சென்னை – நெல்லை வந்தே பாரத் எப்போது?

Published On:

| By Monisha

nellai to chennai vanthe bharat

தென் மாவட்ட மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு மற்றும் கோரிக்கையாக இருந்த திருநெல்வேலி – சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவை வருகின்ற செப்டம்பர் 24ஆம் தேதி துவங்கப்பட இருக்கிறது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தென் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆகியோர் தங்களின் வேலை வாய்ப்பிற்காக சென்னையில் தங்கியிருந்து பணிபுரிந்து வருகிறார்கள் .

அவர்கள் ஏதேனும் திருவிழா அல்லது பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து நெல்லைக்கோ அல்லது நெல்லையிலிருந்து சென்னைக்கோ செல்ல வேண்டுமேயானால் ஆம்னி தனியார் பேருந்துகளில் 10 மணி நேரம் பயணம் செய்ய வேண்டிய உள்ளதாகவும், அரசு பேருந்துகளில் பயணம் செய்தால் 12 முதல் 13 மணி நேரம் வரை பயண நேரம் ஆவதாகவும் தெரிவித்து வந்தார்கள் .

மேலும் ரயில்களில் பயணம் செய்தால் 10 முதல் 11 மணி நேரம் ஆகும் என்றும் கூறப்படுகிறது.

நெல்லை – சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவை

ஏற்கனவே சென்னை டூ மைசூரூ, சென்னை டூ கோயம்புத்தூர் என இரண்டு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தமிழகத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன.

இதையடுத்து 3வது ரயிலாக 20645 / 20646 என்ற எண் கொண்ட சென்னை டூ நெல்லை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இது தெற்கு ரயில்வேயின் கீழ் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

திருநெல்வேலி – சென்னை இடையே தென் மாவட்ட மக்களின் வெகு நாள் கனவான வந்தே பாரத் ரயில் இயக்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வருகிற 24-ம் தேதி முதல் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரயில் கால அட்டவணைகள் என்ன ?

நெல்லை – சென்னை இடையே வந்தே பாரத் ரயில் தினமும் காலை 6:00 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு மதியம் 2 மணிக்கு சென்னை சென்றடையும்.

மறு மார்க்கத்தில் மதியம் 2.40 மணிக்கு புறப்பட்டு இரவு 10 .40 மணிக்கு நெல்லைக்கு வந்தடையும்.

மணிக்கு 90 முதல் 110 கிமீ வேகத்தில் இந்த ரயிலானது இயக்க உள்ளதாக கூறப்படுகிறது .

மேலும் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி ஆகிய இடங்களில் வந்தே பாரத் நின்று செல்லும். மேலும் நிறுத்தங்கள் குறித்த அறிவிப்புகள் இனி வரக் கூடிய நாட்களில் வெளியாகும்.

பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொளி காட்சி வாயிலாக நெல்லை சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையினை வருகின்ற செப்டம்பர் 24ஆம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கி வைக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன .

இதற்காக நெல்லை ரயில் நிலையத்தை இன்று ஆய்வு செய்த தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் ஆனந்த்,

”இந்த 9 ரயில்களில், தென்னக ரயில்வே சார்பில் நெல்லை-சென்னை ரயில் ஒன்று, அதேபோல், காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரையிலான ரயில் மற்றும் சென்னையிலிருந்து விஜயவாடா வரையிலான ரயில் என மொத்தம் 3 ரயில்கள் வருகிறது.

டிக்கெட் விலை குறித்து இதுவரை அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. ரயில்வே வாரியம் அறிப்பின்படி, டிக்கெட் விலை அறிவிக்கப்படும். தற்போது வரும் ரயிலில் 8 பெட்டிகள் இருக்கும். கூட்டம் அதிகமாக இருந்தால், பெட்டிகளை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது” என்று கூறினார்.

இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தென் மாவட்ட மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சரவணன்

மகளிர் இடஒதுக்கீடு அமல்படுத்த 8 ஆண்டுகளா?: சோனியா காந்தி

காவிரி நீர்: கர்நாடக அரசும் உச்சநீதிமன்றத்தில் மனு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share