும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

காவல்துறை பாதுகாப்பு கோரியும் பாதுகாப்பு அளிக்காதது முன்கூட்டியே அவரது கொலை திட்டமிட்டு காவல்துறை அதிகாரிகளின் உதவியோடு செய்யப்பட்டதா என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது.

தற்போதைய முதல்வர் சென்னை மாநகராட்சி மேயராக இருந்தபோது அவருக்கான பாதுகாப்பு அலுவலராக இருந்த ஜாகிர் உசேன் கொலை, சட்டம் ஒழுங்கு மீதான நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

தமிழகத்தில் இதுபோன்று  ஒவ்வொரு நாளும் கொலைகள் வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு பகுதிகளில் அரங்கேறுகின்றன. இதற்கெல்லாம் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததே காரணம். எனவே ஜாகிர் உசேன் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றுவதோடு அவரது குடும்பத்துக்கு போதிய பாதுகாப்பை வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில்
கோரியிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் நிஷா பானு மற்றும் ஸ்ரீமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கின் தற்போதைய நிலை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக டிஜிபிக்கும், இந்த மனு தொடர்பாக பதிலளிக்க சிபிஐக்கும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர். Nellai Zakir Hussain murder

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share